யாழியின் கைரேகை படிந்த கல்

நேற்றைத் தாங்கிய
குறிப்புகளில்
இன்று
எழுதிய பின்னும்
தெரியாத நாளைக்கே
மிச்சமாய்
நிறைய பக்கங்கள்                                                             
முன்னாள் குடியரசுத் தலைவர் அ.அப்துல்கலாம் அவர்களைக் கவர்ந்த கவிதை இது. எழுதியவர் யாழி. அவர் எழுதி வெளியிட்டுள்ள தொகுப்பு 'என் கைரேகை படிந்த கல்'. சிற்றிதழ்கள் வழி வெகுவாக அறிப்பட்டவர். குறுஞ்செய்தியிலும் பயணிப்பவர்.

நாய்கள் குரைப்பது இயல்பு. புது மனிதரைக் கண்டால் குரைப்பது அதிகரிக்கும். குரைப்பொலிகள் கேட்டால் பயமே மேலெழும். குரைப்பைக் கட்டுப்படுத்துவது இயலாது. 'சமரசம்' கவிதையை குரைப்பொலிகளை வைத்து எழுதியுள்ளார்.
ரொட்டித் துண்டு போட்டு
பழக்கப்படுத்துவதா?
கல்லெறிந்து பயமுறுத்துவதா?
புரியவில்லை
இப்போது
எல்லா இடங்களிலும் குரைப்பொலிகள்                       
ரொட்டித் துண்டு போட்டு பழக்கப்படுத்துவதை விட கல்லெறிந்து பயமுறுத்துவதே சுலபம். பயமுறுத்தினாலே திரும்பிப் பாராமல் ஓடும். 'குரைப்பொலிகள்'  என்பது குறியீடாகக் கையாளப்பட்டுள்ளது.

மனிதர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தது ஒரு காலம். இன்று தனிக்குடும்பத்தையே மனிதர் விரும்புகின்றனர். கூட்டாக வாழ்ந்தாலும் பல்வேறு காரணங்களால் பிரிந்தே வாழ வேண்டிய கட்டாய நிலை. விடுதியில் பிள்ளைகள், காப்பகத்தில் பெற்றோர்கள், அலுவலகத்தில் தம்பதியர்
வெறுமைகளை
குடியமர்த்தியபடி வீடுகளே                                                   'இற்றைத் திங்களில்                                              என்கிறார்.
வீடு என்பது மனிதர்கள் வசிக்க வேண்டும்.  காட்சிப் பொருளாக இருக்கக் கூடாது. பொருளாதார மயத்தால் குடும்பம் சிதைவதைக் குறிப்பிடுகிறார்.

தீண்டாமை ஒரு தொடர் வியாதியாகவே சமூகத்தில் இருக்கிறது. உலகம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும் விஞ்ஞானம் எத்தகைய வளர்ச்சி பெற்றிருந்தாலும் தீண்டாமையைக் கைவிடுவதே இல்லை மக்கள். ஆனால் தேவைக்காக தீண்டாமையைத் தளர்த்திக் கொள்கின்றனர்.
சாக்கடையின் தூர்களுக்காக
வீட்டின் உட்பூச்சுக்காக
புடைத்தெடுக்கப்படும் அரிசிக்காக
தைக்கப்படும் செருப்புகளுக்காக
சில நேரங்களில்
தள்ளி வைக்கப்படுகிறது
தீண்டாமையும்                                                            
தீண்டாமையைத் தள்ளி வைப்பதைச் 'சந்தர்ப்பவாதம்'  என சாடுகிறார். 'சுய நலவாதிகள்' என விமரிசிக்கிறார். தீண்டாமைக்கு எதிராக தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார். 'வர்ணம்'  கவிதையிலும் தாழ்த்தப்பட்டவர்கள் சார்பாகவே எழுதியுள்ளார்.
சமபலத்துடன்
இருந்த போதும்
இரண்டாம் நகர்த்தலுக்கே
தள்ளி வைக்கப்படுகிறது
சதுரங்கத்திலும்
கருப்புக் காய்கள்                                                             
'கருப்புக் காய்'  என்பது தாழ்த்தப்பட்டவர்களைக் குறிக்கிறது. சதுரங்கத்தை வைத்து அருமையாக விளையாடியுள்ளார்.

வளையத்திற்குள் புகுந்து
வெளிவர சிரமப்படுகிறது
நாட்கள்..                                                                     
எனத் தொடங்கும் 'தக்க வைத்தல்' கழைத் கூத்தாடியின் சிரமத்தை, சங்கடத்தை பேசியுள்ளது. பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளார். தட்டில் விழும் நாணயங்களே வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்கிறார். வேடிக்கைப் பார்ப்பவர்கள் கைத் தட்டலுடன் கலைந்து போவதைக் காணும் போது வருத்தமே மேலிடுகிறது. 'அட்சய பாத்திரம்' கவிதையிலும் நாணயத்துக்காகக் காத்திருக்கும் தட்டையே காட்டியுள்ளார். 'நாணயம்'  மூலமும் ஒரு பாடகர் தட்டு ஏந்தியிருப்பதையே பாடியுள்ளார். எல்லோர் கையிலும் தட்டு இருக்கிறது. இடமே வேறு படுகிறது. தட்டில் விழுவதை வைத்தே வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது.

திணித்தல் என்பது தொடர்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகள் மீது திணிக்கின்றனர். இருப்பவர்கள் இல்லாதவர்கள் மீது திணிக்கிறனர். திணித்தல் மூலம் ஆதிக்கமே நீடிக்கிறது.
திணிப்பை
எதிர்க்கும் பொருட்டுக்
கடித்து விடுகிறது
செருப்பு கூட
தன்னை உணர்த்தி
சில நேரங்களில்                                                               
என்கிறார். செருப்புக்கு இருக்கும் 'எதிர்ப்பு'  உணர்வு கூட மனிதர்களுக்கு இல்லை என்கிறார். 'எதிர்ப்பு'  உணர்வைத் தூண்டியுள்ளார்.

சாதகமாய்
பயன்படுத்தி கொள்கின்றன
காக்கையின் கூட்டை
சங்கீதத்தில்
சாதித்ததாய்க்
காட்டிக் கொள்ளும்
குயில்கள்                                                                      
என்னும் 'தொனி'  குறிப்பிடத்தக்கக் கவிதையாகும். ஆரியம் ஆக்கிரமிப்புச் செய்ததை அழகாக, அழுத்தமாகக் கூறியுள்ளார். கவிஞரின் 'தொனி' பாராட்டுக்குரியது.

பிறர் மீது கல்லெறிந்தால் நம் மீதும் பிறர் கல்லெறியக் கூடும் என்னும் கருத்தை வெளிப்படுத்தியுள்ளது 'எதிர் வினை'.  எப்போதோ, எவர் மீதோ வீசப்பட்ட கல் தற்போது தன் மீது வீசப்பட்டுள்ளது என 'எதிர் வினை'யாற்றியுள்ளார்.

ஆழ் கிணற்றின்
நீர்ப் பரப்பில் விழுந்த
உடைந்த பானையின் சில்லாய்
பயணிக்கிறது
எனதிந்த வாழ்க்கை
அறியப்பட்ட
முடிவொன்றை
முன் வைத்து                                                                    
என்னும் 'பயணம்'  வாழ்க்கையைப் பற்றியதாகும். வாழ்க்கை ஒரு பயணம் என்பர்.  எந்த பயணத்துக்கும் முடிவுண்டு என்பது போல் வாழ்க்கையும் முடியும் என்கிறார். அதனாலே 'பயணம்'  என்றும் தலைப்பும் வைத்துள்ளார். ஒப்புமையும் நன்று.

மன்னிப்பு என்பது மிகப் பெரிய சொல். மன்னிப்பதற்கு மிகப் பெரிய குணம் வேண்டும். மன்னிப்பவனை மகான் என்பர். மன்னிக்கப்பட்டவன் மனிதன் ஆவான் என்பர். 'தண்டனை'யில் கவி்ஞன் சிந்தனை வேறாக உள்ளது. மன்னிப்புத் தவறுகளையே உண்டாக்குகிறது என்கிறார்.
என்னைத்
தக்க வைத்துக் கொள்ள
கொடுத்தபடி இருக்கிறாய்
மன்னிப்புகளை
தவறுகளின்
மொத்தமாகிக் கொண்டிருக்கிறேன்
நான்                                                                   
மன்னிப்பதால் மீண்டும் மீண்டும் தவறு செய்து கொண்டேயிருப்பதாக ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார். அதற்காக வருந்தியுள்ளார். மன்னிப்பை விட தண்டனையே மேல் என்கிறார்.

சாப்பிட்டவுடன் பசி அடங்கி விடும். செரித்தலுகளுக்கு பின் மீண்டும் பசி தொடங்கி விடும். பசி என்பதற்காக கூடுதலாக சாப்பிட முடியாது. 'காமமும்'  அவ்வாறே. தொடர்ந்து கொண்டே இருக்கும். 'வேட்டையில் பசியும் காமமும் தொடரும் என்கிறார்.

மண் புழு மீனுக்கு உணவு. மீன் மனிதனுக்கு உணவு. மனிதன் மண்ணுக்கு உணவு. மண் மண் புழுவுக்கு உணவு. இயற்கைப் படைப்பில் ஒன்றையொன்று விழுங்கவே முயல்கிறது. உண்டே வாழ்கிறது. அதற்காகவே காத்திருக்கிறது.
எப்பொழுது சிக்கும்
பொழுதுகளைத்
தின்று கொண்டிருக்கும்
மீன்கள்
தக்கையின் மீது
கண் வைத்து
காத்திருக்கிறேன்
நான்                                                                       
காத்திருப்பதை 'கால விரயம்'  என்கிறார். நேரத்தை வீணாக்காமல் உழைக்க வலியுறுத்துகிறார். புழுவைத் தின்னாமல் பொழுதுகளை மீன்கள் தின்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 'தக்கையின் மீது நான்கு கண்கள்' என்னும் சா.கந்தசாமியின் சிறுகதையை நினைவூட்டியது. 'பருவம்' கவிதையிலும் 'கால அவகாசம்'  குறித்து பேசியுள்ளார். காலத்தைக் கணக்கிட்டுச் செலவிட வேண்டும் என்கிறார்.

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகியவற்றை விட மோசமானது பதவியாசை. 'பதவி' ஆசையில் அரசியல்வாதிகள் அநியாயச் செயல்களிலேயே ஈடுபடுகின்றனர்.
ஏணிகளின் கால் முறித்து
தனக்கான
நாற்காலி ஒன்றை
செய்து கொள்கிறார்கள்                                                            
என 'பதவி'யில் விமரிசித்துள்ளர். 'பதவி' வெறியர்களைச் சாடியுள்ளார்.

சாதிகள் இல்லயைடி பாப்பா என்றார் பாரதியார். சாதி இரண்டேயோழிய வேறில்லை என்றார் ஒளவையார். ஆனால் ஆயிரம் சாதிகள் நாட்டில் உண்டு. ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கிறது. ஒன்றையொன்று 'ஆதிக்கம்' செலுத்துகிறது.  'பொது மயானம்' என்கிறார்கள். 'தனி சுடுகாடு'  இருக்கிறது. 'சமத்துவபுரம்'  என்கிறார்கள். சாதியே முன்னிற்கிறது. 'பாரதம்' கவிதையில் இவைகளை பொய் என்கிறார். எங்கும் சாதியே என்று விளம்பரப்படுத்தியுள்ளார், வேதனைப் பட்டுள்ளார். பெரும்பாலான கவிதைகள் 'நான்' ஐ வைத்தே எழுதப்பட்டுள்ளன. அநேகமானவை 'நான்' இலேயே முடிகின்றன. 'நான்' என்னும் தலைப்பில் ஒரு கவிதை
அரிதாரப் பூச்சில்
நம்பிக்கை உண்டு
உங்களுக்கு எனில்
அசிங்கமாய்த்தான் தெரிவேன்
எப்போதும்
நான்                                                                    
என்பதாகும். வேடதரிகளை வெளிச்சப்படுத்தியுள்ளார் வேடம் கூடாது என்கிறார். காமாலைக் கண்ணுக்குக் காண்பதெல்லாம் மஞ்சளாகவே தெரியும் என்பதைப் போலுள்ளது. நல்ல கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் நல்ல கவிதையாகாது. ஏன்  'எனில்' எனில் என்று வரும் போது ஒரே வாக்கிமாய் ஆகி விடுகிறது. 'நான் நானாக' என்னும் தலைப்பிலும் ஒரு கவிதை. அவருக்குள்ளிருக்கும் 'நல்லவரை' அடையாளப்படுத்துகிறது.

'என் கை ரேகை படிந்த கல்' என்னும் இத்தொகுப்பு மூலம் தன் கவிதைப் பிரவேசத்தை அற்புதமாக நிகழ்த்தியுள்ளார் கவிஞர் யாழி. சமூகப் பிரச்சனைகளை அவருக்கான மொழி நடையில் அழுத்தமாக பேசியுள்ளார் இயல்புக்கும் இருண்மைக்கும் இடைப்பட்டதாக உள்ளது கவி்ஞரின் கவிதை மொழி. ஒரு கவிதையின் வெற்றி என்பது அதன் வெளிப்பாட்டிலேயே முக்கியமாக உள்ளது. இத்தொகுப்பிலுள்ளவை வெளிப்பாட்டில் சிறப்பாக அமைந்துள்ளன.  வாசகர்களுடன் நேரடியாக, நெருக்கமாக உரையாடும் தன்மைப் பெற்று தனித்து விளங்குகின்றன. கவிஞர் 'யாழி'யையும் தனித்து அடையாளப்படுத்துகின்றன. இலக்கிய உலகில் விரைவாகப் பேசப்படுவார் என்னும் நம்பிக்கையளிக்கிறது. அகத்தை முன் வைத்தே கவிஞர் கவிதைகள் எழுதி இருந்தாலும் பெரும்பாலானவை 'புறம்' பேசியுள்ளன. சமூகத்தைச் சீர்திருத்த முயன்றுள்ளன. அநியாயங்களை அகற்ற முயன்றுள்ளன. 'என் கை ரேகை படிந்த கல்'இல் யாழியின் கையெழுத்தில் விளைந்த கவிதைகள் மட்டுமல்ல அவர் உள்ளத்தில் இருந்து விளைந்தவையாகவும் உள்ளன.

ஒரு திரியின் நுனியில்
கழுவேற்றப் படுகிறது
இருள்                                                               
என்கிறது 'வெளிச்சம்' கவிதை.
ஒரு கவிதைத் தொகுப்பால்
வெளியேற்றப்படுகிறது
மன இருள்                                                              
என்று 'வெளிச்சம்' பாய்ச்சியுள்ளார். வெளிச்சம் தொடர வாழ்த்துக்கள்..

வெளியீடு: தகிதா பதிப்பகம் 4-833 தீபம் பூங்கா கே. வடமுதுரை கோவை  641017

கீரனூர் ஜாகிர் ராஜாவின் பெருநகரக் குறிப்புகள்

சமீபகால சிறுகதையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் கீரனூர் ஜாகீர் ராஜா . செம்பருத்தி பூத்த வீடு, மீன் காரத் தெர என்னும் சிறுகதைத் தொகுதிகளைத் தொடர்ந்து அவர் தந்திருப்பது 'பெருநகரக் குறிப்புகள்'.
சினிமாவில் வாய்ப்புக் கேட்டு காத்திருக்கும் ஒருவனிடம் கதை கேட்கும் கசப்பான அனுபவத்தை விவரிக்கிறது முதல் கதை 'பெருநகரக் குறிப்புகள்'. கதை கேட்கவும் ஒரு எல்லை இருக்கிறது இல்லையா? பகலும் இரவுமாய் பரிட்சார்த்தம் செய்து ஒருவனைத் தற்கொலைக்குத் தூண்டுவது எவ்விதத்தில் நியாயம் என வினாவெழுப்பி கதைக் கூறுபவர்களைக் குட்டியுள்ளார். சினிமா தொடர்பானதே 'பரகத் நிஷா' என்னும் இரண்டாம் கதையும். சினிமா ஆசையில் சோரம் போன இளம் பெண்ணின் நிலையைச் சொல்லியுள்ளார். சினிமா மோகத்தில் சென்னை ஓடிப்போன ஒரு மகனுக்கு கடிதம் மூலம் தந்தைத் திட்டுவதாக, அறிவுரைப்பதாக அமைந்த கதை 'மழை '. கடித வடிவிலேயே கதை அமைக்கப்பட்டுள்ளது.
'ஒரு காலத்தில் சினிமாவில் கொடிகட்டிப்பிறந்தவர்கள் இன்று அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை' என்று எடுத்துக்காட்டையும் கூறியுள்ளார். சினிமாக்காரனின் மறுபுறத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது 'நிழலின் சாயலும் சாயலின் நிழலும்' என்னும் கதை. சினிமா காரர்கள் பெண்களைத் தவறாக பயன்படுத்திக் கொள்வதையும் சுரண்டுவதையும் இக்கதைக்கூறுகிறது. சினிமா தொடர்பானதாலும் 'அறைச் சுவர்கள் சிரிக்கின்றன' வித்தியாசமானது. இருவருக்குமான உரையாடலாக, விவாதமாக கதையை அழகாக நகர்த்திச் சென்றுள்ளார். அறிவாளித்தமான சினிமா, வியபார ரீதியான சினிமா என இரு தரப்பும் வாதத்தைச் சரியாக வைத்துள்ளது. தீவிரமாக பேசியவனும் வியாபார ரீதியாக வாதிட்டவன் வாங்கித் தரும் மதுவிற்கு அடிமையாவது குறிப்பிடத்தக்கது. சிரிப்பது அறைச்சுவர்கள் மட்டுமல்ல,வாசகர்களும்தான். 'உள்வெளி' கதையும் இதன் தொடர்ச்சியாகவே, அதே சாயலிலேயே உள்ளது. ஓர் இருபது ரூபாய்க்காக அறிவையே அடமானம் வைப்பதாக கதை முடிகிறது. 'சீனுவும் நானும் மற்றும் ஜியும்' கதையும் சினிமாக் கனவில் சிக்கியிருக்கும் இளைஞர்களைப் பற்றியதே. சினிமா எவ்வளவு மோசமானது, சினிமா எவ்வளவு கீழ்த்தரமானது என கதைகளின் வாயிலாக உணர்த்தியுள்ளார். சினிமா மோகத்தில் சீரழிந்தவர்களே அதிகம் என விளக்குகின்றன. சினிமா என்னும் மாயப்பிம்பத்தை உடைத்து இன்றைய இளைஞர்கக்கு எதார்த்த வழியில் செல்ல வலியுறுத்துகிறார்.
புவ்வா என்னும் பெண் கல்யாணத் தரகராக இருக்கிறாள். கல்யாணமாகாதவள். ஆனாலும் 'தலாக்' கொடுத்துவிட்டு வேறு பெண் பார்க்க் கோருபவர்களை வெறுக்கிறாள். மறாக அவன் மனைவிக்கு இரண்டாம் 'நிக்காஹ்' செய்து முடிக்கிறார். பெண்களை திருமணம் செய்து கொண்டு வெளிநாடு சொல்வது 'புவ்வா'வுக்கு பிடிக்கவில்லை. அதனாலே தன் காரியதரிசியான ஹைருன்னுக்கும் திருமணம் முடிப்பில் தாமதமாகிறது. ஒரு தரகராயிருந்தாலும் பணத்தைக் குறியாக் கொண்டு செயல்படாத பாத்திரமாக 'புவ்வா*' சித்தரிக்கப்பட்டுள்ளது சிறப்பு. இக்கதை 'குடமுருட்டி ஆற்றின் கரையில்'.
''இந்த கதையின் மையம் நானா அல்லது லவ்கீஹாவா என்பதில் உங்களுக்கு குழப்பம் இருக்கக்கூடாது'' எனத் தொடங்கும் கதை 'லவ்கீஹா'. ஒரு கதையை எப்படித் தொடங்க வேண்டும் என்னும் மரபை உடைத்த கதை. லவ்கீஹாவைப் பற்றியே பேசினாலும் இறுதியில் லவ்கீஹாவைத் தேடாதீர்கள் என்கிறார். அவருக்குள்ளும் ஒரு லவ்கீஹா இருக்கிறாள் என்று ஒரு தேடுதலையும் உண்டாக்கியுள்ளார்.
தொழுகைக்கு போகும் வழியில் பன்றிகள் மேய்வதால் பன்றி வளர்க்கும் 'சக்கிலி மந்தை'யை காலி செய்ய பள்ளி வாசலில் மகா சபைக் கூட்டி முடிவெடுக்கிறார் நாணா. ஆனால் பேரன் சக்கிலி மந்தைக்கு சார்பாக செயல்படுகிறான். ''மந்தைய எங்களுக்குன்னு ஒதுக்கிக் குடுக்கற வரைக்கும் நாங்க யாரும் எடுப்பு க்ககூஸ் அளற்துக்கு வரமாட்டோம்'' என்னும் எதிர் குரலை ஒலிக்கச் செய்து சக்கிலிக்களுக்காக ஆதரவளித்துள்ளார். முடிவை வெளிப்படையாக்காமல் வாசகர் யூகத்துக்கே விட்டுள்ளார். முஸ்லிம் மத்ததுக்கு எதிரான மதப்பெரியவருக்கு எதிரான மற்றொரு கதை 'பாரம்'. பறையனான ஞானசேகரனையும் சக்கிலியான சுந்தரனையும் நண்பர் எங்கிறார். பேஷ் இமாம் அஜ்ரத்தின் அநியாயங்களை வெளிப்படையாக்குகிறார். அவர் போலி முகத்தை அடையாளப் படுத்துகிறார். வீட்டை விட்டு வெளியேறி பதினான்கு வருடத்திற்கு பின் வந்து ஒரு கைம்பெண்ணை மணக்க சம்மதிக்கிறார். அப்பெண் மவுத்தாகி விட்ட பேஷ் இமாமின் நான்காம் மனைவி. புரட்சிக் கரமான, புதுமையான எண்ணங்களை வெளிப்படுத்தி புதியதொரு சமூகத்துக்கு வித்திட்டுள்ளார்.
''அம்மையும் அச்சனும் ரெண்டு பெண்குட்டிகளும்'' என்னும் கதை ஓர் இயல்பான கதை. பயணத்தை முன் வைத் பயணிக்கிறது. 'இதற்கும் மேல் நீங்கள் இந்தக் கதையில் சுவாரஸ்யத்தை எதிர்பார்த்தால் பாலன் கே.வின் தூங்கிக் கொண்டிருந்த தொடையில் குதரோட்டத்தின் கை ஊர்ந்து ஊர்ந்து புற்றடைய முயற்சித்ததைத்தான் சொல்ல வேண்டும்'' என அவரே கதையின் சுவாரஸ்யத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதுவே இக்கதையின் சுவாரஸ்யம்.
இன்னொரு சாதாரன கதை 'வர்ணதேவதை'. திரவியம் கடையில் வேலை செய்து வந்த பெண் ஆரோக்கியம் கடைக்குச் சென்று விட்டதால் வியாபாரம் நசிந்து விட்டது என்கிறது.
கதையை ஒரு நேர்க் கோட்டு தண்மையில்லாமல் யுத்திகளைக் கையாண்டுக் கதைக் கூறுவதில் கீரனூர் ஜாகீர் ராஜா வல்லராயுள்ளார். 'வெம்மை' யைத் தேதி வாரியாகக் கதையைக் கூறியுள்ளார். துபாய்ச் சென்று துயரப்படும் ஓர் இளைஞ்னின் நிலையைக் கூறுகிறது. துபாய்க்குச் செல்ல நேர்வதையும் துபாயிலிருந்து திரும்பும் கட்டாயத்தையும் விவரிக்கிறது.
பெண்ணியம் தொடர்பான கதை 'சிதைவுகளிலிருந்து'. மும்தாஜை அப்துல்லா மணக்கிறான். முதல் இரவில் வரவு செலவு கணக்குப் போடுகிறான். விடிந்ததும் தங்கைக்கு நிச்சயம் செய்து ஒரு சில நாள்களில் திருமணத்தையும் முடித்து பின் மீதத் தொகைக் கொண்டு வெளிநாடு செலகிறான். கொளுந்தனுக்கு அண்ணி மீது ஓர் இச்சை. மாமியாரும் தவறில்லை என்கிறாள். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திரும்பி வந்ததும் மனைவியைக் கண்டு கொள்ளவில்லை. அவர்களை அவள் மலம் தின்னும் பன்றிகளாக கேவலமாக பார்க்கிறாள். ஒரு பெண்ணின் உணர்வை நுட்பமாக வெளிப் படுத்தியுள்ளார்.
முஸ்லிம் மதத்துக்குள் நடக்கும் ஒரு சடங்கை பரிகாசம் செய்வதான ஒரு கதை 'வெள்ளைச் சேவல்'. 'வெள்ளைச் சேவல் பழி தந்து தான் நல்ல நல்லகாரியங்கள் எல்லாம் கொத்தயத்தார் வகையறாவில் நடக்கும்' என்கிறார். பழியா? பலியா? வெள்ளைச் சேவலுக்காக எல;லா இடங்களிலும் தேடி அலைகிறான். நண்பரின் உதவியால் நான்கு வெள்ளைச் சேவல்கள் கிடைக்கின்றன. கேட்பதை விட அதிகம் கொடுத்து வாங்கி விருந்தும் நடைப் பெருகிற்து. வெள்ளைச் சேவல் அல்ல கருப்பே என்று நிறம் வெளுத்த இறக்கைக் காட்டிக் கொடுத்து விடுகிற்து. 'இதுக்குப் பரிகாரமாக வெள்ளாடு ஒண்ணு வாங்கி அறுத்து பாத்திஹா குடுத்திடுவோம்' என அஜரத் கூறுவதாக கதைமுடிகிறது. தின்பதற்கே காரணம் தேடுகிறார்கள் என பகடிச் செய்துள்ளார். 'இயல்பு'ம் ஒரு விமரிசனமாகவே உள்ளது. அப்பாவுக்கு நாளை அனுவஷ்டிக்க ஒரு பித்த மானிடனுக்கு உணவளிக்க ஊரெங்கும் தேடுகிறான். இறுதியில் அவனே தின்று விட்டு வீடு திரும்புகிறான். 'நீங்க சாப்பாடு குடுக்கப் போனவுடன் பெரியவர் ஒருத்தர் பசிக்கிதுன்னுட்டு வந்தாருங்க.பாக்க மாமா மாதிரியே இருந்தார்.ஒங்களுக்கு எடுத்து வச்ச சாப்பட்ட அவருக்குப் போட்டுடேன்,,,, கொஞ்சம் பொறுங்க,,, வடிக்கிறேன்' என்கிறாள் மனைவி. வீட்டுக்கு வருபவர்களை உபசரித்தாலே போதும் என்கிறது.
மாரியும் பாத்திமாவும் நல்ல தோழிகள். மாரி நோன்பிருக்க விரும்புகிறாள். பாத்திமா மாரியுடன் கோவிலுக்குச் சென்று விபூதி வைத்துக் கொள்கிறாள். அறிந்த பாத்திமாவின் தாயார் சூடு வைக்கிறாள். பாத்திமாவும் சந்திக்க வேண்டாம் என்று மாரியுடம் கூறுகிறாள். தன் பாட்டன் தன்னைக் கண்டிக்காததைக் கண்டு வியக்கிறாள். முஸ்லிம்கள் மதத்தில் தீவிரமாக உள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார். இக்கதையின் தலைப்பு 'அடையாளம்'.
பள்ளிவாசலில் யாசகம் செய்து வாழும் ஒரு குடும்பத்தின் வறுமையை விவரிக்கிறது 'சுவடுகள்'. யாசகத்தக்கு துணைக்கழைத்துச் செல்கிறார். மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக மகளை அழைத்துச் செல்கிறார். யாசகிக்கும் இடத்திலேயே மகள் ருதுவாகிறாள். ஒரு முறை கற்பழிக்கவும் முயற்சி நடைபெறுகிறது. ஆயினும் 'தொழில்'ஜ விடாமல் மகனை அழைத்துச் செல்கிறார். நெகிழச்சியை ஏற்படுத்துகிறார்.
''ஆண்டுக்கு ஒரு முறை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வீடு மாறுதல் ஒரு சடங்காகிப் போனது'' எனத் தொடங்கும் 'காட்டு வண்டுகளின் வீடு'. வாடகை வீடுகளில் வசிப்போர் குறித்து பேசுகிறது.வீட்டு உரிமையாளர்களுடான அனுபவத்தையும் சொல்கிறது. இறுதியில் 'என்றாவது ஒரு நாள் அவன் சொந்த வீடு கட்டி விடுவான் ன போலிருக்கிறது. அப்போதும் கூட வாழக்கை மிச்சமிருந்தால் அவனுடைய சொந்த வீட்டின் அவுட் ஹவுஸை குறைந்த வாடகைக்குப் பிடித்துக் கொண்டு குடியேற வேண்டும் போலிருக்கிறது.என் மகன் அங்கே மரங்களையும் அணில்களையும் தவிட்டுக் குருவிகளையும் காட்டு வண்டினங்களையும் அனுமதிக்க வேண்டும்' என நம்பிக்கையும் ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார். வாடகை வீட்டில் வசிப்பவரின் மன உணவை பிரதிபலித்துள்ளது. மகன் சொந்த வீடு கட்டினாலும் மனம் வாடகை வீட்டுக்கே விழைகிறது என்பது சுட்டத்தக்கது.
'பெருநகரக் குறிப்புகள்' என்னும் இத்தொகுப்பில் மூன்று வகையான தளங்கள் உள்ளன. ஒன்று திரைப்படம் தொடர்பானது. இரண்டு முஸ்லிம் மக்கள் குறித்தானது. மூன்று பொதுவானது. திரைப் படம் தொடர்பானவைகளில் அதன் மாயத்திரையை விலக்கிக் காட்டுகிறார். நிஜம் எதுவென புரியச் செய்கிறார். முஸ்லிம் மதம் குறித்தானவைகளில் மதத்துக்குள் உள்ள மத தீவிரவாதத்தை வெளிச்சப்படுத்துகிறார். மதவாதிகளுக்குளே மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். மதத்துக்குள் ஆதிக்கம் செலுத்துபவர்களை எதிர்த்துள்ளார்.மதத்தின் பெயரால் ஒடுக்கப் படுபவர்களுக்கு ஆதரவளித்துள்ளார். மதத்துக்குள் சிக்கியிருக்கும் நல்ல உள்ளங்களையும் காட்டத்தவறவில்லை.முஸ்லிம் மதத்தவராயிருந்தாலும் மத்ததை விமரிசித்திருக்கும் துணிவு பாராட்டுக்குரியது. மதங்களைத் தாண்டி ஒரு மனித நேயமே தொரகுப்பெங்கும் விரவி கிடக்கிறது.
கதைகளை ஆசிரியர் கூற்றாகவோ அல்லது பாத்திரம் பேசுவதாகவோ கதையை நெருடலின்றிச் சொல்லும் கலை ஆசிரியருக்கு நன்கு கை வரப் பெற்றுள்ளது. உரையாடல்களுக்கு என்று தனிக் கவனம் ஏதும் செலுத்தாமல் கதையைச் சொல்வதன் மூலமே உரையாடலையும் நிகழ்த்தியுள்ளார். கதையைக் கட்டமைப்பதிலும் விதவிதமான யுத்திகளைக் கையாண்டுள்ளார். புதிய கருப்பொருள்களைச் சிறுகதை உலகத்திற்குள் கொண்டு வந்து ஓர் ஆரோக்கியத்திற்கு வழியமைத்து தனதான முத்திரையும் பதித்து வருகிறார். சிறுகதைத் தொகுப்புகளில் எப்போதுதாவது ஒரு நல்ல தொகுப்பை வாசிக்க நேர்ந்து விடுவது உண்டு எடுத்துக்காட்டு 'பெருநகரக்குறிப்புகள்.'
வெளியீடு
அனன்யா 8 /37 பி.ஏ.ஒய்.நகர் புதுக்கோட்டை சாலை,தஞ்சை-613005.
விலை - ரூ 75.00

பாரதி வசந்தனின் 'தலை நிமிர்வு'

மனிதர்க்குக் கொள்கை அவசியம். கொள்கையற்ற மனிதர் வாழ்தல் கூடாது. கொள்கையுடன் வாழ்வதாகக் கூறும் அரசியல் வாதிகள் குழப்ப வாதிகளாகவே உள்ளனர். கட்சித் தலைவர்களும் அவ்வாறே உள்ளனர். `கவிஞர்களிலும் கொள்கை மாற்றுபவர்கள் உண்டு. மாறுபவர்கள் உண்டு. ஒரு கவிஞராக கொள்கை மாறாமல், கொள்கை விடாமல் எழுதி வருபவர், இயங்கி வருபவர் கவிஞர் பாரதி வசந்தன். "முப்பது ஆண்டு கால கவிதை வாழ்வின் வெள்ளை அறிக்கை"என்னும் அறிவிப்புடன் கவிஞர் தந்திருக்கும் தொகுப்பு 'தலை நிமிர்வு'. வெள்ளை அறிக்கை என்பது உண்மை நிலையை நேர்மையுடன் அரசு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியதாகும். ஒரு கவிஞர் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருப்பது அவரின் நேர்மையையும் நிலையையும் துணிவையும் காட்டுகிறது.
இலக்கியம் மக்கள் விடுதலைக்கே -என
எழுத்தில் கலகம் செய்பவன் நான்
இலக்கியம் போன்றே வாழ்ந்திருப்பேன்-ஆம்
இதுவே எனது பிரகடனம்
கவிஞர் பாரதி வசந்தனின் பிரகடனம், இலட்சியம், கொள்கை இது. 'எழுது கோல் யுத்தம்' தலைப்பிலான கவிதையின் மூலம் தன்னிலையைத் தெரிவித்துத் தன் பயணத்தைத் தொடர்ந்துள்ளார். தன் தடத்திலிருந்து மாறாமல் எழுதியுள்ளார். எழுது கோல் யுத்தம் என்னும் தலைப்பே கவிஞர் நியாயமான போராட்டத்திற்காக களத்தில் நிற்பது தெரிகிறது.
எழுத்து என்பது ஒன்றாயினும் எழுதப் படும் விதத்தில், எதை எழுதுகிறாம், ஏன் எழுதுகிறோம், எவருக்காக எழுதுகிறோம் என்பதை பொருத்து எழுத்து மாறுபடுகிறது. வேறுபடுகிறது. அடையாளப்படுகிறது. எழுத்தின் வழி பொது சமூகத்தைப் பேசி வந்தனர். உயர் குடியை எழுத ஒரு வட்டம் உருவானது. ஒவ்வொரு வகை வருணத்திற்கும் ஒவ்வொரு வகை எழுத்து உள்ளது போல் ஐந்தாவதாக உள்ள பஞ்சமனுக்கு உரித்தான எழுத்தே தலித் எழுத்து என்கிறார். தலித் எழுத்தைக் கலக எழுத்து என்றும் அடையாளப் படுத்தியுள்ளார். கவிஞ்ரின் எழுத்தும் கலக எழுத்தாகவே உள்ளது. 'ஆதி எழுத்து'உம் தலித் எழுத்தே என்கிறார்.
ஈழம் மலர வேண்டும் என்பது உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனின் விருப்பம். இலட்சியம். 'புலிகள் தேசம்'கவிதையில் கவிஞர் தன் கனவை வெளிப் படுத்தியுள்ளார்,
புலரட்டும் தமிழ்ப் பொழுது
பொலியட்டும் தமிழ்க் கனவு
மலரட்டும் தமிழர் ஈழம்-புகழ்
மணக்கட்டும் புலிகள் தேசம்
13.01.1983 அன்று எழுதப் பட்டுள்ளது. இன்று வரை எண்ணம் ஈடேற வில்லை. இலட்சியம் நிறைவேற வில்லை. ஆயினும் போராட்டம் தொடர்கிறது. தொடர்ந்து எராளக் கவிதைகள் எழுதியுள்ளார். 2009 ஆம் ஆண்டிலும் எழுதியுள்ளார். இலனங்கையும் இந்தியாவும்'கை'கோர்த்து ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவித்தது. இருப்பவர்களை இம்சித்தது. பலர் உயிர் விட்டனர்.
களம் கண்டு எதிரிகளைக்
களை எடுக்கவும்
அவர்கள் கதை முடிக்கவும்
பிறந்தவர்கள் நீங்கள்
வெறும் சிதையாகிப் போவதை
எப்படியடா எம் சிந்தைப் பொறுக்கும்                  
என வெகுண்டெழுந்து 'இறுதியாக ஓர் இரங்கல் கவிதை' எழுதியுள்ளார். இதுவே இரங்கல் கவிதையாக இருக்க வேண்டும் என்பதே தமிழ் உணர்வுள்ளவர்களின் முடிவு.
தமிழ் மொழிக்கு ஏராளச் சிறப்புகள் உண்டு. அளவற்ற பெருமைகள் உண்டு. ஒரு மொழிக்கு உயிர் விட்டுள்ளனர் என்றால் அது தமிழ் மொழியாகவே இருக்கும். ஒரு மொழிக்காக போராட்டம் நடந்துள்ளது என்றால் அது தமிழ் மொழி என்றால் மிகையில்லை. மொழிப் போராட்டத்தில் உயிர் விட்டவர்கள் என தாளமுத்து நடராஜன் என பரவலாக பேசுகின்றனர் .எழுதுகின்றனர் . இது தவறு என்கிரார். காரணம் முதல் பலி நடராசன் என்றும் தாளமுத்து இரண்டாம் பலி என்றும் குறிப்பிட்டு நடராசன் தாளமுத்து என்றே கூற வேண்டும் என்கிறார். நடராசன் தலித் ஆனாலும் தாளமுத்து நாடரசன் ஆனாலும்
மொழிப் போராளியாகவே இருவரையும் பார்க்க வேண்டும் என்கிறார். இருவருக்கும் சாதி கிடையாது என்பதுடன் அவர்களைத்'தமிழின் அடையாளம், தமிழரின் இன மானம்'என்றும் போற்றுகிறார். கவி்ஞர் ஒரு'தமிழ் நெருப்பு'ஐ மூட்டியுள்ளார். 'சுய நல சூழ்ச்சி'க்கு எதிராக எழுதப்பட்டுள்ளது. வரலாற்று நிகழ்வை மாற்றக் கூடாது என்கிறார். ஒரு தலித்தாக இருந்தும் கவிஞர் தமிழ் மொழியையே முன்னிறுத்தியுள்ளார். 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'என்றார் பாரதி தாசன் . ஒரு படி மேலே சென்று'தமிழ் எங்கள் உயிருக்கும் மேல்'என்கிறார் பாரதி வசந்தன். தமிழைப் பல்வேறு விதமாக வருணித்துள்ளார். பாரதி தாசனை மறுத்து இருந்தாலும் தமிழின் மீதான பற்றையே வெளிப் படுத்தியுள்ளார். 'தமிழ் பாது காப்பு இயக்க விழா'வில் திரு.தொல்.திருமா வளவனும் டாக்டர் ராமதாசும் இணைந்திருந்ததைக் கண்டு
சாதி நம்மைப் பிரித்தது
தமிழ் இன்று இணைத்தது
தமிழ் வாழ்க
என்று எழுதி தமிழையே முன்னிறுத்தியுள்ளார். தமிழே முக்கியம் என்கிறார். 'ஆதிக்கம்' கவிதையில் சாதிகளற்ற தமிழ்ச் சமு்கம் தொடங்கு என்று அறிவுறுத்துகிறார்.
'பற்றுப் பாட்டு'கவிதையில் மலையாளிக்கு மொழிப் பற்றும் தெலுங்கனுக்கு இனப் பற்றும் வங்காளிக்கு நாட்டுப் பற்றும் உள்ளது போல் தமிழனுக்கு சினிமா பற்றே உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். சினிமா பற்றினால் சீரழிந்தே போய் விட்டான் என்கிறார். தமிழன் கொண்ட சினிமா பற்றே சினிமாக் காரர்களை ஆட்சியில் அமர்த்தி விட்டது என்கிறார். அமர வைத்தவனையே ஆட்டிப் படைக்கிறது. ஆட்சிச் செய்கிறது. 
சேரி என்றால் பள்ளர், பறையர், சக்கிலியர் வாழும் பகுதி என அடையாளப் படுத்தப் பட்டுள்ளது. மற்ற உயர் சாதியினர் என அறிவித்துக் கொண்டு மேற்படி மூன்று வகையினரை ஒதுக்கி வைத்ததுடன் அவர்கள் வாழும் பகுதியையும் புறக்கணித்து வருகின்றனர்.
சேரி எனில்
மக்கள் சேர்ந்து வாழ்தலென
கவிஞர் உணர்த்துகிறார். சேரி என்னும் பெயரில் மனிதர்களைப் பிரித்து வைத்திருப்பதைக் கண்டித்துள்ளார். சேரிகள் எத்தனை தமிழ் இலக்கியத்தில் இருந்துள்ளன என பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். தலித்தியருக்கு ஆதரவாக எழுதப் பட்டிருந்தாலும் தலித்தியரையும் விட வில்லை. தலித்தாக பிறந்தவன் தலித்தாக வாழ வேண்டும் என்கிறார். தலித் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ள வேண்டும் என்கிறார். வேலையும் வசதியும் வந்தவுடன் தலித் என்னும் அடையாளத்தை மறப்பவர்களை'துரோகி'என்று அடையாளப்படுத்தியுள்ளார் . பறையர் தாழ்த்தப் பட்டவர் என்னும் எண்ணம் இன்று பரவலாக உள்ளது. ஒரு கருத்துப் பரப்பப் பட்டுள்ளது. 'பறையன் - மனிதன் - தமிழன்'கவிதை மூலம் அக் கருத்தை உடைத்துள்ளார். மாட்டுக் கறி தின்பவன் பறையன் என்றால் ஆதி சிவனும் பறையன் என்கிறார். நாட்டுப் புறக் கதையொன்றில் பதிவாயிருக்கும் இத் தகவலைக் கண்டறிந்து கூறியுள்ளார். ஒரு புதுக் கருத்தைப் பரப்பியுள்ளார் . எல்லோரையும் மனிதன் என்றே அழைக்க வேண்டும் என்கிறார்.
'பறையன்'என்பதற்கு சென்னைப் பல்கலைக் கழகம்
'தமிழன் ஒழிந்த பிற இனத்தான்'
என அகராதியில் பொருள் தந்துள்ளது. இதனால் கோபமுற்று கவிஞர் எழுதிய கவிதை'தமிழ்க் குடி'. சொன்னவனைச் செருப்பால் அடி என்கிறார்.  
தமிழர்கள் என்றால் பிரிந்துக் கிடப்பது போல் தலித்துகள் என்றாலும் பிரிவினையே. அம்பேத்கர் ஒருவரே தலித்தியர்கள் தலைவர் எனினும் அம்பேத்கர் பெயரிலேயே ஏராள கட்சிகள். இயக்கங்கள். தலைவர்களும் பலர். அதில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமா வளவன் .சில நடவடிக்கைகள் கவிஞருக்குப் பிடித்துள்ளது என சில கவிதைகள் வாயிலாக வெளிப் படுத்தியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பத்தாயிரம் இந்துப் பெயர்களை இனிய தமிழ்ப் பெயர்களாக மாற்றியதற்காக திருமா வளவனை'தகப்பன் சாமி'என போற்றிப் பாடியுள்ளார்.
"தொல். திருமா வளவன் அவர்களின் கால் நூற்றாண்டுக் களப் பணி"க்கு'முப்பது ஆண்டுக் கால கவிதை வாழ்வின் வெள்ளை அறிக்கை'யான'தலை நிமிர்வு'தொகுப்பை சமர்ப்பித்துள்ளார். அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி என்பது விடுதலைச் சிறுத்தைகளின் அடிப் படைக் கொள்கையாகும். வன்முறை என்று எவரோ சொன்னதற்கு எதிர் வினையாக எழுதப் பட்ட கவிதை
'உயிர் விலை'. இது வாழ்க்கை முறை . புதிய போர் முறை என்று தெளிவுப் படுத்தியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக பேசியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகளின் அடையாளமான நீலம், சிவப்பு நிறஙகளே தமிழைத் தலை நிமிரச் செய்தது என்பது குறிப்பிடத் தக்கது.
பெரியார் சமூகத்திற்கு ஆற்றியுள்ள பங்கு மகத்தானது. மேட்டுக் குடியினர் அல்லாதவர் ஓரளவேனும் உயர்வு பெற்றிருப்பதற்கு அடிப் படை பெரியார் என்பதை எவராலும் மறுக்க முடியாத உண்மை, ஒடுக்கப் பட்ட, தாழ்த்தப் பட்ட, வஞ்சிக்கப் பட்ட, புறக்கணிக்கப் பட்ட அனைத்து மக்களுக்காகவும் போராடியவர். பெரியார் மீதும் விமரிசனங்கள் வைக்கப் பட்டது. அவதூறு பரப்பப் பட்டது. அவதூறுக்கு எதிராக எழுதப்பட்ட கவிதை 'பெரியார் செருப்பு'. பெரியாரின் தடி, பேச்சு, சேவை, செருப்பு ஆகியவை
எங்கும் போய்விடவில்லை
எங்கள் கையில்தான்
இருக்கிறது                             என்கிறார். பெரியாரின் பணி தொடர்கிறது என்கிறார். பெரியாரின் இலட்சியத்தை நிறைவேற்றுவோம் என்கிறார். பெரியாரை மறுப்பவர்களை மறுத்துள்ளார். 'மீட்பு'க் கவிதையிலும் எல்லாவற்றையும் மீட்க பெரியார் வர வேண்டும் என்கிறார்.
பெரியார் கடவுள் இல்லை என்றார். பாரதி வசந்தன் உண்டு என்கிறார். கவிஞர் குறிப்பிடும் தெய்வங்கள் மெய்யானவை, எவராலும் மறுக்க முடியாதவை. 'தெய்வங்கள்' கவிதையில்
கடவுள் இல்லையென்று எவனாவது
சொன்னால் சொல்லி விட்டுப் போகட்டும்
அப்பாவும் அம்மாவும்தான் எங்களுக்கு
ஆயிரங் காலத்துத் தெய்வம்
அதற்கடுத்தத் தெய்வம்
அம்பேத்கர்                           
என்கிறார். பெற்றோர் தெய்வம் என்பது பொதுவானது. அம்பேத்கர் தலித்தியரின் தெய்வம் என்பதை எடுத்துரைத்துள்ளார்.
பாரதியை இலக்கிய உலகம் நன்கறியும். பாரதி தாசனைத் தமிழ்க் கூறும் நல்லுலகம் வெகுவாக அறியும். முன்னவர் புதுச் சேரியில் வாழ்ந்தவர். பின்னவர் புதுச் சேரியில் பிறந்தவர். புதுச் சேரியில் பிறந்த ஒரு சிறந்த கவிஞரான தமிழ் ஒளியை பெரும் பாலோர் அறிய வாய்ப்பில்லை.
'தமிழ் மொழி'யின் மீது ஓர் இருட்டுப் பாய்ச்சப் பட்டுள்ளது. கவிஞர் பாரதி வசந்தன்'தமிழ் ஒளி'மீது ஒரு'தமிழ் ஒளி'யைப் பாய்ச்சியுள்ளார். தமிழ் இலக்கிய உலகம் அறியச் செய்துள்ளார்.
சேரியிலே பூத்ததொரு
சிவப்புப்பூ வசந்தம்
சிந்தித்த அத்தனையும்
செங்கொடியை உயர்த்தும்
யாரிடமும் தலை வணங்கா
இனமான முழக்கம்
யாசித்தும் வாழ்ந்ததில்லை
இது அவன்கதைச் சுருக்கம்
கவிஞர் தமிழ் மொழியின் வாழ்வுச் சுருக்கத்தை எட்டே வரியில் சுருக்கிக் கூறியுள்ளார்.சிறப்பாகச் சொல்லியுள்ளார்.
திருவள்ளுவர் எந்த சாதி என்று தெரியாது. ஆனால் அவரின் திருக்குறள் சாதி பேதமற்று எல்லோராலும் போற்றப் படுகிறது. பாராட்டப் படுகிறது. பின் பற்றப் படுகிறது. ஆராய்ச்சி என்னும் பெயரில் அறிஞர்கள் சிலர் திருவள்ளுவரை வள்ளுவர் என்று சுருக்கி பறையர் இனத்தில் உள்ள வள்ளுவப் பிரிவுடன் சேர்த்து'வள்ளுவப் பறையன்'என திருவள்ளுவரை ஓர் இனத்திற்கு உரியவர் ஆக்கி விட்டனர். கவி்ஞருக்கு இதில் உடன் பாடில்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளாக
வள்ளுவர் தமிழர்
இப்போது பறையர்
என்பதை ஏற்க வில்லை. திருவள்ளுவரை வள்ளுவப் பறையன் ஆக்க முயன்ற 'அறிஞர்'களைச் சாடியுள்ளார். விமரிசித்துள்ளார்.
தமிழுக்குச் சோறு போடுவேன் என்றான் ஒருவன். தன் பிறந்ந நாளைத் தமிழின் பிறந்த நாள் என்றான் மறுவன். தமிழை வாழ வைக்கவே தான் வாழ்கிறேன் என்றான் பிறிதொருவன். இப்படி ஏராள கூற்றுகள். ஆனாலும் இவர்களை எல்லாம் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது தமிழ் என்று வருத்தப் படுகிறார்.
தன்னைத் தாழ்த்துகிறவர்களையும்
உயர்த்துகிறது தமிழ்                           என தமிழின் சிறப்பைக் கூறி தமிழை வாழ வைப்பதாகக் கூறுவர் மீது வெறுப்பைக் காட்டியுள்ளார். தமிழ் மொழியை 'இனிது' என்கிறார்.
தமிழகத்திற்கு வந்தோரை வாழ வைக்கும் தன்மை உண்டு என்பர். வந்தோர்கள் தமிழர்களையே ஆளத் தொடங்கினர். அடிமைப் படுத்த முயன்றனர். தமிழகம் வந்த ஆரியர்கள் வந்தேறிகள் ஆயினர். தமிழர்கள் மீதேறி பயணிக்கத் தொடங்கினர்.
தமிழும்
தமிழ் சார்ந்த இடமும்
வந்தேறிகளின்
வேட்டைக் காடு                          ஆகி விட்டது என்கிறார். விலங்குகளோடு மேய்க்கத் வந்தவர்கள் தமிழர்களை வேட்டையாடி வருவதை வேதனையுடன் வெளிப் படுத்தியுள்ளார்.
கட்சித் தலைவர்கள் தொண்டர்களை அழைக்கும் விதத்தில் ஓர் அன்பு இருக்கும். ஓர் உறவு இருக்கும். இதில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வோர் அடையாளம் உண்டு. தம்பி, உடன் பிறப்பு, இரத்தத்தின் இரத்தம் என்பர். தொண்டர்களோ அம்மா என்றும் அய்யா என்றும் பெரிய அய்யா என்றும் சின்ன அய்யா என்றும் அழைப்பர். இது தமிழ் நாட்டில் எழுதப் படாத விதி. தமிழர்களின் தலை விதி.
தமிழர்கள்
ஒரே குடும்பமாக
இல்லையென்று
எவன் சொன்னான்
'குடும்பம்'தலைப்பில் எழுதப் பட்ட கவிதையில் கிண்டல் செய்துள்ளார். கேலி செய்துள்ளார். அரசியல் கட்சிகளை விமரிசித்துள்ளார். தலைவர்கள் பெயருக்குப் முன்'புரட்சி'யைச் சேர்த்துக் கொள்வதையும் விடவில்லை. எல்லாப் புரட்சிகளையும் பட்டியலிட்டவர்'புரட்சித் தலைவரை'விட்டு விட்டார். புரட்சிகளினால் புரட்சி எதுவும் உண்டாக வில்லை என்னும் உண்மையையும் உணர்த்தியுள்ளார்.  
தமிழன் என்பவன் இன்று தமிழனாக இல்லை. தமிழனுக்காக அடையாளங்களைத் தொலைத்து நிற்கிறான். மிக முக்கியமாக மொழியை மறந்து விட்டான். மொழியில் ஆங்கிலத்தைக் கலந்து விட்டான். ஆங்கிலமே தமிழன் நாவில் ஆட்சிச் செய்கிறது. தமிழும் ஆங்கிலமும் கலந்து தமிங்கிலீஷ் ஆகி விட்டது. தமிழனும் தமிங்கிலன் ஆகி விட்டான்.
நீ
தமிழனும் இல்லை
ஆங்கிலேயனும் இல்லை.
இரண்டுக்கும் தப்பிப் பிறந்த
தமிழ் நாட்டுத் தமிங்கிலன்.
எப்போதும்
இனத்துக்கும் மொழிக்கும்
எதிராக நடக்கும் இழிமகன்                        என
'தமிங்கிலன்'கவிதையில் தாக்கியுள்ளார். தமிழன் தமிழனாக இருக்க வேண்டும் என்கிறார்.
தமிழர்களின் வரலாறு மிக நீண்டது. மூத்த குடி என்று பெயர் பெற்றவன். தொன்மையானவன் என்று அறியப் பட்டவன். இரணடாயிரம் ஆண்டுக் காலத்திற்கு மேல் வாழ்ந்து வந்தாலும் தமிழன் தலை நிமிர்ந்து வாழ வில்லை. வாழ முடிய வில்லை. இதற்கு முக்கியக் காரணமாகக் கவிஞர் கூறுவது "சாதித் திமிரும் மத வெறியுமே" என்கிறார். சாதித் திமிரும் மதவெறியும் மனிதர்க்குக் கூடாது என்கிறார். சாதியையும் மதத்தையும் துறந்து தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்'தலை நிமிர்ந்து' கூறுகிறார்.
மரபென்ன புதிதென்ன
மறுபெயரும் இருந்தென்ன
மனதுக்குள் வாழ்வது கவிதை                      என'கவிதைப் பூ'வை மரபால் மணக்கச் செய்துள்ளார். பாரதி வசந்தன் மரபிலும் எழுதியுள்ளார். புதிதிலும் எழுதியுள்ளார். இரண்டிலும் புலமையைப் புலப்படுத்தியுள்ளார். தமிழன் நிலையையும் தலித்தியரின் நிலையையும் தன் நிலையையும் புரியச் செய்துள்ளார். வடிவங்களிலும் கவனம் செலுத்தியுள்ளார். 'தமிழா உனக்கொரு சேதி'கவிதை'குறும்பா'வடிவில் எழுதப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில் லிமரிக் என்பதாகும்.
இமயம் வென்ற வீரம்
இருந்தது முன்பொரு காலம்
சமயம் பார்த்தே
சாதிகள் வளர்ப்பாய்
சரிதான் உன் செயல் சோரம்
தமிழனின் முந்தைய நிலையையும் தற்போதைய நிலையையும் இக் குறும்பா மூலம் அறியச் செய்துள்ளார்.
பாரதி வசந்தனிடம் கவிதையும் இருக்கிறது. கோபமும் இருக்கிறது என்பதற்குச் சான்றாக " தலை நிமிர்வு " விளங்குகிறது. ஒரு கவிஞன் என்பவன் அநியாயத்தைக் கண்டு பொங்கி எழ வேண்டும். பாரதி வசந்தன் பொங்கி எழுந்துள்ளார். ஒவ்வொரு கவிதையிலும் கோபத்தைக் காண முடிகிறது. வேகத்தையும் உணர முடிகிறது. உடனுக்குடன் எதிர் வினையாற்றியுள்ளார். உணர்வுகளை வெளிப் படுத்தியுள்ளார். தவறு செய்பவர் எவராயினும துரோகம் செய்பவர் எவராயினும் தட்டிக் கேட்கத் தயங்கியதில்லை. எதிரிகளை விட துரோகிகளையே தாக்கியுள்ளார். எழுதிய நாள், நேரம் மூலம் உறுதிப் படுத்தியுள்ளார். களத்தில் நிற்கும் போராளி போல் பாரதி வசந்தன் எழுத்தில் ஒரு போராளியாக உள்ளார்.
கவி்ஞர்கள் தொகுப்பை வெளியிடும் போது கவிதைகள் வெளியிட்ட இதழ்களுக்கு நன்றிச் சொல்வர். இதழ்களில் வெளியான கவிதைகளைத் தொகுத்து வெளியிடுவர். தலை நிமிர்வில் உள்ள கவிதைகளில் பெரும் பாலானவை பெரு வாரியான இதழ்கள் வெளியட மறுத்தவை. காரணம் கவிதைகளின் நிஜத் தன்மை மற்றும் கலகக் குணம். பாரதி வசந்தனின் துணிவு பாராட்டிற்குரியது. ஒரு கவிஞராக பேசத் தொடங்கிய பாரதி வசந்தன் இத் தொகுப்பின் மூலம் ஒரு தமிழனாகவும் பேசியுள்ளார். ஒரு தலித்தாகவும் பேசியுள்ளார். ஒரு மனிதனாகவும் பேசியுள்ளார். தமிழ் உணர்வாளர்களால் பேசப் படுவார், போற்றப் படுவார். எவரிடமும் வணங்காமல் தலை நிமிர்ந்து நிற்கிறார். எல்லோரையும் தலை நிமிர்ந்து நிற்கவும் செய்கிறார். தலித்தியம் தமிழியம் என்னும் இரண்டு தளங்களிலும் இயங்கியுள்ளார். இரண்டும் வேண்டும் என்கிறார். முன்னெடுத்துச் செல்பவர்கள் போலியாக இருக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.
தலித்தியத்திற்கு
அம்பேத்கரியம்.
தமிழியத்திற்கு
பெரியாரியம்.
பொதுவுடமைக்கு
மார்க்சியம்.
தமிழ் நாட்டின்
விடுதலைக்கு
இந்த மூன்றும்
"அவசியம்". தலித், தமிழ், தமிழ் நாடு என மூன்றின் விடுதலைக்கும் வழி வகுத்துள்ளார். அவ்வழியே நடக்கிறார். வெற்றிப் பெற ஒத்துழைப்பது அவசியம்.
வெளியீடு
அக நாழிகை 33 மண்டபம் தெரு மதுராந்தகம்      603 306
விலை ரூ 130.00

கோவை சதாசிவத்தின் உயிர் புதையல்

மாநகரங்கள் கம்பீரமாய் கண்முன் காட்சி அளிக்கின்றன. நகரங்கள் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன. கிராமங்கள் மெல்ல மெல்ல அருகி வருகின்றன. மூன்றும் முன்னொரு காலத்தில் காடுகளாக இருந்தன. தற்போது காடுகளின் பரப்பளவு குறைந்து வருகின்றன.காடுகளின் அளவு குறைவு கேடுகளின் அளவை அதிகரிக்கிறது. காட்டை மட்டுமல்ல இயற்கையின் அனைத்து செல்வங்களையும் மனிதன் அழித்து வருகிறான். அசுத்தப் படுத்துகிறான். அழுக்கு ஆக்குகிறான். இயற்கைக்கு எதிராக மனிதர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினையாக மனிதருக்கு எதிராக அமைகின்றன. இயற்கையை  அழிக்கும் முயற்சியில் மனிதன் தன்னையே அழித்துக் கொள்கிறான். காட்டைக் காக்க வேண்டும் என்னும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் செயலில் இறங்கியுள்ளனர். சிலர் எழுத்தில் இயங்குகின்றனர். இரண்டிலுமே தன்னை அர்ப்பணித்து முன்னுதாரணமாய் இருப்பவர் கோவை சதாசிவம். மண், மயிலு, சிட்டு என்னும் ஆவணப்படங்களின் மூலம் தன்னுணர்வை வெளிப்படுத்தியவர் 'உயிர்ப் புதையல்' என்னும் தொகுப்பை அளித்துள்ளார்.
"காடும்
காடு சார்ந்த உலகமும்
பரந்து கிடக்கின்றன
வாருங்கள்
பயணிப்போம் " என வாசிப்பவரையும்  'காட்டுக்குள்' அழைத்துச் செல்கிறார். காடு குறித்த ஒவ்வொரு கட்டுரையும் காடாகவே விரிகிறது.

'மேற்குமலைத் தொடர்களைப் பார்க்கிற போதெல்லாம் அம்மாவின் அடிவயிற்றுச் சுருக்கங்கள் நினைவிற்கு வருகிறது' என 'அம்மாவின் அம்மா' வில் குறிப்பிட்டுள்ளார். மலைக்குச் செல்ல அமைத்த சாலைகளே 'மழையழிவின் முதல் தொடக்கப்புள்ளி' என்கிறார். இம்மலைத் தொடரே மருத நிலங்களைச் செழிப்பாக்குகிறது என்று அறியச் செய்துள்ளார். மலையை சுற்றுலாவிற்காக பயன்படுத்திக் கொள்வோரைச் சாடியுள்ளார்.
மலையை அம்மா என்றவர் ஆலமரத்தை தாய்மடி என்கிறார். 'மரமென்னும் தாய்மடி' யில் மரங்களின் அவசியத்தைக் கூறுகிறார். எவ்வாறு பயன்பட்டது என்றும் எடுத்துரைத்துள்ளார். ஆலமரங்களை அழித்ததால் வெப்பம் அதிகரித்துள்ளன என்பது அனுபவிக்கும் ஒன்று. ஆலமரம் இல்லாது போனதையும் இருப்பதைக் காத்து குழந்தைகளுக்கு நேரில் காட்ட வேண்டிய பொறுப்பும் உள்ளது என்றறிவுறுத்தியுமுள்ளார்.

'மாமழை போற்றுதும்' என்பது இரண்டாம் பகுதி. இந்தியாவில் அதிகம் மழை பெய்யும் இடம் சிரபுஞ்சி போல் தமிழகத்தில் நீலகிரி கூடலூரில் உள்ள 'தேவாலா' என அறியச் செய்கிறார். ஆண்டுக்கு 120 நாள்கள் மழை பெய்த நிலை மாறி தற்போது 30 நாள்களே பெய்கிறது என வருந்தியுள்ளார். மக்கள் குடியேற்றமே மழை குறைவிற்கு காரணம் என்கிறார். காட்டை ஆக்கிரமிப்பவர்களை காலி செய்யாமல் மலைவாழ் மக்களை நெருக்கும் அரசைக் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இம்மக்களை 'காட்டின் குழந்தைகள்' என்பது ஏற்புடையதே. மலையுடன் மலைவாழ் மக்களையும் காக்க குரல் கொடுத்துள்ளார்.

'நாடு நாடாக இருக்க வேண்டுமெனில் காடு காடாக இருக்க வேண்டும்' என்று 'படிக்க வேண்டிய பாடம்' மூலம் உணர்த்தியுள்ளார். வழிபாட்டு உரிமை என்னும் பெயரில் காட்டை இரத்த சேறாக்குவது கூடாது என்கிறார். காட்டிலிருந்து நகரத்திற்கு பெயர்ந்து விழாவன்று காடு வந்து கொண்டாடுபவர்களையே சாடியுள்ளார். ஜார்கண்ட் மாநில ராஞ்சி  மாவட்ட பழங்குடியினரை வைத்து எழுதப்பட்டுள்ளது.'கானகம் ஒரு கருவூலம்'  கட்டுரையில் அதன் சிறப்பை விரிவாகக் கூறியுள்ளார். பயணமாக சென்று அனுபவித்து எழுதியுள்ளார்.'இன்னும் மனித குலம் இனம் கண்டறியாத உயிர்களின் இருத்தலை அடைக் காத்துக் கொண்டிருக்கும் அரிய பெட்டகம்' என்பதும் குறிப்பிடத்தக்கது.

'விதைநெல்' முக்கியமானது. மரபனு மாற்றுப் பயிர்களை எதிர்க்கிறது. வேண்டாம் என்கிறது. தற்சார்ப்மிக்க இயற்கை வேளாண்மையே நல்லது என்கிறது. மரபனுவால் விளைந்த தீமைகளையும் விளையப்போகும் ஆபத்துகளையும் கூறியுள்ளது. மரபனு மாற்று பயரிகளைத் தடுத்திட பசித்துச் சாப்பிடும் ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள நதிகளைப் பற்றி எழுதிய பகுதி 'நீரலானது உலகு' . தமிழகத்தில் 33 நதிகள் உள்ளன எனத் தொடங்கி ஒவ்வொன்றும் எவ்வளவு தூரம் பயணிக்கின்றன.,எத்தனை ஏக்கர்களுக்கு பாய்கின்றன என ஏராளமான புள்ளி விவரங்களைத் தந்துள்ளார். குறுக்கே எத்தனை அணைகள் உள்ளன என்பதையும் அறியச் செய்கிறார். நகரங்களும் தொழிற்சாலைகளும் பெருகுவதே நதிகளின் சிதைவிற்குக் காரணம் என்கிறார். நதிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளையும் குற்றம் சாட்டியுள்ளார். இறுதியில் மனத்துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார். நதிகளுக்காக பலர் குரல் எழுப்பி இருப்பினும் 'நொய்யல்' நதிக்கே ஏராளமானோர் ஆதரவு தந்துள்ளனர். குறிப்பாக படைப்பாளிகள் கதை, கவிதை, ஆவணப்படம், கட்டுரை என எல்லா வகைகளிலும் 'நொயய்ல்' பாய்ந்துள்ளது. கவிஞராக கோவை சதாசிவமும் கவிதை இயற்றியுள்ளார். 'நொய்யல் உயிரு்ட்ட வேண்டிய நதி' என தலைப்பிலேயே நொய்யல மீதான அக்கறையைக் காட்டியுள்ளார். நதியின் வரலாறு தொடங்கி அதன் அழிவு வரை முழுமையாக எழுதி மீட்டெடுக்க வேண்டியுள்ளார்.

பறவைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்ததில் மனிதருக்கு உதவுகின்றன. இயற்கையை வளர்க்கின்றன. அதிலொன்று 'இருவாச்சி'. 'அருகி வரும் இருவாச்சிகள்'க்காக வருந்தியுள்ளார். ஒரு சிறுகதையை , ஒரு கவிதையை வாசித்த உணர்வை இப்பறவைகளின் வாழ்வை விவரிக்கையில் ஏற்படுகிறது என்று பரவசிக்கிறார். அதன் பண்புகளை, செயல்களை அழகாய்க் கூறி இறைச்சிக்கும் சிறகுக்கும் வேட்டையாடுதல் வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பறவைகளைக் கொல்வது முட்டாள் தனம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மரம் , மழை,மலை, காடு,நதி என இயற்கையை நேசிக்க வலியுறுத்தியவர் 'உயிர்களிடத்தில்'உம்  அன்பு செலுத்த வேண்டும் என்கிறார். குரங்கைப் பற்றி பேசியுள்ளார். குறிப்பாக சிம்பன்ஸி .மனிதர்கள் சிம்பன்ஸியை துன்புறுத்த மாறாக அது மனிதர்களையே துரத்தியது என்னும் ஓர் உண்மை நிகழ்வை எடுத்துக்காட்டாக்கித் தந்துள்ளார். 'உலகில் சுமார் 400 வகையான குரங்குகள் வாழ்கின்றன' என்னும் தகவலும் உள்ளது. அடுத்து 'வரையாடுகள்' பற்றியது. கட்டுரைத் தலைப்பு 'புவி மீது வரையாடுகள'. ஆனால் ஆடுகள் குறித்து பேசவேயில்லை.மலைகளைச் சுற்றுலா தலமாக்கக் வேண்டாம் என்பதே முதன்மையாக உள்ளது.தாய் வழிச் சமூகத்தின் கூட்டு வாழக்கையை இன்றளவும் தொடரும் காட்டு விலங்குதான் யானை என யானையை அறியச் செய்யும் பகுதி 'யானைகள் என்பது காட்டின் ஆதார உயிர்'. யானைகளின் செயல்களைக் கூறியதுடன் அவைகள் காட்டுக்கு எவ்வாறு பயனுள்ளதாக விளங்குகின்றன என கூறியுள்ளார். காட்டு வழிகளை உருவாக்குவதும் ஊற்றுப் பறிப்பதும் யானைகளே என்பன போன்ற செய்திகள் வியப்பளிக்கின்றன. மனிதர்கள் காட்டை ஆக்கிரமித்ததால் நகரத்துககு வந்த யானைகைள காட்டுக்கு திருப்பும் முயற்சியில் தொடர் வண்டியில் சிக்கி பலியானதை விவரித்த விதம் கனக்கச் செய்கிறது.எதிர் காலத்தின் இயற்கைக் காட்சி. இறந்து கிடக்கும் யானைகளின் இரத்தச் சாட்சி் என்னும் வரிகள் இரத்தத்தை உறையச் செய்தது.யானையைத் தொடர்நது 'புலி வளமையின் குறியீடு' என ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.புலிகள் வாழும் காடே வளமையானது எனப்தற்கான ஆதாரங்களைத் திரட்டித் தந்துள்ளார். புலியைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கியுள்ளார். இறுதியில் புலி வாழும் என்னும் நம்பிக்கையும் ஏற்படுகிறது என்பது சுட்டத்தக்கது.

'இராகுலஜியின் நூல் ஒரு மீள்பார்வை' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை. இது ஒரு விமரிசனம். 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்னும் நூல் குறித்தானது. ஒரு நல்ல விமர்சனம் எனினும் பூமியில் வாழும் உயிர்கள் இயற்கையை சார்ந்தே வாழ வேண்டியுள்ளது என தொகுப்பு உணர்த்துவதாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஆற்றின் கரைகளை அழகுப்படுத்துவது மணல். நீரை தன்னுள் சேமித்து வைத்திருக்கும் தன்மையுடையது. மனிதர்கள் வீடு கட்டுவதற்காக ஆறு சிதைக்கப்படுகிறது. மணல்  கொள்ளையடிக்கப் படுகிறது.மணல் திருட்டை எதிர்க்கும் கட்டுரையாக அமைந்துள்ளது 'மணல்.பூமியின் மேலாடை'. மணல் கொள்ளையடிப்பவர்களையும தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசையும் கண்டித்துள்ளார்.கடல் மணலுக்கும கை கொடுத்துள்ளார். மணல் திருட்டு ஊற்றுக்கு வழி வகுக்காது என்கிறார்.

கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பர். இது முது மொழி. கட்டுரையாளர் 'கையளவு கடல் கடலளவு நஞ்சு' என்று ஒரு புது மொழியை உருவாக்கியுள்ளார். பூமியைப் போலவே கடலிலும் உயிரினங்கள் வாழ்கின்றன.அவை அற்புதமானவை . சிலவற்றை சொற்களால் காட்டியுள்ளார். பூமியை நாசம் செய்யும் ஞெகிழி கடலையும் விடவில்லை என்பதே  சாராம்சம். உயிரின் சுழற்சிக்கு இடையூறாய் அமைந்துள்ளன கடலில் கலக்கும் மாசுகள் என்கிறார்.

அணு பேராற்றல் மிக்கது. பேராபத்தானது. இந்தியாவில் பல அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. உடலை, க்ட்டடங்களை , புவியைத் துளைத்து அலையும் நியூட்ரினோ என்னும் துணை அணுவை கையகப்படுத்தி ஆய்வு மேற்கொள்ள மேற்கு மலைத் தொடரின்  தமிழக எல்லையில் உள்ள 'சிங்காரா'  தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமைந்தால் ஆபத்தே .அனுமதியளிக்கக் கூடாது என்று அரசுக்கும் வேறு இடம் தேர்வு செய்ய விஞ்ஞானிக்களுக்கும் வேண்டு கோள் விடுத்துள்ளார். அவ்வாறு நடந்தால் 'எல்லா உயிர்களும் தொழும்' என்பது உருக்கமானது.

உலகை உருக்குலைப்பதில் வெப்பத்திறகும் ஒரு முக்கியமுண்டு. அந்த வெப்பத்தையும் உண்டாக்குபவன் மனிதனே. தொழிற்சாலைகள், எரிசக்தி ஆலைகள், வாகனங்கள் மூலம் வெளியாகும் புகையே வாயு மண்டலத்தை வெப்பமாக்குகின்றன.  பூமியை வெப்பப் படுத்துகின்றனது. இதனால் பனி உருகி கடல் மட்டம் உயர்வதால் கடலோராப் பகுதிகளில் வாழும் மக்கள பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பனி உருகலால் ஆறுகளும் வற்றிப்போகும், அணைகளும் ஒரு காரணம் என்பது எண்ணிப் பார்க்க வேண்டியதாகும்.

ஒரு கவிஞராக கலைப்பயணத்தில் தன்னை ஈடுபடுத்தி ஓர் ஆவணப்பட இயக்குநராக நிலை பெற்று ஒரு சூழலியராக தன்னை 'உயிர்ப் புதையல்' மூல்ம் அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஒவ்வொரு கட்டுரையிலும் 'இயற்கை'யைக் காக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். நேரடியாக களத்திற்குச் சென்று அரிய தகவல்களுடனும் ஆதாரத்துடனும் அனுபவத்துடனும் தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆசையைக் காட்டியுள்ளார். மலைகள், காடுகள், பறவைகள்.,விலங்குகள், நதிகள், கடல் என ஒவ்வொன்றைக் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கட்டுரைகளை அமைத்துள்ளார். மக்களைச் சிந்திக்கத் தூண்டியுள்ளார். இயற்கையைக் காக்க வேண்டும் என்பதே முதன்மையானதாக இருந்தாலும் மக்கள வாழவே  இதை உணர வேண்டும் என்பதே இத்தொகுப்பு விடுக்கும் கோரிக்கை. 'பகுத்துண்ணும் பொதுப் புத்தி உருவாக்குவோம்' என்பதன் மூலம் தன் பொதுவுடைமைக் கொள்கைiயும் பரப்பியுள்ளார். இனிமையான சொற்களும் இடையிடையே கையாண்ட கவிதைகளும் கோவை சதாசிவத்தை ஒரு கவிஞர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அழகாக அச்சமைத்து அருமையாக வடிவமைத்து தரமான தாளில் வண்ணப்படங்களுடன் வெளியிட்டு கட்டுரையாளரின் சூழல் காக்கும் ஆர்வத்தை வெளிச்சப்படுத்தியுள்ளது 'வெளிச்சம்'. 'உயிர்ப் புதையல்' ஐ இயற்கையேயளித்த ஒரு விண்ணப்பமாக ஏற்று செயல்படுத்துவதே 'சூழலியியலார் கோவை சதாசிவம்' அவர்களுக்கு அரசு செய்யும் சிறப்பாகும். அவரின் முயற்சி அத்தகையது.
வெளியீடு
வெளிச்சம் வெளியீட்டகம்  
147 அவிநாசி சாலை பீளமேடு கோவை  641 004

லாந்தர் தின்றது போக மிச்சத்தைக் கூறும் ஸ்நேகிதன்

கவிதை பலரால் எழுதப்படுகிறது. வெளிப்பாட்டில், கட்டமைப்பில், வரியமைப்பில் வித்தியாசத்தைக் காண்பிப்பவரே பேசப்படுவர். அத்தகையதொரு கவிஞர் ஸ்நேகிதன். அவரின் தொகுப்பு 'லாந்தர் தின்றது போக மிச்சம்'.
பாம்பு நுழைந்து கொண்ட
தன் புற்றுக்கு
வெளியே நின்று கரையும்
கரையான்களுக்கு
நூலை சமர்ப்பிப்பதிலே தன் தனித்தன்மையைக் காட்டியுள்ளார், கரையான் புற்றெடுக்க கருநாகம் குடியேறும் என்பது பழமொழி, ஆனால் கவிஞர் கரையான்கள் விலகி நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுவுமொரு குறியீடாக உள்ளது, ஆதிக்க சக்திக்கு எதிரானது.
'நானற்ற என் அறை' என்பது முதல் கவிதை,
எண்ணைய் காணாத
தாழ்ப்பாள்
கிறீச்சிட்டுத் திறக்கையில்
நேற்றிரவு பார்த்த அந்தரங்கங்களை
கிசுகிசுத்துக் கொண்டிருந்த
சுவர்கள்
சட்டென மௌனமாகி
எதிரெதிரே நின்று கொண்டன
என பாலியல் குறித்து பேசியுள்ளார். அந்தரங்கங்கள் குறித்து கிசுகிசுப்பது மனிதர்களுக்கிடையேயும் உள்ளது. இதுவொரு வகையான கிளர்ச்சியே. அடுத்த கவிதை 'தேய்ப்பான்களுக்கு'.
ஜன்னலோர இருக்கையை
கால்கள் சுயமற்றுப் போன
கிழமொருத்திக்கு
தாரை வார்த்து நிற்கையில்
பின்புறம் நிறைகிறானொருவன்
தோள்கட்டையில்
தகிக்கிறது
பெருமு்ச்சின் நரகம்.
காலணிகளைப்
பிரயோகித்து விடலாம்தான்
அதைக் காட்டிலும்
பிடுங்கியெறிந்து விட முடிந்தால்
பின்புறம் உறுத்தும்
ஆண் குறியை
என பேருந்தில் பெண்களை உரசும் ஆண்களை அடையாளப்படுத்துகிறது.'தேய்ப்பான்களுக்கு' என அஃறினையாக்கியுள்ளார். இதுவே ஒரு சாடலாய், தாக்குதலாயுள்ளது.
யாரும் தந்து விடாத
கைவிலங்கின் சாவி
இனி தேவையில்லை
இற்றுக் கிடக்கிறது
பழங்காலத்திரும்பு.
முன்பு போலன்றி
நிறை மகளிர்க்கு வாய்த்திருக்கிறது
'பத்தாது இன்னும் வேகமா'
என்ற குரல்
புணர்வின் பொழுதுகளில்
என பாலியல் தொடர்பாய் பெண்ணியம் பேசியுள்ளார்.
கலவியின் களைப்பில்
அயர்ந்து உறங்கியிருப்பாய்
காலையில் கணவனுக்கு
என்ன சமைக்கலாம்
என்ற யோசனையுடன்
என 'பின்பொரு இரவில்' கவிதையிலும் பெண்ணியம் பேசியுள்ளார். 'ஓ என் யாசரி' லும்
திறந்து கிடக்கும்
யோனிகளிலெலாம்
கழித்து விட
இந்திரியத்துடன்
அலைகிறது வல்லாறுகள்
என காமம் கொண்டலையும் வெறியர்களை கண்டித்துள்ளார். 'திறந்து கிடக்கும்' என்னும் சொல்லில் ஓர் ஊசலாட்டம் தெரிகிறது.
கட்டிலின் மூலையில்
கசங்கிக் கிடக்கிறது தலையணை
என 'கானல் இரவு' கவிதையிலும்
காமம் தீர்ந்த இரவுகளில்
அதிர்ந்தோய்ந்த கட்டிலோரம்
சிதறிக்கிடக்கிது
செயற்கைத் தனங்களின்
மிச்சங்கள்
என 'அதற்காகத்தான் காத்திருக்கிறேன்' கவிதையிலும் புணர்ச்சிக் குறித்தே எழுதியுள்ளார். கவிங்ருக்குள் பலவித தாக்கத்தை புணர்ச்சி ஏற்படுத்தியுள்ளது என கவிதைகள் உணரச் செய்கிறது. புணர்ச்சியிலும் தீர்ந்தது, தீராதது என பல வகைகள் உண்டு.
மனிதர்க்குள் காதல் விழைவது இயல்பு. காதல் கல்யாணத்தில் முடிந்தாலும் வேறு வேறு நபர்களுடன் முடிந்து விடுகிறது. இப்படிபட்டவர்கள் சந்தித்தால் நிகழ்வதை 'பிறிதொரு சந்திப்பில்' இயல்பாக காட்டியுள்ளார்.
பிரிதுயருக்குப் பின்
ஒரே கூரையின் கீழ்
எதேச்சையாய்
ஒதுக்கியிருக்கிறது மழை
ஓட்டுத் தண்ணீருக்கு
கைகளை நீட்டும்
இரட்டை ஜடை குழந்தை
உன்னுடையதாகத்தானிருக்கும்
உன்னை கவனித்ததை
கண்டுக் கொண்டதாய்த் தெரியவில்லை
என் மனைவியும்
மழை ஓய்ந்ததும்
பேசிக் கொள்ளாமலே நகர்ந்தோம்
முன்பொரு காலத்தில்
அதிகமாய்ப் பேசிவிட்டிருந்த நாம்
எவ்வளவு
கண்ணீர்த் துளிகள் கரைந்திருக்கும்
மழையோடு மழையாக
இப்படி
என ஓர் அருமையான சூழ்நிலையைக் காட்சிப்படுத்தியுள்ளார். கண்ணீர்த் துளிகளைக் காட்ட மழையை நன்கு பயன்படுத்தியுள்ளார்.
'லாந்தர் தின்றது போக மிச்சம்'இருளாகவே இருக்கும், இருள் இத்தொகுப்பின் அநேக இடங்களை ஆக்ரமித்துள்ளது. 'தரிசு நீட்சிகள்' கவிதையில்
இன்னும்
எதைக் காக்க நீளுகிறது
இந்த இரவு
திரௌபதியின்
சேலையைப் போல
என சிந்தனையை நீளச் செய்கிறார். திரௌபதியின் சேலையைப் போல என ஒப்பிட்டு இரவின் நீளத்தைச் சுட்டியுள்ளார். 'பகலைக் கடக்கும் அமானுஷ்யங்கள்' கவிதையில்
அமானுஷ்யங்களும்
இரவுகளும்
சார்ந்தேதானிக்கிருக்கின்றன
என இரவைக் குறிப்பிட்டுள்ளார். கவிஞரும் இரவு சார்ந்தேயுள்ளார்.
எப்படி முடிகிறது
அமானுஷ்யங்களால்
ஓரிரவிலிருந்து
பிறிதொரு இரவைச் சேர
இடைப்பட்ட பகலையும் தாண்டி
என முடிகிறது கவிதை. அமானுஷ்யங்களைக் குற்றம் சாட்டடியுள்ளார்.
இருந்தும் நீளும்
யாருக்குமில்லாத உம் கதைகளை
சபித்தபடி நகர்கிறது
இரவுகளும் தொடர் பகலும்
என்கிறது 'பராக்கிரமங்கள்' கவிதை. இதிலும் இரவு நீளும் என்கிறார். 'லாந்தர் தின்றது போக மிச்சம்' கவிதையில்
தேடி அயர்ந்து
விடியுமென்ற நம்பிக்கையில்
புரள்கையில்
லாந்தர் தின்றது போக
மிச்சமிருந்து
இரவு
என்கிறார். இத்தொகுப்பை வாசித்து முடித்து பின் மனம் இரவுக்குள்ளே சஞ்சரிப்பதை உணரமுடிகிறது. 'இருள்வெளிகளிலான வேட்டை நாய்கள்', 'கானல் இரவு, 'பின்பொரு இரவில்' என்னும் கவிதைகளும் இரவையே நீட்டிக்கச் செய்கின்றன.
நீ இல்லாம
நெடியதொரு இரவில்
என் அறையில் நிறைந்திருக்கும்
காற்றெல்லாம்
பிசுபிக்கிறது
உன் ஞாபகங்கள்
என 'பின்பொரு இரவில்' எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. நீள் கவிதையில் கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பில் சிறுகவிதைகளும் உண்டு. 'நீண்ட பகலொன்று' என்னும் சிறுகவிதையில்
இரவுகள்
தொலைந்து போய்விட்ட ஊரில்
யாரும்
கண்டு கொள்வதில்லை
பகலை
என இரவின் பெருமைப் பேசியுள்ளார். இதுவும் இரவு குறித்தானதே.
மனிதர்கள் வாழ்வு நிலையற்றது. புகழ் உச்சியில் இருப்பவர்கள் பின் சரிவைச் சந்திப்பது இயல்பு, இதை விவரிப்பதாக உள்ளது "நிலையற்ற உங்கள் இடம்", தலைப்பிலேயே உணர்த்தி விடுகிறார்.
கோபுரத்தின்
உச்சாணிப்புள்ளியில்
சிலாகித்துப் பாடிக் கொண்டிருந்தான்
பாடகன்
எனத் தொடங்கிய கவிதை
அப்படியொன்றும் தூரமில்லை
துயரத்தில் வார்த்த
புல்லாங்குழலோடு கசியும்
இதுதான் அவரின்
கடைசிப் பாடலாக இருக்கக் கூடும்
எனறு முடிகிறது. இது ஒரு பாடகன் புகழின் உச்சியில் இருப்பதையும் பின் வீழ்ந்து விடக்கூடும் என்கிறது. இது மனிதர்களுக்கான அறிவுரையாகவும் உள்ளது.
ஆதாம்டூ ஏவாள் டூ ஆப்பிள் கதை கிருத்துவ மதம் தொடர்பானது. காலம் காலமாய் சபிக்கப்பட்டதாகவே கற்பிக்கப்பட்டு வந்தது. போதிக்கப்பட்டு வந்தது. கவிஞரின் 'ஆப்பிள் சதி' ஒரு விதியைச் சொல்கிறது.
இப்படியும் இருக்கலாம்
ஏவாள் பேரழகியெனில்
ஆதாம் மீதான
பெறாமையிலும்
நிகழ்ந்திருக்கலாம் ஆப்பிள் சதி
என தொன்மத்தை சிதைத்துக் காட்டுகிறார். பொறாமை படும் குணவான்களை படம் பிடித்துக்காட்டுகிறார். 'ஏவாள்' பேரழகியென உறுதியாகக் கூறவில்லை. அவரின் அனுமானத்தை முன் வைக்கிறார். ஆதாம் ஏவாளை வைத்து எழுதப்பட்ட இன்னொன்று 'போர் ஓய்ந்தது'.
பூமி
தயாராகிக் கொண்டிருந்தது
இன்னுமொரு
ஆதாம் ஏவாளுக்கு
என வாசக மனத்திற்குள் ஒரு சிந்தனைப் போரைத் தொடங்கச் செய்கிறார். இக்கவிதை இதயத்தில் அதிர்வை ஏற்படுத்துகிறது. போர் வேண்டாம் என போதிக்கிறது.
வெகு நாட்களாய் நின்றதில்
பாதியளவு மண்மூடிய
டாங்கிகளின் ஓரம
வளரந்திருந்த செடியொன்று
முதல் பூவை ஈன்றது
என்பது குறிப்பிடத்தக்கது. அமைதி பூக்க வேண்டுமென்ற கவிஞரின் எண்ணம் வெளிப்பட்டுள்ளது.
ஆயினும் 'அவர்கள் ஏன் மறுக்கிறார்கள்' மூலம்
யூதாஸ்களின் உலகில்
இனி வர அஞ்சக்கூடும்
அவதாரங்கள்
என தற்போதைய நிலையையும் விளக்கியுள்ளார்.
மரணச் செய்தி மனத்தை பிசையும். வாய் விட்டு அழச் செய்யும், இறந்தவரின் உறவை பொறுத்து துக்கத்தின் தாக்கம் வேறுபடும். ஆனால் அவசர யுகத்தில் துக்கம் நீள்வதில்லை.'இறுதி அத்தியாயங்கள்' கவிதை மு்லம் கவிஞர் விளக்கியுள்ளார்.
தாவிப்பாயும் யுகத்தில்
எப்படியான
மரணத்திற்கும்
அங்கலாய்க்க முடிவதில்லை
இரண்டொரு நாட்களுக்கு மேல்
என இயல்பான வாழ்க்கையை எடுத்துரைத்துள்ளார். துக்கம் குறுகியதற்கு வாழ்க்கை வேகமே காரணம் என்கிறார். இக்கவிதை 'தினசரி கொஞ்சமாவது' தொகுப்பிலுள்ள பின்வரும் கவிதையை நினைவூட்டியது.
ஒரு மரணம்
நிகழ்ந்தது.
வழக்கம் போல
எல்லோருக்கும்
சொல்லி அனுப்பப்பட்டது
வழக்கம் போல
ஆண்கள் வந்து
பெஞ்சில் அமர்ந்தார்கள்
வழக்கம் போல
வாசல் வந்ததும்
பெண்கள் அழுதார்கள்.
வழக்கம் போல
சில பேர்கள்
வரவில்லை...
மறுநாள்
வழக்கம் போல
எல்லாம் நிகழ்ந்தது
என்கிறார்.
இறந்த காலம் குறித்து கவலைப்படக்கூடாது, வரும் காலம் பற்றி அஞ்சக்கூடாது. நடப்பு பற்றியே நினைவில் கொண்டு செயல்பட வேண்டும் .'இறந்த காலங்கள்' கவிதை மூலம் வாழ வலியுறுத்துகிறார்.
வெகு தரம் சொல்லியும்
அழுது கெண்டேயிருக்கிறானொருவன்
இறந்த காலங்கள்
பயனற்றிருந்ததாய்
நாளைக்கான சுமைகளை
வெகுவாக ஏற்றியபடி
சவுக்கைச் சொடுக்கியபடி
அவன் தோள்களிலமர்கிறது
என இரு காலங்களை விவரித்து இருப்பின் அவசியத்தைச் சுட்டியுள்ளார்.
நேரம் காட்டுகிறது
கடிகாரம்
ஒரு பறவை
பறந்து போகிறது
அக்கணத்தில்
வேறொன்றுமில்லை
என்றொரு சிறுகவிதை. அக்கணத்தில் வேறொன்றுமில்லை என்கிறார். ஆனால் கவிஞருக்கு ஒரு கவிதை எழுத வாய்த்துள்ளது. இலக்கியயுலகிற்கு ஒரு கவிதை கிடைத்துள்ளது. வாசிக்கும் கணத்திலோ சிந்தனையை விரியச் செய்கிறது. ஒன்றுமில்லை என்பதற்குள் பல ஒன்றுகள் ஒளிந்துள்ளன.
'லாந்தர் தின்றது போக மிச்சம்' என்னும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் கவிஞர் ஸ்நேகிதிகள் அகவுணர்வுகளையே அதிகம் காட்டியுள்ளன. பாலியல் குறித்து பேசியிருந்தாலும் பெண்ணியம் பேசியதால் சமன்படுத்தி விடுகிறார். காதலையும் காதல் விளைவுகளையும் பதிவுச் செய்துள்ளார். இதில் வருத்தம். ஏக்கம், விரக்தி ஆகியவை வெளிப்பட்டுள்ளன. கை கூடாத காதலால் வாழ்வே இருளாகி விட்டது என்பது போன்ற வெறுமையை உறுதிப்படுத்தும் வகையில் இரவுகளை முதன்மைப்படுத்தி, பொருளாக்கி பல கவிதைகள் உள்ளன. கவிஞர் ஸ்நேகிதன் முஸ்லிம் மதம் சார்ந்தவராயினும். முஸ்லிம் மதம் பற்றி எதுவும் பேசவில்லை. ஆயினும் கிருஸ்துவ மதம் தொடர்பான தகவல்களை வைத்து சில எழுதியுள்ளார். கவிதைகளில் இருண்மை இல்லை. இறுக்கம் உள்ளது.நவீன கவிதைக்கான நல்ல மொழியாளுமை உள்ளது.புது வரவுகளில் கவிஞர் தன்னை தனித்து அடையாளம் காட்டியுள்ளார். அவரால் அடையாளப்படுத்த வேண்டியது அநேகம் உள்ளது. ஸ்நேகிதன் செய்வார்.

அபியும் அன்பு சிவாவும்

அன்பு சிவா கவிதை, கட்டுரை என்னும் இரண்டு தளங்களிலும் இயங்கி வருபவர். ஆய்வுப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். முனைவர் பட்டம் பெற்று முனைப்புடன் செயல்பட்டு வருபவர். சிறுகதை முயற்சியிலும் இறங்கி 'அபியும் நானும்' என்னும் முதல் தொகுப்பைத் தந்துள்ளார்.
'சொல்ல மறந்த கவிதை' என்னும் முதல் கதை, சாதி இன்னும் மனிதர்களிடம் எந்த அளவிற்கு வெறியாக உள்ளது என்று வெளிப்படுத்தியுள்ளது. சாதி என்பது மனிதர்களிடையே ஓர் அங்கமாக உள்ளது. சாதியைத் துறந்து எவரும் வாழ்வதில்லை; வாழ விரும்புவதுமில்லை. சாதிக்கு எப்போதுமே முதல் பலி ஆவது காதலர்களே. இக் கதையிலும் காதலர்களே பாதிக்கப்படுகின்றனர். பலியாக்கப்படுகின்றனர். வேறு சாதிக்காரன் தன் சாதி பெண்ணைக் காதலிக்கிறான் என்பதற்காக அவளைக் கொல்ல முயல அவள் தடுத்து தான் பலியாகிறாள். அவனும் தன்னை மாய்த்துக் கொள்கிறான். காதலர்களைப் போற்றுகிறது. சாதி வெறியர்களைச் சாடுகிறது. சொல்ல மறந்த கவிதை சோகம் நிறைந்த கதை.
திருநங்கைகள் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டும் உதாசீனப்படுத்தப்பட்டும் கேலி செய்யப்பட்டும் வந்தனர். தற்போது சூழல் சற்று மாறி வருகிறது. பொது மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இலக்கியத்திலும் இடம் பெற்று வருகின்றனர். படைப்புகள் மூலமும் பேசப்பட்டு வருகின்றனர். அன்பு சிவாவும் 'பூமாலை அம்மா' என பெருமைப்படுத்தியுள்ளார். ஓர் அரவாணியால் ஒரு நல்ல அம்மாவாக இருக்க முடியும் என்று தெளிவுப்படுத்தியுள்ளார். அவர்களிடமும் பாசம் உண்டு என்கிறார்.
குழந்தைப் பிறப்பு என்பது ஆண் பெண் சேர்க்கையில் உள்ளது. இருவரும் அவசியம். தம்பதியருக்குக் குழந்தை பிறக்கவில்லை எனில் பெண்ணை மட்டும் குறை கூறுவது மக்களின் இயல்பு. அவ்வாறான மக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கிறது 'ஒரே ஒரு கேள்வி'. மருமகளுக்குக் குறையென்று மகனுக்கு மறுமணம் செய்து வைக்க முயல்கிறாள் மாமியார். ஆனால் மகனுக்கே குறை. அறிந்த மாமியார் வருந்துகிறாள். ஆசிரியரிடம் ஒரே ஒரு கேள்வி. மருமகளுக்கு மறுமணம் செய்து வைக்க  முயலாதது ஏன்?
இது பெண்ணியம் தொடர்பான கதை எனில் பெண்ணியத்திற்கு மாறான ஒரு கதையாக 'ரூபா என்கிற ரூபாவதி' கதை இடம் பெற்றுள்ளது. வரதட்சணையால் நின்று போன கதைகள் எராளம் வாசிக்கப்பட்டுள்ளது. ஆண்களை பண வெறியர்களாக காட்டப்பட்ட கதைகளே பிரபலமாகியுள்ளன. இக் கதையில் மாப்பிள்ளையாக வந்தவர் முற்போக்குவாதியாக உள்ளார். லஞ்சம் வாங்காதவராக உள்ளார். நேர்மையாக வாழ விரும்புகிறார். விவரம் அறிந்த பெண் 'பிழைக்கத் தெரியாதவன்' என்று முடிவு செய்து  மாப்பிள்ளையை மறுத்து விடுகிறாள். எதிர் மறையான இக் கதையை எழுத துணிச்சல் வேண்டும். துணிச்சல் மிக்கவராக ஆசிரியர் உள்ளார்.    
'எட்டாம் வகுப்பு 'அ' பிரிவு' பள்ளியைப் பெருமைப்படுத்தியுள்ளது. ஆசிரியர்களை கௌரவப்படுத்தியுள்ளது. மாணவர்கள் தவறு செய்தால் திருத்த முயல்வதே பள்ளியின் பணி, ஆசிரியரின் கடமை என்கிறார். ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார். தண்டனையை விட மன்னிப்பே சிறந்தது என்கிறார். மன்னிப்பே அதிக பட்ச தண்டனை என்பது சுட்டத்தக்கது. ஓர் ஆசிரியர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறது 'கால மாற்றம்'. இதுவும் ஆசிரியர் குறித்தானதே. கல்வியின் அவசியத்தை விளக்குகிறது, படிக்க விரும்பாத மாணவர்களையும் படிக்க வைக்க விரும்பாத பெற்றோர்களையும் மன மாற்றம் செய்கிறது, ஒரு வருடத்திற்குள் மாற்றிக் கொண்டு செல்ல நினைக்கும் ஆசிரியரே மனமாறி அங்கேயே தொடர நினைக்கிறார். ஆசிரியராக அல்லாமல் மாணவர்களின் குடும்பத்தில் ஒருவராக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்கிறது.
மனிதர்கள் இறந்தால் புதைப்பது மண் சார்ந்த ஒரு வழக்கமாக இருந்தது. இந்தியாவிற்கு வந்து நிலமற்று வாழ்ந்தவர்கள் இறந்தால் எரிப்பது மற்றொரு வழக்கமாக இருந்தது. இட நெருக்கடியாலும் அவசர வாழ்க்கையாலும் புதைக்கும் வழக்கம் புதைக்கப்பட்டது. எரிக்கும் வழக்கத்தைத் தொடர நவீனமாக 'மின்சாரத் தகனம்' முறை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இம் முறையை வைத்து எழுதப் பட்ட கதையாக உள்ளது. மின்சாரத் தகனம் முறை வந்தால் வேலை போய்விடும் என்று தயங்கிய 'கருப்பு' முடிவில் வரவேற்கிறான். காரணம் வெட்டியான் என்று கேவலமாக அழைக்கப்படுவது தவிர்க்கப்படும் என்கிறார். சாதியம் ஒழியும் என்கிறார். தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஆதரவாக உள்ளது.
மரம் என்பது மனிதர்களுடன் தொடர்புடையது. மனிதர்களுக்கு உறவானது. உறவாகக் கொண்டாடுவதும் உண்டு. சங்கப் பாடலிலும் மரத்தை சகோதரியாக பாவித்து எழுதப்பட்டுள்ளது. கவி்ஞர் வைரமுத்துவும் 'மூன்றாம் உலகப் போர்' தொகுப்பில் மரங்களை நட்டு வைத்து உறவாகக் கொண்டாடுவதாக அமைத்துள்ளார். அன்பு சிவாவின் 'தேவரின் மாமரம்' கதையில் தேவரின் காதலியாக மாமரம் சித்திரக்கப்பட்டுள்ளது. மரம் வெட்ட திட்டமிட்டதை அறிந்து தன் உயிரை மாய்த்து மரம் வெட்டுவதைத் தடுக்கிறார்.
தொகுப்பில் மிகச் சாதாரணமான கதையாக உள்ளது 'கோழை'. பேராசிரியர் பதவியில் இருப்பவர் மாணவியைக் காதலிக்கிறார். அவளிடம் சொல்ல முடியாமல் பதவி தடுக்கிறது. சொல்ல முயலும் போது அவள் தன் திருமண அழைப்பிதழைத் தந்து அதிர்ச்சியில் ஆழ்த்துகிறாள். கோழைத்தனத்திற்குக் கிடைத்தத் தண்டனை என்று கதையை முடிக்கிறார். உலகப் பேரறிஞர்கள் பலருக்கு ஒரு வகையில் பார்த்தால் மாணவிகளே மனைவிகளான வரலாறு உண்டு என்பது குறிப்பிடத் தக்கது. என்.டி.ஆர். வாழ்வை ஆய்வு செய்து எழுத வந்த மாணவி சிவபார்வதியே இரண்டாம் மனைவியானார் என்றும் ஒரு பதிவு உள்ளது.
'மஜனுக்கள்' கதையும் சாதாரணமாகவே உள்ளது. ஓர் எதிர்பார்ப்பை உண்டாக்கி ஏமாற்றம் அடையச் செய்யும் பாணியிலான கதையாகும். இலக்கிய தகுதி அடைவது சிரமமாகும்.
'அபிக்குப் பிறந்த நாள்' கதை குறிப்பிடத் தக்கதாகும். ஆறாம் வகுப்பு படிக்கும் அபிக்கு பிறந்த நாள் கொண்டாட ஆசை. தான் சேமித்து வைத்த பணத்தில் சாக்லேட் வாங்கி விநியோகிக்க வைத்திருக்கிறாள். கணக்கு நோட்டு இல்லாமல் பள்ளி செல்ல மறுக்கும் கோபுவிற்காக சாக்லேட்டை கொடுத்து கணக்கு நோட்டு வாங்கித் தருகிறாள். நல்ல செய்தி. மாணவர்களுக்கு அறிவுரை. பிறந்த நாளை பிறருக்கு உதவி செய்தும் கொண்டாடலாம் என்று உணர்த்தியுள்ளார்.
விதிப்படியே வாழ்க்கை நடக்கும். விதியை வெல்ல முடியாது. நடக்க வேண்டியது நடந்தே தீரும். சில நேரம் விதி சதி செய்து விடுகிறது. இரக்கமற்று நடந்து கொள்கிறது. 'இரக்கமற்ற விதி'யைக் குற்றம் சாட்டியுள்ளார். கண்டித்துள்ளார். குடிகார மகன் திருந்தி பணம் சம்பாதித்து அம்மாவை வாழ வைக்க பிரியப்படும் போது அம்மா இறந்து விடுகிறாள். வெளியூரில் இருக்கும் மகன் அம்மாவின் இறுதிச் சடங்கிற்கும் வர முடியாத நிலை. இதனால் ஆசிரியர் 'இரக்கமற்ற விதி' என்கிறார். எல்லாம் விதி என்பது மக்கள் வழக்கம். விதியை நொந்து பயனில்லை என்பர். விதியை விமரிசித்துள்ளது கவனிப்பிற்குரியது.
தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உறவு அன்பாலானது. பாசத்தாலானது. தாயைப் பிரிந்த குழந்தையின் சோகம் சொல்லால் சொல்ல முடியாதது. எழுத்தால் எழுத முடியாதது. உணரவே முடியும். 'அலாவதீனும் குட்டி நாயும்' கதை  அற்புதமானது. அடர்த்தியானது. தாயைப் பிரிந்து அத்தை வீட்டில் வாழும் அலாவுதீன் ஒரு குட்டி நாயை எடுத்து வளர்க்கிறான். அம்மா நாய் வெளியில் குரைக்க குட்டி நாய் உள்ளிருந்து குரைக்கிறது. அலாவுதீன் தன் நிலையை உணர்ந்து குட்டி நாயை விட்டு விடுகிறான். அம்மா நாயுடன் குட்டி நாய் சேர்ந்து விடுகிறது. அலாவுதீன் அம்மாவை நினைத்து ஏங்குவதாக கதையை முடித்து வாசகர்களைக் கலங்கச் செய்த விடுகிறார் அன்பு சிவா.
'அபியும் நானும்' என்று தொகுப்பின் தலைப்பிலான கதை இயல்பான ஒரு கதை. தாய் வீடு என்றால் பெண்களுக்கு எப்போதுமே ஒரு பிரியம்தான். விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். மாமியார் வீடு என்றால் மனம் விரும்பாது. இந் நிலையை விளக்கும் கதையாக அமைந்துள்ளது. அபியும் நானும் தலைப்பில் காணும் இணைப்பு, பிணைப்பு கதையில் இல்லை.
அன்பு சிவாவின் கதை முயற்சி வரவேற்பிற்குரியதாக உள்ளது. ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு தளத்தில் அமைத்துள்ளார். வாழ்வில் அன்றாடம் காணும் நிகழ்வுகளையே படம் பிடித்துக் காட்டியுள்ளார்.  கதைகளை எச் சிரமமும் இன்றி நேர்க் கோட்டிலேயே அமைத்துள்ளார். ஓர் எதார்த்தமான சிறுகதை எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே  எழுதப்பட்டுள்ளன கதைகள். மனித உணர்வுகளை முன் வைத்துள்ளது. மனித நேய அடிப்படையே கதைகளில் முக்கியமாக காணப்படுகின்றது. இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் அனுப்பப்பட்டும் ஒன்று கூட பிரசுரமாகவில்லை என்று ஆசிரியர்  ஓர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதழில் பிரசுமானாலே நல்ல கவிதை என்பது தவறான எண்ணம். கவிஞர் பாரதி வசந்தன் இதழுக்கு அனுப்பப்பட்டு மறுக்கப்பட்ட கவிதைகளைத் தொகுத்து 'தலை நிமிர்வு' என்னும் தொகுப்பை வெளியிட்டுள்ளது இங்கு நினனவிற்கு வருகிறது.
ஒரு தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளுமே நல்லதாக அமைந்து விடாது. இத் தொகுப்பிற்கு வாழ்த்துரை வழங்கிய எழுத்தாளர் நாஞ்சில் நாடன் "இந்த கதைகளை எழுதியவன் என்ற நிலையில் இருந்து அல்லாமல் விலகி  நின்று வாசித்தால் தனது கதைகள் தொடக்கக் கட்டத்தில் இருப்பதை அவர் உணர்ந்து கொள்ளலாம்" என்று சுட்டிக் காட்டியுள்ளார். 'அபியும் நானும்' ஒரு நல்ல தொடக்கமாகவே அன்பு சிவாவிற்கு அமைந்துள்ளது.

நிறைமதியிடம் பேச நிறைய இருக்கிறது

திறந்து கிடக்கும் வீடு
உள்ளே நுழையும் காற்று
பேச நிறைய இருக்கிறது - கவிஞர் பாரதி வசந்தன் எழுதிய ஹைக்கூ. இடம் பெற்ற தொகுப்பு 'பேச நிறைய இருக்கிறது'. தொகுத்தவர்கள் நிலா கிருஷ்ணமூர்த்தி - விடியல் விரும்பி. இது வெளியான ஆண்டு 2005. நான்கு ஆண்டுகளுக்குப் பின் 'பேச நிறைய இருக்கிறது' என்னும் தலைப்பிலேயே ஒரு தொகுப்பை அளித்துள்ளார் கவிஞர் நிறைமதி. இத்தலைப்பிலேயே தொகுப்பின் முதல் கவிதை அமைந்துள்ளது.
கேசவனைக்
கடைசியாய்
ரயில் நிலையத்தில் சந்தித்தேன்.
பார்த்ததும்
எங்கிருத்தோ
ஓடி வந்து விட்டான்.
நிறைய பேசினான்.
ரயில் தாமதம்
காத்திருந்ததால் நேரிட்ட சலிப்பு
மகளைக் காண இருக்கும் ஆர்வம்
சரியாய் நான் பேசவில்லை.
அதுதான் கடைசி முறை என
தெரிந்திருந்தால்
நிறையப் பேசியிருப்பேன்.
கேசவனிடம்
பேச
நிறைய இருக்கிறது. 
கவிஞர் பாரதி வசந்தன் இயற்கையை வைத்து எழுதியுள்ளார். கவிஞர் நிறைமதி மனிதரை வைத்து எழுதியுள்ளார். 'கேசவனிடம்' மட்டுமல்ல ஒவ்வொருவரிடமும் பேச நிறைய இருக்கிறது. வாய்ப்புகளே குறைவாக உள்ளன. ஒற்றைத் தன்மையில் நேர்ப் பேச்சில் அமைந்திருந்தாலும் சிறப்பாயுள்ளது. சிந்திக்கச் செய்கிறது. 'தொடர்பு எல்லைக்கு அப்பால்' கவிதையிலும் 'நிறைய பேசனும்' என்கிறார். ஆனால் முடிவில்
பேசிக் கொண்டேயிருந்தார்
யார் யாருடனோ
செல் பேசியில் என்று வருத்தப்பட்டுள்ளார். வருத்தத்திலும் ஒரு நியாயம் உள்ளதை மறுப்பதிற்கில்லை. அலைபேசி மனிதர்களை பிரிக்கிறது என்பதே மெய்.
ஈரம் பட்டு இரும்பு துரு பிடிப்பது ரசாயண மாற்றம். 'ரயில் பெட்டியின் ஜன்னல் கம்பியில் துரு ஏரிய கறை'யைக் கண்ட கவிஞருக்கு கற்பனை வேறாக விரிகிறது.
பிரிவுத் துயரில்
யார் யாரோ
வடித்த கண்ணீரின்
அடையாளமாய் என்கிறார்.
பயணம் சிலருக்கு மகிழ்ச்சியளித்தாலும் பலருக்கு துயரத்தையே அளிக்கிறது. அன்னையை, தந்தையை, அண்ணனை, தம்பியை, தங்கையை. ,தாத்தாவை, பாட்டியை, காதலியை அல்லது காதலனை,நட்பை என எவராவது ஒருவரை பிரிய நேரும் போது அது துயராக மாறி கண்ணீர் வடிக்கச் செய்கிறது. இப்'பிரிவுத் துயரம்' என்னும் கவிதைக் கவிஞரின் கற்பனைக்கு 'அடையாளமாய்' உள்ளது. மேலும் சில 'உடையாளங்களை'யும் காட்டியுள்ளார். 'சுதந்திரம்(?)' கவிதையில்
ஆண் சுதந்திரத்தின் அடையாளங்களாய்
மரம், குப்பைத் தொட்டி.
குட்டிச் சுவர், சாக்கடை.
கதவோரம்
உள்ளன என்கிறார். ஆண்களின் மீதான விமரிசனமாக வெளிப்பட்டுள்ளது. சிறுநீர் கழிக்கும் வாய்ப்பை ஆண்கள் தவறாக பயன் படுத்திக் கொள்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். நாய்களும் இவ்வாறுதானே கழிக்கின்றன என்பது நினைவிற்கு வருகிறது. 'சுமைகளாய்'க் கவிதையிலும் பல அடையாளங்களைப் பட்டியலிட்டுள்ளார். அதனால் ஏற்படும் ஆபத்துக்களையும் விவரித்துள்ளார்.
ஆண் அடையாளம்
சீண்ட சொல்கிறது
பெண் அடையாளத்தை.
அதிகாரி அடையாளம்
ஏவலாளாய் மாற்றுகிறது
சக பணியாளர்களை.
ஆண்டான் அடையாளம்
தீயாய் வெந்தது
வெண் மணியில்.
அரசு அடையாளம்
காயாத சுவடுகளாய்
தாமிர பரணியில்.
சாதி அடையாளம்
'பீ' யாய் நாறுகிறது
திண்ணியத்தில்.
மத அடையாளம்
மசூதியை இடித்தது
அயோத்தியில்.
ஏகாதிபத்திய அடையாளம்
வன்முறையாய்
ஈரான் ஈராக்கில்.  கவிஞர் அடையாளங்களை விமரிசித்துள்ளார். கண்டித்துள்ளார். தகர்த்துள்ளார். அடையாங்கள் அழிந்து அனைவரும் சமம் என்னும் நிலையிலேயே வாழ வேண்டும் என்கிறார். 'அடையாளம்' பற்றியதான இக்கவிதைகள் கவிஞரை அடையாளப் படுத்தும்.
'சிவகாசி விஜியும் டைடல் பார்க் சரண்யாவும்' கவிதை இத்தொகுப்பில் குறிப்பிடத்தக்க ஒன்று. இரண்டு வித உலககளைக் கண்முன் காட்டுகிறார். தீப்பெட்டித் தொழிற்சாலையிலிருந்து பெண் விடுபட்டு கல்வி கற்று சுதந்திரமாய் வாழ வேண்டும் என்று போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்கள் படித்தாலும் தொழில் நுட்பத் துறையில் ஓர் அடிமையாகவே இருக்க வேண்டியுள்ளது. பெண்களின் நிலை மாறாமலே உள்ளதைக் கவிதை உணர்த்துகிறது. சிவகாசி விஜியை பற்றி பேசும் போது வட்டர மொழியையும் டைடல் பார்க் சரண்யாவை குறித்து எழுதும் போது தமிங்கில மொழியையும் கையாண்டிருப்பது நல்ல யுத்தி.
தெற்கிலிருந்து வடக்கையும் வடக்கிலிருந்து மேற்கையும் மேற்கிலிருந்து கிழக்கையும் கிழக்கிலிருந்து தெற்கையும் என இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் இணைக்கிறது நெடுஞ்சாலை. தூரம் நீண்டிருப்பினும் நேரம் குறைவாக. கடக்க ஏதுவாக உள்ளது. இரண்டு வழி நான்கு வழி பாதைகளாகி ஆறு வழி பாதைகளாகி வருகிறது. 'சாலைக்கு அங்குட்டு' இருக்கும் ஆத்தாவைக் காண முடியாமல் வருந்தும் கவிஞரின் குரல் 'குறுக்கே ஓடும் தே.சா. ' காட்டியுள்ளது. ஏக்கத்துடனே கவிதை பயணிக்கிறது. எதார்த்த தொனியிலேயே வெளிப்படுத்தியுள்ளார்.
மரணம் மனிதனை விரட்டிக் கொண்டே இருக்கிறது, மரண பயமும் மனிதனை விடுவதில்லை. துரத்திக் கொண்டே இருக்கிறது. பயத்தை பாம்பாக திரித்து கவிஞர் எழுதியுள்ள கவிதை 'பாம்பா? பயமா?'
மரணம் மட்டும்
தொடரும் போல
பாம்பு பற்றிய
பயமும் அவஸ்தைகளும் என்கிறார். இக்கவிதை 'சூரியப் பிறைகள்' தொகுப்பில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய
பயம்
ஊர்ந்து கொண்டிருக்கும் - இது
பாம்பு போன தடம் என்னும் ஹைக்கூவை மனத்தில் 'ஊர்ந்து' சென்றதை உணர முடிகிறது.
சாதாரண நிகழ்வுகளுக்கும்
வண்ணம் பூசி விடுகின்றன
மரணங்கள் என மரணம் குறித்தே 'மாறும் வண்ணங்கள்' கவிதையில் எழுதியுள்ளார். 'யதார்த்தம்' கவிதையிலும் மரணத்தையே முன்வைத்துள்ளார்.
தொலைபேசியில்
நண்பனின் மரணச் செய்தி
கேட்ட கணம் நிலை குலைந்தேன்
உடம்பு முழுவதும் பதற்றம்
அடுத்த கணமே
நடைமுறைச் சிந்தனையில்
எப்ப எடுக்கிறாங்க?
என்றேன். இன்றைய நடைமுறை இதுவே. எதாரத்த நிலையை எடுத்து காட்டியுள்ளார்.
ஒரு மரணம்
நிகழ்ந்தது
வழக்கம் போல
எல்லோருக்கும்
சொல்லி அனுப்பப்பட்டது
மறுநாள்
வழக்கம் போல்
எல்லாம் நிகழ்ந்தது என்று பூமா ஈஸவரமூர்த்தி 'தினசரி கொஞ்மாவது' தொகுப்பில் எழுதியதை நினைவு கூரச் செய்தது. கவிஞரே 'கருமமே கண்ணாய்' கவிதையில்
இனிய பயணம் அமையட்டும்
இறுதி ஊர்லத்தையும்
வாழ்த்தி நிற்கிது
மாநகராட்சிப் பலகை என மரணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வரவேற்க வேண்டும் என்கிறார். மரணம் குறித்த அச்சத்துடன் ஒரு கவிதையில் கூறியவர் முடிவில் மரணத்தை எதிர் கொள்வது சிறப்பு என்கிறார். மரணம் பற்றிய பல்வேறு சிந்தனைகளை மனத்தில் 'புதைத்து'ள்ளார். 'மறக்க'வும் மக்கள் கையாளும் வழிகளையும் வரிசைப் படுத்தியுள்ளார்.
'கேள்வி' சமுகத்தின் முன் பல 'கேள்வி'களை வைக்கிறது. சாதியற்ற சமு்கத்தை உருவாக்குவோம் என மாணவர்களுக்கு அறிவுரைக்கிறது. ஆனால் பள்ளியில் சேர்க்கும் போதே 'சாதி' தேவைப்படுகிறது. கலப்பு மணம் புரிந்தவரும் சலுகைக் கிடைக்கும் சாதியில் பிள்ளையை அடையாளப்படுத்துவதை விமரிசிக்கிறது. "ஜாதின்னா என்னப்பா"? என சிறுவன் வினவியிருப்பது சாதி வெறியர்களின் கன்னத்தில் விழுந்த அறை. 'சித்திரைத் திருவிழா'வில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்துள்ளார். உண்டு கொழுத்த உயர்சாதியினரைச் சாடவும் தவறவில்லை.
சமையல் செய்வது பெண்ணின் கடமை என்று ஆண் சமூகம் காலங்காலமாக முடிவு செய்து வைத்துள்ளது. சமையல் அறை பெண்களுக்கு சிறையாகவே உள்ளது. பெண்கள் சமையலறையில் படும் சிரமங்களும் அதிகம். 'மறைபொருள்' மூலம் பெண்கள் சமையலறையில் இருந்து விடுபட வேண்டும் என்கிறார். ஆண்கள் சமையல் செய்ய வேண்டும் என்கிறார். தன்னையே உதாரணமாக்கிக் காட்டியுள்ளார்.
தொடர்ந்து
பஞ்சாராம், கூண்டு
தொட்டி, சிறுகுடில்
விடுதலைக் கெதிராய்
எத்தனை கருவிகள் என தெரிவித்து இவை 'உடைபடுமா?' என்று வினவியுள்ளார். ஆர்வத்தை, ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பஞ்சாரம்,கூண்டு, தொட்டி. சிறுகுடில் வரிசையில் வீட்டையும் சேர்த்துக் கொள்ளாலம். அல்லது வீடும் உள்ளடக்கியுள்ளதாக எடுத்துக் கொள்ளலாம். பெண் விடுதலைக்கு ஆதரவாகவும் எடுத்துக் கொள்ள் வேண்டியுள்ளது.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பெயர் இருக்கும். பெயருக்கும் மனிதருக்கும் பொருத்தம் இருக்காது. சிலருக்குப் பிடித்திருக்கும். சிலருக்கு சலிப்பு ஏற்படும். பெரியவர்கள் வைத்தது எனினும் மாற்றிக் கொள்ளும் உரிமை உண்டு. கவிஞருக்கு இயற்பெயரில் ஓர் அலுப்பு ஏற்பட்டதன் விளைவு 'பெயரில் என்ன இருக்கிறது'. கவிதைத் தலைப்பிலேயே வருத்தம் தெரிகிறது.
கவிதை எழுத மட்டும்
களவாடிய பெயர்
கைவசம் உள்ளதால்
பிழைத்தேன் என இறுதியில் புனைப்பெயரில் ஆறுதல் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
கிளைகள் வெட்டபட
தற்காலிகமாய்
நிறுத்தப்படுகின்றன சண்டைகள்
வேர்கள்
பற்றிய
பிரக்ஞை
இல்லாமலேயே என்று முடியும் கவிதை அண்டையாருடனான சண்டையைப் பேசுகிறது. தற்காலிகமாக சண்டை நிறுத்திவதில் கவிஞருக்கு உடன்பாடில்லை. மூலம் தெரிந்து வேர்கள் அறித்து பிரச்சனை தீர்க்கப் பட வேண்டும் என்பது அவரின் விரும்பமாயுள்ளது. இதன் தலைப்பு 'அதிபர் பிரதமர் சந்திப்பு'. அண்டை வீடு என்பது அண்டை நாட்டின் குறியீடு. நல்லுறுவு வேண்டு்ம் என்கிறார்.
தமிழ் மொழி மிக இனிமையானது. மிக பழமையானது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தொடக்கம் முதலே தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் போராடி வருகின்றனர். ஆங்கில கலப்பால், ஆதிக்கத்தால் தமிழ் தடுமாறுகிறது. பேசுபவர்களும் குறைவெனினும் சரியாக உச்சரிக்க வேண்டும். வட்டார வழக்கு விலக்கு. தவறாக உச்சரித்தாலும் தமிழ் வாழ்கிறது. 'மீண்டும் மீண்டும்' கவிதையில்
சாம்பல் பறவை போன்றனது
தமிழ்
செய்தி வாசிப்பார்களின்
தொடர் தாக்குதலிலும்
மீண்டும் மீண்டும் உயிர்த்த படி என்கிறார். தமிழ் சாகாவரம் பெற்ற மொழி. எந்நிவையிலும் இறவாது. செய்தி வாசிப்பாளர்களதை தாக்கியதுடன் தமிழ் மொழியின் மீதான பற்றையும் காட்டியுள்ளார். ஆயினும் 'ஆகச் சிறந்தது'வில் ஆக ஆங்கிலம் உள்ளது என்பது முரண். 'ஆகச் சிறந்தது'தமிழ் மட்டுமே. இறுதியாக
ஆகச் சிறந்தது
எங்கேனும் உண்டா? என்னும் வினாவை முன் வைக்கிறார். வாசகரைச் சிந்திக்கச் செய்கிறார். இத்தொகுப்பில் 'ஆகச் சிறந்தது'ஆக இக்கவிதையைக் குறிப்பிட முடியும்.
'அம்மா வளர்த்தவை'களில் சாமந்தி, ரோஜா, செம்பருத்தி, அடுக்குமல்லி, கொய்யா, தென்னை, மா, கருவேப்பிலை, முருங்கை, பூசணி, சுரை, அவரை என்பவை
பூத்தும் காய்த்தும்
குடும்பத்திற்காய் இருக்க
சாலையில் நட்ட வேப்பமரம்
விரிந்த நிழலும்
குளிர்ந்த காற்றும்
ஊருக்காய் வழங்கி
உன்னதமாய் வாழ்கிறது என்கிறார். குடும்பத்துக்காக வாழ்வதை விட ஊருக்காக வாழ்வதே சிறப்பு என்கிறார். செடி, கொடி, மரம் வளர்ப்பதில் அம்மாவிற்கு உள்ள பிரியத்தைக் கூறி அம்மா மீதான தன் பிரித்தையும் கூறியுள்ளார். 'அம்மா வளர்த்தவை'களில் கவிஞரும் ஒரு வேப்ப மரமாய் ஊருக்கு வழங்கி உன்னதமாய் வாழ்ந்து வருகிறார்.
வாழக்கையை ஒவ்வொருவரும் ஒவ்வொன்றுடன் ஒப்பிடுவர். பெரும்பாலும் பெரும் பாலோர் வாழ்க்கைக்கே ஒப்பிட்டுள்ளனர். பயணத்துக்கு தொடக்கம் முடிவு போலவே வாழ்க்கைக்கும் உண்டு. 'பயணங்கள்' கவிதையில்
சிறு பயணங்களின் தொகுப்பாய்
வாழ்க்கைப் பயணம் என்று கவிஞரும் வாழ்க்கையோடு பயணத்தை ஒப்பிட்டுள்ளார். தொடர்ந்து 'வாக்கிங்'கில்
சிறு பயணத்தில்
தொடங்குகிறது
தினசரி
வாழ்க்கை என்கிறார். இது ஒரு 'கருத்து' ஆகவே இருப்பினும் வாழக்கையைப் பற்றிய ஓர் அபிப்பிராயத்தையே வெளிப்படுத்தியுள்ளார்.
'தண்டவாளங்கள்' கவிதை ஒரு குறிப்பிடத்தக்க கவிதை. இருவேறு கொள்கைகள் இணைய முடியாது என்கிறார்.
வாழ்க்கையைப் பாடுகிறனே
மாயத்தைப் பாட பணிக்கிறார்கள் என தன் கோபத்தை, வருத்தத்தை, நியாயத்தை எடுத்து உரைக்கிறார். தான் ஓர் எதாரத்தவாதி என இக்கவிதை வாயிலாக உறுதி செய்கிறார். இதனால் 'நேர்க் கோட்டுப் பயணம்' செல்வதற்கு வாய்பில்லை என்கிறார். எனினும் 'தண்டவாளங்கள்'என்னும் தலைப்பு மாற்று சிந்தனையை உண்டாக்குகிறது. இரு வேறு கருத்துக்களின் மூலம் எந்த 'பயணத்தைக்' குறிப்பிடுகிறார் என்னும் வினாவை எழச் செய்கிறது.
'வீடுகள் தோறும்' அழகிய மீன்கள், காதல் பறவைகள், மூங்கில் குருத்துகள், பணச் செடி வளர்க்க படுவதை சமீபங்களில் காண முடிகின்றது. இதற்குத் காரணம் ரசிப்போ, நேசிப்போ அல்ல.
வாஸ்து சாஸ்திரம் போற்றும் 'வஸ்துகள்' இவை. மூடநம்பிக்கை எவ்வாறெல்லாம் வீட்டிற்குள் நுழைந்து மனிதர்களை ஆட்டுவிக்கிறது என்னும் நடப்பைக் காட்டியுள்ளார். மூட நம்பிக்கையை முடக்க முயன்றுள்ளார்.
ஒரு கவிஞருக்கு அடிப்படையாக இருக்க வேண்டியது சமூக கரிசனம். கவிஞர் நிறை மதியிடம் சமூக கரிசனம் உள்ளது என்பதற்கு சான்றாக பல கவிதைகள் உள்ளன. சாதியத்தை எதிர்த்துள்ளார். பெண்ணியத்துக்கு ஆதரவளித்துள்ளார். தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கப்பட்டோருக்கும் குரல் கொடுத்துள்ளார். முற்போக்குச் சிந்தனைகளை வாசக மனத்தில் தூவி ஒரு சமூக முன்னேற்றக்கு, மாற்றத்துக்கு வழி வகுத்துள்ளார். கவிஞரின் சமூக உணர்வையும் தாண்டி தனி மனித உணர்ர்வுகளையும் பிரச்சனைகளையும் தன்னையே முன்னிறுத்தி பேசியுள்ளார். பல விதமான மனிதர்களையும் அடையாளம் காட்டியுள்ளார். கவிதைகளை நேர்ப் பேச்சிலேயே அமைத்து ஒரு நெருக்கத்தை உண்டாக்கியுள்ளார். கவிதைகளில் காணும் மென்மை வாசக மனத்தை வருடிக் கொடுக்கிறது. உள்ளடக்கமும் வெளிப்பாடும் கவனத்தை ஈரக்கிறது. வடிவமைப்பில் கவிஞர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 'பேச நிறைய இருக்கிறது' தொகுப்பு குறித்து 'பேச நிறைய இருக்கிறது'. அனைத்தையும் பேசி விடுவது வாசிப்பிற்கு வழிவகுக்காது. கவிஞர் நிறைமதியிடம் கவிதையாக்கும் ஆற்றல் நிறையவே இருக்கிறது. அவரிடம் 'எழுத நிறைய இருக்கிறது' என தொகுப்பு உறுதிச் செய்கிறது. எழுத வாழ்த்துக்கள்.

தமிழில் சில முதலிதழ்கள்

தமிழின் முதல் சிற்றிதழ் 'தமிழ் மெகசின்'. வெளியான ஆண்டு 1831. இன்று வரை எண்ணற்ற சிற்றிதழ்கள் வந்துள்ளன. ஒவ்வொரு சிற்றிதழுக்கும் ஒரு பின்னணி இருக்கும். தனி மனித பின்னணியும் இருக்கும். குழுவும் இருக்கும். இயக்கமும் இருக்கும். இலக்கியம் வளர்ப்பதில் சிற்றிதழுக்கு முக்கியப் பங்குண்டு. சமூக அக்கறையும் மிகுந்தவை சிற்றிதழ்களே. சிற்றிதழ்களில் ஏராள பதிவுகள் உண்டு. சிற்றிதழ்கள் குறித்த பதிவுகளும் அவசியம் ஆகிறது.தமிழில் சிற்றிதழ்கள் என்னும் ஆய்வை நிகழ்த்தி ஒரு தொகுப்பாக்கித் தந்துள்ளார் கீரைத் தமிழன். சிற்றிதழ் சேகரிப்பாளர் தி.மா. தமிழழகனும் சில தொகுப்புகளை அளித்துள்ளார். பொள்ளாச்சி நசன் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார். விசும்பு என்னும் சிற்றிதழில் அறுபதுக்கும் மேற்பட்ட சிற்றிதழ்களை அறிமுகம் செய்தார் பொன்.குமார். அவ் வகையில் சிற்றிதழ் சேகரிப்பாளரன நவீன் குமார் 'தமிழில் சில முதலிதழ்கள்' குறித்து எழுதி யுகமாயினி இதழில் வெளி வந்த கட்டுரைகளைத் தொகுத்து தொகுப்பாக்கித் தந்துள்ளது சிற்றிதழ் உலகில் முக்கிய பதிவு.

நவீன் குமார் சிற்றிதழ்களில் மிகுந்த அக்கறைக் கொண்டவர், நல்ல வாசிப்பாளர். சிற்றிதழ்களில் எழுதி வருபவர். கண்ணதாசன் முதல் கல்வெட்டு ('க' வில் தொடங்கி 'க'வில் முடிந்துள்ளது குறிப்பிடத் தக்கது) வரை முப்பத்தொரு இதழ்களை  அறிமுகத்தியுள்ளார். "ஒரு சமுதாயத்தின் குறிப்பிட்ட காலத்தின் கலை, சமுதாய அமைப்பு, மொழி, கலாச்சாரம், தொழில், பொருளாதாரம் இவைகளையும், இதன் பரிமாணங்களையும் கட்டிக் காக்கும் ஆவணங்களே சிற்றிதழ்கள் " என்று 'குதிரை வீரன் பயணம்' கட்டுரையில் சிற்றிதழுக்கு விளக்கமளித்துள்ளார்.

தமிழில் சில முதலிதழ்கள் என்னும் இத் தொகுப்பில் முதலில் இடம் பெற்ற இதழ் 'கண்ணதாசன்'. இதழியல் துறையில் தனித்துவத்தையும் நடையியல் இதழ் வரிசையில் வைத்துப் போற்றப் பெற வேண்டிய இதழ் கண்ணதாசன் என்கிறார்."சமூக உணர்வோடு பின்னப் பட்ட எந்தப் படைப்புக்கும் வரலாறு உண்டு. அப்படி சிற்றிதழ்களின் வரலாற்றில் 'படித்துறை' இதழுக்கு ஓரு இடம் உண்டு" என்பது ஆசிரியர் கருத்து."வணிக உலகிற்கு அப்பாற்பட்ட ஆரோக்கியமான கலாச்சாரத்தை தமிழ் வாழ்வில் உருவாக்க முயன்ற சிற்றிதழ் 'இனி' " என்கிறார். இவ்வாறு ஒவ்வொரு சிற்றிதழ் மீதும் தன் கருத்துக்களை பதிவித்துள்ளார். சிற்றிதழ்கள் குறித்த இலக்கிய வாதிகளின் கருத்துக்களையும் மேற்கோள் காட்டி தன் கட்டுரைக்கு பலம் சேர்த்துள்ளார். "அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம், தத்துவம், கல்வி, மருத்துவம் முதலிய பல களங்களிலும் செயல் படும் இந்தச் சக்திகள் மனித வாழ்வுக்கு ஆதாரமான சூழலை அழிக்கின்றன. இந்த உண்மையை சுட்டிக் காட்டுவதும், அழிவுச் சக்திகளுக்கே எதிராக மக்களை, குறிப்பாக இளைஞர்களின் அறிவையும், உணர்வையும் தூண்டுவதும் சிற்றிதழ்களின் நோக்கம்" என்பது எழுத்தாளர் “ஞானியின் விளக்கம். 'வசந்தம் வருகிறது' இதழ் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

ஒவ்வோர் இதழுக்கும் ஒரு நோக்கம் இருக்கும். இதழின் நோக்கத்தை முழுமையாக ஒவ்வொரு கட்டுரையிலும் எடுத்துக் காட்டி இதழின் நோக்கத்தை அறியச் செய்துள்ளார். ஆசிரியரின் நோக்கத்தையும் வெளிப் படுத்தியுள்ளார்.

இதழ்களில் வெளியாகியுள்ள படைப்புகள் என்ன சொல்கின்றன, எதை மையப் படுத்தியுள்ளன என விளக்கியுள்ளார். படைப்புகள் குறித்தும் விமரிசித்துள்ளார். 'சொல் புதிது' இதழில் "சூத்ரதாரியின் சிறுகதை 'வலியின் நிறம்' படித்ததும். மனம் வலித்தது. சூத்ரதாரியின் எளிய நடையில் விறுவிறுப்பான, நேர்த்தியோடு கதை பின்னப்பட்டிருந்தது" என்பது ஒரு சான்று. 'முங்காரி' இதழில் வாசித்ததில் நேசிக்க வைத்த கவிதையாக கவிஞர் ராசீ.தங்க துரையின் 'வாழ்க்கையும் வசந்தமும்' கவிதையைக் கூறியுள்ளார்.
மூடியிருந்த போது
முட்டிக் கொண்டு வந்த காற்று
அதற்காக திறந்த போது
உள்ளே வர மறுத்தது
எனக்கான வாழ்க்கையும்
வசந்தமும் கூட
"கவிநடை எளிய இனிய நடை. நாம் அன்றாடம் புழங்கும் பேச்சு நடை. இங்கு இவரின் கைவண்ணத்தில் பொருள் பொதிந்த, நயமிக்க வரிகளாக மாறியருப்பது படைப்பாளனின் திறமையை பறை சாற்றுகிறது" என கவிதையின் மீது கருத்துரைத்துள்ளார்.

இதழ்களில் இடம் பெற்ற படைப்பாளர்களையும் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.படைப்பாளர்கள் பற்றியும் எழுதியுள்ளார். "தமிழ் எழுத்துலகம் தேச விடுதலைப் போரில் பங்கெடுத்து களைப்படைந்த நேரத்தில் படைப்புத் துறையில் பல முன்னணி எழுத்தாளர்கள் தமது சோர்ந்து போன எழுத்துக்களால் காலத்தை வீணாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் எந்தப் பரபரப்புமில்லாமல் எழுத்துத் துறையில் கால் பதித்தவர் ஜெயகாந்தன் " என கல்பனா இதழ் பற்றியதில் எழுதியுள்ளார். 'தஞ்சை மஞ்சரி' யிலோ "தஞ்சாவூர் சத்திரத்தில் சில நாட்கள் ஒதுங்கி இருந்து, அங்கு சீட்டாடவும், குடி, விபசாரத்திற்கு வரும் பெரிய மனிதர்களுக்கு 'எடுபிடி' வேலை செய்தாராம் எழுத்தாளர் ஜெயகாந்தன் " என்பது தேவையற்றது.

சிற்றிதழ்கள் நடத்துவது சிரமமான பணி. பொருளாதாரம் முக்கியக் காரணம்.  ஏராளமான சிற்றிதழ்கள் நின்று போனதற்குக் காரணியாக இருந்துள்ளன. "என் சொந்தப் பொறுப்பில் 'திரட்டு' என்ற காலாண்டு இதழை ஆரம்பித்திருக்கிறேன்.பொருளாதார பலமில்லாமல், வாசகர்கள் ஆதரவை மட்டுமே நம்பி இந்த சிற்றிதழை ஆரம்பித்திருக்கிறேன்" என்று அதன் ஆசிரியர் நா.தர்ம ராஜன் கூறியுள்ளதை சிற்றிதழாளர்களின் குரலாக பதிவித்துள்ளார். நின்று போன சிற்றிதழ்களையும் நினைவுக் கூர்ந்துள்ளார்.

ஒவ்வொரு கட்டுரை இறுதியிலும் இதழ் எங்கிருந்து வந்தன, வருகின்றன, எவர் பொறுப்பில் வருகின்றன என்னும் தகவல்களையும் தந்துள்ளார். ஒரு சில இதழ்கள் ஒன்றோடு நின்று போயுள்ளன. சில இரண்டு அல்லது மூன்று வந்தும் நின்று போயுள்ளன. நின்று போனது குறித்து நெஞ்சார வருந்தியுள்ளார்.'திரட்டு' ஒரு இதழோடு நிறுத்தப் பட்டது ஏன் என்ற வினா என்னுள்ளத்தில் வலம் வருகிறது" என்று எழுப்பிய வினா சிற்றிதழாளர்களின் உள்ளத்திலும் வலம் வரவேச் செய்கிறது. 'சங்கம்' ஒரே இதழோடு நின்று போனது தீவிர வாசகனுக்கு பெரும் இழப்பு என்கிறார்.

சிற்றிதழ்கள் பற்றியதாயினும் சிற்றிதழ்கள் தாண்டியும் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார். 'களம்' பற்றியதில் " புதிய சமுதாயத்தை உருவாக்கும் 'ஆக்க' கரமான கதைகளோடு எழுதும் எழுத்தாளர்கள் பலர் இன்று வறுமையோடுதானே மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் " என்பது கவனத்திற்குரியது. இலக்கியம் சோறு போடாது என்பதை உறுதிப் படுத்துகிறது. இலக்கியவாதிகளின் மீதான கவலையை வெளிப் படுத்தியுள்ளதன் மூலம் எழுத்தாளர்கள் நிலை மாற்றம் பெற வேண்டும் என்று விரும்பியுள்ளார்.

'வேர்கள்' இதழில் "களைகளும், உரிய கவனமும் இல்லாத 'ஹைக்கூ'க்களே நிறைந்து காணப் படுகிறது" என்றவர் 'முங்காரி' இதழில்
அரசு விழா
நேரமாகியும் தொடங்கவில்லை
புகைப்படக் காரர்களை எதிர் பார்த்து
என்று கவிஞர் பழனி இளங்கம்பன் எழுதிய ஹைக்கூவை "இன்றைய அரசு விழா நிகழ்வுகளை அழகாக படம் பிடிக்கும் கவிதை" என்று பாராட்டியுள்ளார். கவிக்கோ அப்துல் ரகுமானின் 'கவிக்கோ' இதழை அறிமுகப்படுத்தியவர் முடிவில் "மீண்டும் வானம்பாடி" என்கிறார். கவிக்கோ 'வானம் பாடி' அல்ல. அவர் 'வாணியம் பாடி'யார்.

கண்ணதாசன் முதல் கல்வெட்டு வரையிலான முப்பத்தொன்று சிற்றிதழ்களில் நவீனமும் உண்டு. பின்னவீனமும் உண்டு,.கலை கலைக்காக என்பதும் உண்டு. கலை மக்களுக்காக என்பதும் உண்டு. பாகு பாடின்றி சிற்றிதழ் என்னும் அளவு கோளை வைத்துக் கொண்டு அனைத்துச் சிற்றிதழ்களையும் 'ஒரு பார்வை' பார்த்துள்ளார். சிற்றிதழ்கள் ஒன்றே ஆசிரியரின் குறிக் கோளாக இருந்துள்ளதை அறிய முடிகிறது.

சிற்றிதழ்கள் என்பது பரவலாகவும் வாசகர்களைச் சென்றடையாது. தொடர்ந்தும் வராது. முப்பத்தொன்று சிற்றிதழ்களில் சிலவே தொடர்ந்து வருகின்றன. தொடர்வதில் 'கல்வெட்டுப் பேசுகிறது' தனித்துப் பயணிக்கிறது. தமிழில் சில முதலிதழ்கள் தொடராக வந்த 'யுகமாயினி'யும் நின்று விட்டது. சிற்றிதழ்களுக்குரிய இலக்கணங்களில் இதுவும் ஒன்றாகி விட்டது. சிற்றிதழ்களின் வழியாக அக் காலத்தை அறிய முடியும். நவீன் குமார் சிற்றிதழ்களின் காலத்தை அறியச் செய்துள்ளார். கால வரிசைப் படி சிற்றிதழ்கள் குறித்து எழுதி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். சில விரிவாக உள்ளன. சில சுருக்கமாக உள்ளன.சில அறிந்ததாக இருக்கின்றன. சில அறியாததாக இருக்கின்றன. அறியாததையும் அறியச் செய்துள்ளார். சிற்றிதழ்களை ஊக்குவிக்கும் முயற்சியாகவும் உள்ளது.  முதலிதழ்களை முன் வைத்து எழுதப் பட்டாலும் முடிவிதழ்கள் வரையிலும் பேசியுள்ளார். இதழ்கள் சேகரிப்பு பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதுடன் இதழ்கள் பற்றிய பதிவு முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நவீன் குமார் பாராட்டுக்குரியவர். அவரின் முயற்சித் தொடர வேண்டும். அதற்காக சிற்றிதழ்கள் உதவ வேண்டும்.

அம்மாக்கள் வாழ்ந்த தெருவில் ஆசு

இலக்கிய வகைமைகளில் கவிதையே மொழியின் உச்சம் ஆகும். ஆனால் ஒரு படைப்பாளியை முழுமைப் பெறச் செய்வது சிறுகதையே. சிறுகதை எழுதுவது சிரமம். கவிதை உலகில் பிரவேசிப்பவர்கள் சிறுகதைத் துறையில் ஈடுபட்டே தன் எழுத்துப் பயணத்தைத் தொடர்கின்றனர். ஐந்து கவிதைத் தொகுதிகளுக்குப் பிறகு ஆசு தந்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு 'அம்மாக்கள் வாழ்ந்த தெரு'.

'ஒரு பூவரசு மரக்கட்டில்' உடன் தொடங்கி உள்ளது தொகுப்பு. ஒரு பூவரசு மரம் இத் தொகுப்பில் ஒரு முக்கிய பாத்திரமாகவே இடம் பெற்றுள்ளது. பிறந்த வீட்டில் இருந்த போது பூவரசு மரம் கலைவாணிக்கு ஒரு தோழனாகவே இருந்துள்ளது. அவள் வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் நிறைந்துள்ளது. அம்மா பூவரசு மரத்தைத் தெய்வமாக்கிட வணங்கவேச் செய்தாள். வீசிய புயல் ஒன்றில் பூவரசு வீழ்ந்து விட துக்கம் பரவியது. வீழ்ந்த மரம் கட்டில் ஆனது. அக் கட்டிலே கலைவாணிக்குச் சீதனமாக வழங்கப் பட்டது. கணவனோ உணர்ச்சியில்லா கட்டையாகவே இருக்கிறான். பூவரசு கட்டில் பயன் படுத்தப் பட வில்லை. ஓர் இளம் பெண்ணின் சோகத்தை மென்மையாகக் கூறியுள்ளார். சங்கக் கால கவிதையொன்றில் புன்னை மரம் ஒரு பெண்ணுக்குத் தோழியாக இருப்பதாக ஒரு கவிஞன் பாடியுள்ளது நினைவிற்கு வருகிறது. இதில் ஆசிரியர் தோழனாகக் காட்டியுள்ளார். மரம் மக்களின் வாழ்வுடன் இணைந்துள்ளதையும் உணர்த்தியுள்ளார்.இத் தொகுப்பிலுள்ள சில கதைகளிலும் பூவரசு மரம் இடம் பெற்றுள்ளது.

ஒரு பூவரசு மரம் போல ஒரு மலை இடம் பெற்ற கதை 'கல் வடிக்கும் கண்ணீர்'."இந்த மலை சோறு  போடுகிறது, மக்களைக் காப்பாற்றுகிறது. பாட்டன் பூட்டன் என்று எத்தனையோ தலைமுறைகளை இந்த மலைகள் கண்டிருக்கின்றன.மலைகள் நமக்காகத் தோன்றினாலும் அதுகள ரொம்பதான் வருத்தி விட்டோம். எத்தனையோ அடிகள் , வலிகள் , தழும்புகள் . வாயிருந்தால் மனம் விட்டு அழுதிருக்கும்." என மலை குறித்து எழுதி மனதை வலிக்கச் செய்துள்ளார். மாமா மலையை நம்பி வாழ்பவர்.பிள்ளைகளுக்காக கடுமையாக உழைப்பவர்.மகள் பூப்படைந்த செய்தி கேட்டு மகிழ்ச்சியில் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்து விடுகிறார். கதையை இத்துடன் நிறுத்தி வாசகரைச் சிந்திக்கச் செய்துள்ளார். இக் கதை ஒரு குறுநாவல் அளவிற்கு விரிவாக உள்ளது.

'ஒரு பூவரசு மரக் கட்டில்' , ' கல் வடிக்கும் கண்ணீர்' போல ' கானல் தடங்கள்' கவிதையில் காடு ஒரு முக்கிய இடம் பெற்றுள்ளது. அப்பா திட்டியதால் காட்டுக்குள் செல்கிறான். அவனைத் தேடி அவன் காதலி செல்கிறாள். காட்டுத் திருடர்களால் களவாடப் படுகிறாள். அவன் வருந்துகிறான். மஞ்சள் பூ பேசுவதான பேச்சு மனத்தை வருடுகிறது.அப்பா மகன் உறவு அம்மா மகன் உறவு குறித்தெல்லாம் அழகாக பேசியுள்ளார். வாழ்க்கை என்றhல் எதையும் எதிர் கொள்ள வேண்டும் என்கிறார்.  

'கல் வடிக்கும் கண்ணீர்'க்கு எதிராக மிகச் சிறிய கதையாக உள்ளது 'விரிசல்'. எதார்த்தமாக ஒரு குடும்பத்தில் நிலவும் ஒரு காட்சியை விவரித்துள்ளார். அம்மாவிற்கும் மனைவிக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவனின் நிலையைக் கூறியுள்ளார்.

'தனி மரத்தின் நிழல்' கவிதையும் ஒரு பெண்ணை மையப் படுத்தியே உள்ளது. அம்மா இன்றி அப்பா இழந்து தனித்து இருக்கும் பெண் தன்னைக் கவர்ந்த கலையூர் நாகப்பனைத்  தேடிச் செல்ல அவன் வேறு ஒருத்தியுடன் சென்று விடுகிறான். அவள் தனித்து விடுகிறாள். இறுதியில் துணையாக கறுப்பி என்னும் நாயே உடனிருக்கிறது. தனி மரமாக நிற்கும் முத்துவின் நிலையைக் கூறி ஓர் இறுக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சின்னத் தாயி அம்மாள், ஆனந்தாயி அம்மாள், மங்கைய்மாள், வீரம்மாள், நாகம்மாள், பச்சையம்மாள்  என்னும் 'அம்மாக்கள் வாழ்ந்த தெரு' என்று ஒரு சிறுகதை. சின்னத்தாய்க்கு தன் மகள் வீரம்மாளுக்கு ஆனந்தாயின் பேரனை மாப்பிள்ளையாக்க ஆசை. நாகம்மாள் நயவஞ்சமாக  தன் நோஞ்சான் மகனுக்கு வீரம்மாளை மணமுடிக்கிறார்.நாகம்மாளே இக் கதையில் வில்லி. அவளால் எல்லா அம்மாக்களுமே பாதிப்பு. அம்மன் பெயரும் 'பச்சையம்மன் '. "அம்மாக்கள் மறைந்த பின்பும் தெரு விழித்துக் கொண்டிருந்தது.மீண்டும் எழும் அம்மாக்களுக்காக...'' என்று எழுதி அம்மாக்கள் தொடர் கதையே என்கிறார்.

நாட்டில் நிலவிய பஞ்சம் பற்றிய கதை 'பாழ்பட்ட காலத்தின் கதை'. பஞ்சத்தால் மக்கள்   கிழங்கை மண்ணிலிருந்து நோண்டி எடுத்து சாப்பிட்டு பசியைப் போக்கிக் கொள்கின்றனர். மக்களின் நிலையறிந்து மணி அடித்து மாதா கோவில் பாதிரியார் மக்களுக்கு கோதுமை வழங்குகிறார். அடுத்த முறை மணியடிக்கிறது. மக்கள் ஆவலுடன் ஓடுகின்றனர். ஆனால்  பாதிரியார் இறந்ததாக தகவல். தாது வருசத்தில் பஞ்சம் நிலவும் என்பதை வைத்து எழுதப் பட்டுள்ளது. பஞசத்தால் மக்கள் பாதித்ததான கதை படித்ததால் மனம் பாதித்தது. ஒரு பெரியவர் தனக்குக் கிடைத்த கிழங்கையும் மற்றவருக்குத் தந்து உதவுவது மனித நேயச் செயல்.

சந்தேகப் படுவதால் பாதிக்கப் படும் ஒரு பெண்ணின் நிலையைப் பற்றிய கதை 'இரண்டாவது கொள்ளி'. நாகவள்ளியின் கணவன் ராச வேலுக்கு அவள் மீது சந்தேகம். அதனால் அவன் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறான். நாகவள்ளியின் மீது ஆசை கொண்டிருந்த கணவனின் தம்பி தங்க வேலுக்கு வாழ்க்கைப் படுகிறாள். ஊர் அவளைப் பேசுவதை நிறுத்த வில்லை. ஒரு நாள் அவனும் காணாமல் போக விசாரிக்கிறாள். ஆனால் அவன் வேறு ஒருத்தியுடன் ஓடி விடுவதாகச் செய்தி. பெண் கற்பு நிலை தவறhமல் இருந்தாலும் சமுகம் விடாது என்கிறார். சந்தேகப் படுவதும் சபலப் படுவதும் ஆண்களே என்கிறார்.எவரும் இல்லாமல் பெண்ணால் வாழ முடியும் என்கிறார்.அவளே இரண்டாவது கொள்ளி வைத்துக் கொள்வது என்பது முரணாக உள்ளது.

'உயிரறிதல்'  உள்ளம் தொட்டது. நாவிதன் செல்லக் கண்ணு. அவன் மனைவி இந்திராணி. இவர்களின் ஒரே மகள் தனம். அப்பாவிற்கு மழித்தல் தொழில். அம்மா பிரசவம் பார்ப்பவள். தனம் அம்மாவிற்குத் துணையாக செல்பவள். தனம் ராசப்பனோடு பழகுவது குறித்து ஊர் தவறாக பேசுகிறது. பெற்றேhருக்கும் வருத்தம். தனம் தனியாக ஒரு பிரசவத்தைப் பார்த்து வெற்றியுடன் ஊரை விட்டு வெளியேறுகிறாள்.பிள்ளைகளுக்கும் பொறுப்பு உண்டு என்கிறது. சிசுக்களின் மீது பாசம் உள்ளவளாகவும் உள்ளாள். 

மனம் கவர்ந்த கதை 'மனுஷிகள்...மனசுகள்' . செல்லா வேலைக் காரி என்பதால் குழந்தையைத் தொட வேண்டாம் என்கிறhள் நாயுடும்மா. நாயுடும்மாவிற்கோ புற்று நோயால் மார்பகம் அகற்றப் பட்டதால் குழந்தைக்குப் பால் தர முடியாத நிலை. குழந்தை பசியால் அழ செல்லா தன் பால் தந்து பசியாற்றுகிறாள். நாயுடும்மாவோ 'தாயுக்கு தாயானவளே' என நெகிழ்கிறார். வாசகரையும் நெகிழச் செய்கிறது. செல்லா உயர்ந்து நிற்கிறாள்.

மீனை பிடித்து விற்பனைச் செய்து வாழ்வர் சிலர். மீனை பிடித்து குழம்பு வைத்தோ வறுத்தோ சாப்பிடுவர் சிலர். ராமசாமியும் மாரியப்பனும் மீனைப் பிடித்து சாப்பிட ஏரிக்குச் செல்கின்றனர். விரால் மீன்கள் சிக்காமல் விளையாட்டுக் காட்டுகின்றன. இறுதியில் ஒன்று சிக்குகிறது. அதுவும் குஞ்சுகளை பொரித்ததாக உள்ளது. பரிதாபப் பட்டு ஏரியிலேயே விட்டு விடுகின்றனர். வீட்டில் அம்மா மீன் வறுத்து வைத்திருந்தும் அவனுக்குச் சாப்பிட மனமில்லை. உயிரினங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்கிறார்.

'ஒரிதழ் பூ' மணக்கிறது. ராசாத்திக்கும் பூவிற்குமான உறவைக் காட்டுகிறது. பூ மீதான அவளின் பிரியத்தை வெளிப் படுத்தியுள்ளார்." ராசாத்தியின் மனசெல்லாம் அந்தப் பூவைச் சுற்றியே வட்டமிட்டது " என்று எழுதியதற்கு ஏற்ப கதை முழுதும் அந்தப் பூவைச் சுற்றியே வந்துள்ளது.

'தற்கொலைக் காரனின் புதிய வெளிச்சம்' தற்கொலைச் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டியுள்ளது. வாழ்விற்கு ஒரு புதிய வெளிச்சத்தைத் தந்துள்ளது.

'இசை வழியும் உடலின் சித்திரம்' காமத்திற்கும் அதிலிருந்து விடுபடுதலுக்கும் இடைப் பட்ட ஒரு மனத்தின் போராட்டம் ஆகும். காணும் எல்லாவற்றிலும் செண்பகாவையே காண்பது அவளின் மீதுள்ள ஈர்ப்பாகும்.   

ஆசு ஒரு நல்ல கவிஞராக அறியப் பட்டவர். 'அம்மாக்கள் வாழ்ந்த தெரு' வில் ஒரு நல்ல கதைஞராகியுள்ளார். கதை சொல்வதிலும் ஒரு புதிய யுத்தியைக் கையாண்டுள்ளார்.கதையில் இருக்கும் எதார்த்தம் கதை சொல்லலில் இல்லை. ஆசு ஒரு கவிஞர் என்பதால் கவித்துவமான வரிகள் சற்று மேலோங்கியே உள்ளது. இயற்கையை அதிகம் இடம் பெறச் செய்துள்ளார். மனித உணர்வுகளை மனித உறவுகளை கதைகளின் மூலம் அறியச் செய்துள்ளார்.மனிதர்கள் மனத்தில் ஈரம் உள்ளவர்களாக உள்ளனர்.இயற்கையுடன் இணைந்து வாழ்பவர்களாகவும் நிஜ மனிதர்களாகவும் இருப்பது குறிப்பிடத் தக்கது. குடும்பத்தினரிடையேயான பாசத்தை. பாசப்  போராட்டத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். காதலையும் பேசியுள்ளார். கிராமங்கள் அருகி வரும் அழிந்து வரும் இச்சூழ்நிலையில் ஒவ்வொரு கதையிலும் கிராமத்தையே மையப் படுத்தியுள்ளார்.  இருபத்தொன்றாம் நூற்றhண்டிலும் தொழில்நுடபம் வளர்ந்த வேளையிலும் அதன் பாதிப்பின்றி இன்னும் மக்கள் உள்ளனர் என்கிறார். வாழ்க்கை அனுபவத்தில் கற்றதையே கதையாக்கித் தந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வாசிப்பவருக்கும் ஒரு நல்ல அனுபவத்தை ஏற்படுத்துகிறது.