லாந்தர் தின்றது போக மிச்சத்தைக் கூறும் ஸ்நேகிதன்

கவிதை பலரால் எழுதப்படுகிறது. வெளிப்பாட்டில், கட்டமைப்பில், வரியமைப்பில் வித்தியாசத்தைக் காண்பிப்பவரே பேசப்படுவர். அத்தகையதொரு கவிஞர் ஸ்நேகிதன். அவரின் தொகுப்பு 'லாந்தர் தின்றது போக மிச்சம்'.
பாம்பு நுழைந்து கொண்ட
தன் புற்றுக்கு
வெளியே நின்று கரையும்
கரையான்களுக்கு
நூலை சமர்ப்பிப்பதிலே தன் தனித்தன்மையைக் காட்டியுள்ளார், கரையான் புற்றெடுக்க கருநாகம் குடியேறும் என்பது பழமொழி, ஆனால் கவிஞர் கரையான்கள் விலகி நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுவுமொரு குறியீடாக உள்ளது, ஆதிக்க சக்திக்கு எதிரானது.
'நானற்ற என் அறை' என்பது முதல் கவிதை,
எண்ணைய் காணாத
தாழ்ப்பாள்
கிறீச்சிட்டுத் திறக்கையில்
நேற்றிரவு பார்த்த அந்தரங்கங்களை
கிசுகிசுத்துக் கொண்டிருந்த
சுவர்கள்
சட்டென மௌனமாகி
எதிரெதிரே நின்று கொண்டன
என பாலியல் குறித்து பேசியுள்ளார். அந்தரங்கங்கள் குறித்து கிசுகிசுப்பது மனிதர்களுக்கிடையேயும் உள்ளது. இதுவொரு வகையான கிளர்ச்சியே. அடுத்த கவிதை 'தேய்ப்பான்களுக்கு'.
ஜன்னலோர இருக்கையை
கால்கள் சுயமற்றுப் போன
கிழமொருத்திக்கு
தாரை வார்த்து நிற்கையில்
பின்புறம் நிறைகிறானொருவன்
தோள்கட்டையில்
தகிக்கிறது
பெருமு்ச்சின் நரகம்.
காலணிகளைப்
பிரயோகித்து விடலாம்தான்
அதைக் காட்டிலும்
பிடுங்கியெறிந்து விட முடிந்தால்
பின்புறம் உறுத்தும்
ஆண் குறியை
என பேருந்தில் பெண்களை உரசும் ஆண்களை அடையாளப்படுத்துகிறது.'தேய்ப்பான்களுக்கு' என அஃறினையாக்கியுள்ளார். இதுவே ஒரு சாடலாய், தாக்குதலாயுள்ளது.
யாரும் தந்து விடாத
கைவிலங்கின் சாவி
இனி தேவையில்லை
இற்றுக் கிடக்கிறது
பழங்காலத்திரும்பு.
முன்பு போலன்றி
நிறை மகளிர்க்கு வாய்த்திருக்கிறது
'பத்தாது இன்னும் வேகமா'
என்ற குரல்
புணர்வின் பொழுதுகளில்
என பாலியல் தொடர்பாய் பெண்ணியம் பேசியுள்ளார்.
கலவியின் களைப்பில்
அயர்ந்து உறங்கியிருப்பாய்
காலையில் கணவனுக்கு
என்ன சமைக்கலாம்
என்ற யோசனையுடன்
என 'பின்பொரு இரவில்' கவிதையிலும் பெண்ணியம் பேசியுள்ளார். 'ஓ என் யாசரி' லும்
திறந்து கிடக்கும்
யோனிகளிலெலாம்
கழித்து விட
இந்திரியத்துடன்
அலைகிறது வல்லாறுகள்
என காமம் கொண்டலையும் வெறியர்களை கண்டித்துள்ளார். 'திறந்து கிடக்கும்' என்னும் சொல்லில் ஓர் ஊசலாட்டம் தெரிகிறது.
கட்டிலின் மூலையில்
கசங்கிக் கிடக்கிறது தலையணை
என 'கானல் இரவு' கவிதையிலும்
காமம் தீர்ந்த இரவுகளில்
அதிர்ந்தோய்ந்த கட்டிலோரம்
சிதறிக்கிடக்கிது
செயற்கைத் தனங்களின்
மிச்சங்கள்
என 'அதற்காகத்தான் காத்திருக்கிறேன்' கவிதையிலும் புணர்ச்சிக் குறித்தே எழுதியுள்ளார். கவிங்ருக்குள் பலவித தாக்கத்தை புணர்ச்சி ஏற்படுத்தியுள்ளது என கவிதைகள் உணரச் செய்கிறது. புணர்ச்சியிலும் தீர்ந்தது, தீராதது என பல வகைகள் உண்டு.
மனிதர்க்குள் காதல் விழைவது இயல்பு. காதல் கல்யாணத்தில் முடிந்தாலும் வேறு வேறு நபர்களுடன் முடிந்து விடுகிறது. இப்படிபட்டவர்கள் சந்தித்தால் நிகழ்வதை 'பிறிதொரு சந்திப்பில்' இயல்பாக காட்டியுள்ளார்.
பிரிதுயருக்குப் பின்
ஒரே கூரையின் கீழ்
எதேச்சையாய்
ஒதுக்கியிருக்கிறது மழை
ஓட்டுத் தண்ணீருக்கு
கைகளை நீட்டும்
இரட்டை ஜடை குழந்தை
உன்னுடையதாகத்தானிருக்கும்
உன்னை கவனித்ததை
கண்டுக் கொண்டதாய்த் தெரியவில்லை
என் மனைவியும்
மழை ஓய்ந்ததும்
பேசிக் கொள்ளாமலே நகர்ந்தோம்
முன்பொரு காலத்தில்
அதிகமாய்ப் பேசிவிட்டிருந்த நாம்
எவ்வளவு
கண்ணீர்த் துளிகள் கரைந்திருக்கும்
மழையோடு மழையாக
இப்படி
என ஓர் அருமையான சூழ்நிலையைக் காட்சிப்படுத்தியுள்ளார். கண்ணீர்த் துளிகளைக் காட்ட மழையை நன்கு பயன்படுத்தியுள்ளார்.
'லாந்தர் தின்றது போக மிச்சம்'இருளாகவே இருக்கும், இருள் இத்தொகுப்பின் அநேக இடங்களை ஆக்ரமித்துள்ளது. 'தரிசு நீட்சிகள்' கவிதையில்
இன்னும்
எதைக் காக்க நீளுகிறது
இந்த இரவு
திரௌபதியின்
சேலையைப் போல
என சிந்தனையை நீளச் செய்கிறார். திரௌபதியின் சேலையைப் போல என ஒப்பிட்டு இரவின் நீளத்தைச் சுட்டியுள்ளார். 'பகலைக் கடக்கும் அமானுஷ்யங்கள்' கவிதையில்
அமானுஷ்யங்களும்
இரவுகளும்
சார்ந்தேதானிக்கிருக்கின்றன
என இரவைக் குறிப்பிட்டுள்ளார். கவிஞரும் இரவு சார்ந்தேயுள்ளார்.
எப்படி முடிகிறது
அமானுஷ்யங்களால்
ஓரிரவிலிருந்து
பிறிதொரு இரவைச் சேர
இடைப்பட்ட பகலையும் தாண்டி
என முடிகிறது கவிதை. அமானுஷ்யங்களைக் குற்றம் சாட்டடியுள்ளார்.
இருந்தும் நீளும்
யாருக்குமில்லாத உம் கதைகளை
சபித்தபடி நகர்கிறது
இரவுகளும் தொடர் பகலும்
என்கிறது 'பராக்கிரமங்கள்' கவிதை. இதிலும் இரவு நீளும் என்கிறார். 'லாந்தர் தின்றது போக மிச்சம்' கவிதையில்
தேடி அயர்ந்து
விடியுமென்ற நம்பிக்கையில்
புரள்கையில்
லாந்தர் தின்றது போக
மிச்சமிருந்து
இரவு
என்கிறார். இத்தொகுப்பை வாசித்து முடித்து பின் மனம் இரவுக்குள்ளே சஞ்சரிப்பதை உணரமுடிகிறது. 'இருள்வெளிகளிலான வேட்டை நாய்கள்', 'கானல் இரவு, 'பின்பொரு இரவில்' என்னும் கவிதைகளும் இரவையே நீட்டிக்கச் செய்கின்றன.
நீ இல்லாம
நெடியதொரு இரவில்
என் அறையில் நிறைந்திருக்கும்
காற்றெல்லாம்
பிசுபிக்கிறது
உன் ஞாபகங்கள்
என 'பின்பொரு இரவில்' எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. நீள் கவிதையில் கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பில் சிறுகவிதைகளும் உண்டு. 'நீண்ட பகலொன்று' என்னும் சிறுகவிதையில்
இரவுகள்
தொலைந்து போய்விட்ட ஊரில்
யாரும்
கண்டு கொள்வதில்லை
பகலை
என இரவின் பெருமைப் பேசியுள்ளார். இதுவும் இரவு குறித்தானதே.
மனிதர்கள் வாழ்வு நிலையற்றது. புகழ் உச்சியில் இருப்பவர்கள் பின் சரிவைச் சந்திப்பது இயல்பு, இதை விவரிப்பதாக உள்ளது "நிலையற்ற உங்கள் இடம்", தலைப்பிலேயே உணர்த்தி விடுகிறார்.
கோபுரத்தின்
உச்சாணிப்புள்ளியில்
சிலாகித்துப் பாடிக் கொண்டிருந்தான்
பாடகன்
எனத் தொடங்கிய கவிதை
அப்படியொன்றும் தூரமில்லை
துயரத்தில் வார்த்த
புல்லாங்குழலோடு கசியும்
இதுதான் அவரின்
கடைசிப் பாடலாக இருக்கக் கூடும்
எனறு முடிகிறது. இது ஒரு பாடகன் புகழின் உச்சியில் இருப்பதையும் பின் வீழ்ந்து விடக்கூடும் என்கிறது. இது மனிதர்களுக்கான அறிவுரையாகவும் உள்ளது.
ஆதாம்டூ ஏவாள் டூ ஆப்பிள் கதை கிருத்துவ மதம் தொடர்பானது. காலம் காலமாய் சபிக்கப்பட்டதாகவே கற்பிக்கப்பட்டு வந்தது. போதிக்கப்பட்டு வந்தது. கவிஞரின் 'ஆப்பிள் சதி' ஒரு விதியைச் சொல்கிறது.
இப்படியும் இருக்கலாம்
ஏவாள் பேரழகியெனில்
ஆதாம் மீதான
பெறாமையிலும்
நிகழ்ந்திருக்கலாம் ஆப்பிள் சதி
என தொன்மத்தை சிதைத்துக் காட்டுகிறார். பொறாமை படும் குணவான்களை படம் பிடித்துக்காட்டுகிறார். 'ஏவாள்' பேரழகியென உறுதியாகக் கூறவில்லை. அவரின் அனுமானத்தை முன் வைக்கிறார். ஆதாம் ஏவாளை வைத்து எழுதப்பட்ட இன்னொன்று 'போர் ஓய்ந்தது'.
பூமி
தயாராகிக் கொண்டிருந்தது
இன்னுமொரு
ஆதாம் ஏவாளுக்கு
என வாசக மனத்திற்குள் ஒரு சிந்தனைப் போரைத் தொடங்கச் செய்கிறார். இக்கவிதை இதயத்தில் அதிர்வை ஏற்படுத்துகிறது. போர் வேண்டாம் என போதிக்கிறது.
வெகு நாட்களாய் நின்றதில்
பாதியளவு மண்மூடிய
டாங்கிகளின் ஓரம
வளரந்திருந்த செடியொன்று
முதல் பூவை ஈன்றது
என்பது குறிப்பிடத்தக்கது. அமைதி பூக்க வேண்டுமென்ற கவிஞரின் எண்ணம் வெளிப்பட்டுள்ளது.
ஆயினும் 'அவர்கள் ஏன் மறுக்கிறார்கள்' மூலம்
யூதாஸ்களின் உலகில்
இனி வர அஞ்சக்கூடும்
அவதாரங்கள்
என தற்போதைய நிலையையும் விளக்கியுள்ளார்.
மரணச் செய்தி மனத்தை பிசையும். வாய் விட்டு அழச் செய்யும், இறந்தவரின் உறவை பொறுத்து துக்கத்தின் தாக்கம் வேறுபடும். ஆனால் அவசர யுகத்தில் துக்கம் நீள்வதில்லை.'இறுதி அத்தியாயங்கள்' கவிதை மு்லம் கவிஞர் விளக்கியுள்ளார்.
தாவிப்பாயும் யுகத்தில்
எப்படியான
மரணத்திற்கும்
அங்கலாய்க்க முடிவதில்லை
இரண்டொரு நாட்களுக்கு மேல்
என இயல்பான வாழ்க்கையை எடுத்துரைத்துள்ளார். துக்கம் குறுகியதற்கு வாழ்க்கை வேகமே காரணம் என்கிறார். இக்கவிதை 'தினசரி கொஞ்சமாவது' தொகுப்பிலுள்ள பின்வரும் கவிதையை நினைவூட்டியது.
ஒரு மரணம்
நிகழ்ந்தது.
வழக்கம் போல
எல்லோருக்கும்
சொல்லி அனுப்பப்பட்டது
வழக்கம் போல
ஆண்கள் வந்து
பெஞ்சில் அமர்ந்தார்கள்
வழக்கம் போல
வாசல் வந்ததும்
பெண்கள் அழுதார்கள்.
வழக்கம் போல
சில பேர்கள்
வரவில்லை...
மறுநாள்
வழக்கம் போல
எல்லாம் நிகழ்ந்தது
என்கிறார்.
இறந்த காலம் குறித்து கவலைப்படக்கூடாது, வரும் காலம் பற்றி அஞ்சக்கூடாது. நடப்பு பற்றியே நினைவில் கொண்டு செயல்பட வேண்டும் .'இறந்த காலங்கள்' கவிதை மூலம் வாழ வலியுறுத்துகிறார்.
வெகு தரம் சொல்லியும்
அழுது கெண்டேயிருக்கிறானொருவன்
இறந்த காலங்கள்
பயனற்றிருந்ததாய்
நாளைக்கான சுமைகளை
வெகுவாக ஏற்றியபடி
சவுக்கைச் சொடுக்கியபடி
அவன் தோள்களிலமர்கிறது
என இரு காலங்களை விவரித்து இருப்பின் அவசியத்தைச் சுட்டியுள்ளார்.
நேரம் காட்டுகிறது
கடிகாரம்
ஒரு பறவை
பறந்து போகிறது
அக்கணத்தில்
வேறொன்றுமில்லை
என்றொரு சிறுகவிதை. அக்கணத்தில் வேறொன்றுமில்லை என்கிறார். ஆனால் கவிஞருக்கு ஒரு கவிதை எழுத வாய்த்துள்ளது. இலக்கியயுலகிற்கு ஒரு கவிதை கிடைத்துள்ளது. வாசிக்கும் கணத்திலோ சிந்தனையை விரியச் செய்கிறது. ஒன்றுமில்லை என்பதற்குள் பல ஒன்றுகள் ஒளிந்துள்ளன.
'லாந்தர் தின்றது போக மிச்சம்' என்னும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் கவிஞர் ஸ்நேகிதிகள் அகவுணர்வுகளையே அதிகம் காட்டியுள்ளன. பாலியல் குறித்து பேசியிருந்தாலும் பெண்ணியம் பேசியதால் சமன்படுத்தி விடுகிறார். காதலையும் காதல் விளைவுகளையும் பதிவுச் செய்துள்ளார். இதில் வருத்தம். ஏக்கம், விரக்தி ஆகியவை வெளிப்பட்டுள்ளன. கை கூடாத காதலால் வாழ்வே இருளாகி விட்டது என்பது போன்ற வெறுமையை உறுதிப்படுத்தும் வகையில் இரவுகளை முதன்மைப்படுத்தி, பொருளாக்கி பல கவிதைகள் உள்ளன. கவிஞர் ஸ்நேகிதன் முஸ்லிம் மதம் சார்ந்தவராயினும். முஸ்லிம் மதம் பற்றி எதுவும் பேசவில்லை. ஆயினும் கிருஸ்துவ மதம் தொடர்பான தகவல்களை வைத்து சில எழுதியுள்ளார். கவிதைகளில் இருண்மை இல்லை. இறுக்கம் உள்ளது.நவீன கவிதைக்கான நல்ல மொழியாளுமை உள்ளது.புது வரவுகளில் கவிஞர் தன்னை தனித்து அடையாளம் காட்டியுள்ளார். அவரால் அடையாளப்படுத்த வேண்டியது அநேகம் உள்ளது. ஸ்நேகிதன் செய்வார்.

No comments:

Post a Comment