பாரதி வசந்தனின் 'தலை நிமிர்வு'

மனிதர்க்குக் கொள்கை அவசியம். கொள்கையற்ற மனிதர் வாழ்தல் கூடாது. கொள்கையுடன் வாழ்வதாகக் கூறும் அரசியல் வாதிகள் குழப்ப வாதிகளாகவே உள்ளனர். கட்சித் தலைவர்களும் அவ்வாறே உள்ளனர். `கவிஞர்களிலும் கொள்கை மாற்றுபவர்கள் உண்டு. மாறுபவர்கள் உண்டு. ஒரு கவிஞராக கொள்கை மாறாமல், கொள்கை விடாமல் எழுதி வருபவர், இயங்கி வருபவர் கவிஞர் பாரதி வசந்தன். "முப்பது ஆண்டு கால கவிதை வாழ்வின் வெள்ளை அறிக்கை"என்னும் அறிவிப்புடன் கவிஞர் தந்திருக்கும் தொகுப்பு 'தலை நிமிர்வு'. வெள்ளை அறிக்கை என்பது உண்மை நிலையை நேர்மையுடன் அரசு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியதாகும். ஒரு கவிஞர் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருப்பது அவரின் நேர்மையையும் நிலையையும் துணிவையும் காட்டுகிறது.
இலக்கியம் மக்கள் விடுதலைக்கே -என
எழுத்தில் கலகம் செய்பவன் நான்
இலக்கியம் போன்றே வாழ்ந்திருப்பேன்-ஆம்
இதுவே எனது பிரகடனம்
கவிஞர் பாரதி வசந்தனின் பிரகடனம், இலட்சியம், கொள்கை இது. 'எழுது கோல் யுத்தம்' தலைப்பிலான கவிதையின் மூலம் தன்னிலையைத் தெரிவித்துத் தன் பயணத்தைத் தொடர்ந்துள்ளார். தன் தடத்திலிருந்து மாறாமல் எழுதியுள்ளார். எழுது கோல் யுத்தம் என்னும் தலைப்பே கவிஞர் நியாயமான போராட்டத்திற்காக களத்தில் நிற்பது தெரிகிறது.
எழுத்து என்பது ஒன்றாயினும் எழுதப் படும் விதத்தில், எதை எழுதுகிறாம், ஏன் எழுதுகிறோம், எவருக்காக எழுதுகிறோம் என்பதை பொருத்து எழுத்து மாறுபடுகிறது. வேறுபடுகிறது. அடையாளப்படுகிறது. எழுத்தின் வழி பொது சமூகத்தைப் பேசி வந்தனர். உயர் குடியை எழுத ஒரு வட்டம் உருவானது. ஒவ்வொரு வகை வருணத்திற்கும் ஒவ்வொரு வகை எழுத்து உள்ளது போல் ஐந்தாவதாக உள்ள பஞ்சமனுக்கு உரித்தான எழுத்தே தலித் எழுத்து என்கிறார். தலித் எழுத்தைக் கலக எழுத்து என்றும் அடையாளப் படுத்தியுள்ளார். கவிஞ்ரின் எழுத்தும் கலக எழுத்தாகவே உள்ளது. 'ஆதி எழுத்து'உம் தலித் எழுத்தே என்கிறார்.
ஈழம் மலர வேண்டும் என்பது உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனின் விருப்பம். இலட்சியம். 'புலிகள் தேசம்'கவிதையில் கவிஞர் தன் கனவை வெளிப் படுத்தியுள்ளார்,
புலரட்டும் தமிழ்ப் பொழுது
பொலியட்டும் தமிழ்க் கனவு
மலரட்டும் தமிழர் ஈழம்-புகழ்
மணக்கட்டும் புலிகள் தேசம்
13.01.1983 அன்று எழுதப் பட்டுள்ளது. இன்று வரை எண்ணம் ஈடேற வில்லை. இலட்சியம் நிறைவேற வில்லை. ஆயினும் போராட்டம் தொடர்கிறது. தொடர்ந்து எராளக் கவிதைகள் எழுதியுள்ளார். 2009 ஆம் ஆண்டிலும் எழுதியுள்ளார். இலனங்கையும் இந்தியாவும்'கை'கோர்த்து ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவித்தது. இருப்பவர்களை இம்சித்தது. பலர் உயிர் விட்டனர்.
களம் கண்டு எதிரிகளைக்
களை எடுக்கவும்
அவர்கள் கதை முடிக்கவும்
பிறந்தவர்கள் நீங்கள்
வெறும் சிதையாகிப் போவதை
எப்படியடா எம் சிந்தைப் பொறுக்கும்                  
என வெகுண்டெழுந்து 'இறுதியாக ஓர் இரங்கல் கவிதை' எழுதியுள்ளார். இதுவே இரங்கல் கவிதையாக இருக்க வேண்டும் என்பதே தமிழ் உணர்வுள்ளவர்களின் முடிவு.
தமிழ் மொழிக்கு ஏராளச் சிறப்புகள் உண்டு. அளவற்ற பெருமைகள் உண்டு. ஒரு மொழிக்கு உயிர் விட்டுள்ளனர் என்றால் அது தமிழ் மொழியாகவே இருக்கும். ஒரு மொழிக்காக போராட்டம் நடந்துள்ளது என்றால் அது தமிழ் மொழி என்றால் மிகையில்லை. மொழிப் போராட்டத்தில் உயிர் விட்டவர்கள் என தாளமுத்து நடராஜன் என பரவலாக பேசுகின்றனர் .எழுதுகின்றனர் . இது தவறு என்கிரார். காரணம் முதல் பலி நடராசன் என்றும் தாளமுத்து இரண்டாம் பலி என்றும் குறிப்பிட்டு நடராசன் தாளமுத்து என்றே கூற வேண்டும் என்கிறார். நடராசன் தலித் ஆனாலும் தாளமுத்து நாடரசன் ஆனாலும்
மொழிப் போராளியாகவே இருவரையும் பார்க்க வேண்டும் என்கிறார். இருவருக்கும் சாதி கிடையாது என்பதுடன் அவர்களைத்'தமிழின் அடையாளம், தமிழரின் இன மானம்'என்றும் போற்றுகிறார். கவி்ஞர் ஒரு'தமிழ் நெருப்பு'ஐ மூட்டியுள்ளார். 'சுய நல சூழ்ச்சி'க்கு எதிராக எழுதப்பட்டுள்ளது. வரலாற்று நிகழ்வை மாற்றக் கூடாது என்கிறார். ஒரு தலித்தாக இருந்தும் கவிஞர் தமிழ் மொழியையே முன்னிறுத்தியுள்ளார். 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'என்றார் பாரதி தாசன் . ஒரு படி மேலே சென்று'தமிழ் எங்கள் உயிருக்கும் மேல்'என்கிறார் பாரதி வசந்தன். தமிழைப் பல்வேறு விதமாக வருணித்துள்ளார். பாரதி தாசனை மறுத்து இருந்தாலும் தமிழின் மீதான பற்றையே வெளிப் படுத்தியுள்ளார். 'தமிழ் பாது காப்பு இயக்க விழா'வில் திரு.தொல்.திருமா வளவனும் டாக்டர் ராமதாசும் இணைந்திருந்ததைக் கண்டு
சாதி நம்மைப் பிரித்தது
தமிழ் இன்று இணைத்தது
தமிழ் வாழ்க
என்று எழுதி தமிழையே முன்னிறுத்தியுள்ளார். தமிழே முக்கியம் என்கிறார். 'ஆதிக்கம்' கவிதையில் சாதிகளற்ற தமிழ்ச் சமு்கம் தொடங்கு என்று அறிவுறுத்துகிறார்.
'பற்றுப் பாட்டு'கவிதையில் மலையாளிக்கு மொழிப் பற்றும் தெலுங்கனுக்கு இனப் பற்றும் வங்காளிக்கு நாட்டுப் பற்றும் உள்ளது போல் தமிழனுக்கு சினிமா பற்றே உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். சினிமா பற்றினால் சீரழிந்தே போய் விட்டான் என்கிறார். தமிழன் கொண்ட சினிமா பற்றே சினிமாக் காரர்களை ஆட்சியில் அமர்த்தி விட்டது என்கிறார். அமர வைத்தவனையே ஆட்டிப் படைக்கிறது. ஆட்சிச் செய்கிறது. 
சேரி என்றால் பள்ளர், பறையர், சக்கிலியர் வாழும் பகுதி என அடையாளப் படுத்தப் பட்டுள்ளது. மற்ற உயர் சாதியினர் என அறிவித்துக் கொண்டு மேற்படி மூன்று வகையினரை ஒதுக்கி வைத்ததுடன் அவர்கள் வாழும் பகுதியையும் புறக்கணித்து வருகின்றனர்.
சேரி எனில்
மக்கள் சேர்ந்து வாழ்தலென
கவிஞர் உணர்த்துகிறார். சேரி என்னும் பெயரில் மனிதர்களைப் பிரித்து வைத்திருப்பதைக் கண்டித்துள்ளார். சேரிகள் எத்தனை தமிழ் இலக்கியத்தில் இருந்துள்ளன என பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். தலித்தியருக்கு ஆதரவாக எழுதப் பட்டிருந்தாலும் தலித்தியரையும் விட வில்லை. தலித்தாக பிறந்தவன் தலித்தாக வாழ வேண்டும் என்கிறார். தலித் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ள வேண்டும் என்கிறார். வேலையும் வசதியும் வந்தவுடன் தலித் என்னும் அடையாளத்தை மறப்பவர்களை'துரோகி'என்று அடையாளப்படுத்தியுள்ளார் . பறையர் தாழ்த்தப் பட்டவர் என்னும் எண்ணம் இன்று பரவலாக உள்ளது. ஒரு கருத்துப் பரப்பப் பட்டுள்ளது. 'பறையன் - மனிதன் - தமிழன்'கவிதை மூலம் அக் கருத்தை உடைத்துள்ளார். மாட்டுக் கறி தின்பவன் பறையன் என்றால் ஆதி சிவனும் பறையன் என்கிறார். நாட்டுப் புறக் கதையொன்றில் பதிவாயிருக்கும் இத் தகவலைக் கண்டறிந்து கூறியுள்ளார். ஒரு புதுக் கருத்தைப் பரப்பியுள்ளார் . எல்லோரையும் மனிதன் என்றே அழைக்க வேண்டும் என்கிறார்.
'பறையன்'என்பதற்கு சென்னைப் பல்கலைக் கழகம்
'தமிழன் ஒழிந்த பிற இனத்தான்'
என அகராதியில் பொருள் தந்துள்ளது. இதனால் கோபமுற்று கவிஞர் எழுதிய கவிதை'தமிழ்க் குடி'. சொன்னவனைச் செருப்பால் அடி என்கிறார்.  
தமிழர்கள் என்றால் பிரிந்துக் கிடப்பது போல் தலித்துகள் என்றாலும் பிரிவினையே. அம்பேத்கர் ஒருவரே தலித்தியர்கள் தலைவர் எனினும் அம்பேத்கர் பெயரிலேயே ஏராள கட்சிகள். இயக்கங்கள். தலைவர்களும் பலர். அதில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமா வளவன் .சில நடவடிக்கைகள் கவிஞருக்குப் பிடித்துள்ளது என சில கவிதைகள் வாயிலாக வெளிப் படுத்தியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பத்தாயிரம் இந்துப் பெயர்களை இனிய தமிழ்ப் பெயர்களாக மாற்றியதற்காக திருமா வளவனை'தகப்பன் சாமி'என போற்றிப் பாடியுள்ளார்.
"தொல். திருமா வளவன் அவர்களின் கால் நூற்றாண்டுக் களப் பணி"க்கு'முப்பது ஆண்டுக் கால கவிதை வாழ்வின் வெள்ளை அறிக்கை'யான'தலை நிமிர்வு'தொகுப்பை சமர்ப்பித்துள்ளார். அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி என்பது விடுதலைச் சிறுத்தைகளின் அடிப் படைக் கொள்கையாகும். வன்முறை என்று எவரோ சொன்னதற்கு எதிர் வினையாக எழுதப் பட்ட கவிதை
'உயிர் விலை'. இது வாழ்க்கை முறை . புதிய போர் முறை என்று தெளிவுப் படுத்தியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக பேசியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகளின் அடையாளமான நீலம், சிவப்பு நிறஙகளே தமிழைத் தலை நிமிரச் செய்தது என்பது குறிப்பிடத் தக்கது.
பெரியார் சமூகத்திற்கு ஆற்றியுள்ள பங்கு மகத்தானது. மேட்டுக் குடியினர் அல்லாதவர் ஓரளவேனும் உயர்வு பெற்றிருப்பதற்கு அடிப் படை பெரியார் என்பதை எவராலும் மறுக்க முடியாத உண்மை, ஒடுக்கப் பட்ட, தாழ்த்தப் பட்ட, வஞ்சிக்கப் பட்ட, புறக்கணிக்கப் பட்ட அனைத்து மக்களுக்காகவும் போராடியவர். பெரியார் மீதும் விமரிசனங்கள் வைக்கப் பட்டது. அவதூறு பரப்பப் பட்டது. அவதூறுக்கு எதிராக எழுதப்பட்ட கவிதை 'பெரியார் செருப்பு'. பெரியாரின் தடி, பேச்சு, சேவை, செருப்பு ஆகியவை
எங்கும் போய்விடவில்லை
எங்கள் கையில்தான்
இருக்கிறது                             என்கிறார். பெரியாரின் பணி தொடர்கிறது என்கிறார். பெரியாரின் இலட்சியத்தை நிறைவேற்றுவோம் என்கிறார். பெரியாரை மறுப்பவர்களை மறுத்துள்ளார். 'மீட்பு'க் கவிதையிலும் எல்லாவற்றையும் மீட்க பெரியார் வர வேண்டும் என்கிறார்.
பெரியார் கடவுள் இல்லை என்றார். பாரதி வசந்தன் உண்டு என்கிறார். கவிஞர் குறிப்பிடும் தெய்வங்கள் மெய்யானவை, எவராலும் மறுக்க முடியாதவை. 'தெய்வங்கள்' கவிதையில்
கடவுள் இல்லையென்று எவனாவது
சொன்னால் சொல்லி விட்டுப் போகட்டும்
அப்பாவும் அம்மாவும்தான் எங்களுக்கு
ஆயிரங் காலத்துத் தெய்வம்
அதற்கடுத்தத் தெய்வம்
அம்பேத்கர்                           
என்கிறார். பெற்றோர் தெய்வம் என்பது பொதுவானது. அம்பேத்கர் தலித்தியரின் தெய்வம் என்பதை எடுத்துரைத்துள்ளார்.
பாரதியை இலக்கிய உலகம் நன்கறியும். பாரதி தாசனைத் தமிழ்க் கூறும் நல்லுலகம் வெகுவாக அறியும். முன்னவர் புதுச் சேரியில் வாழ்ந்தவர். பின்னவர் புதுச் சேரியில் பிறந்தவர். புதுச் சேரியில் பிறந்த ஒரு சிறந்த கவிஞரான தமிழ் ஒளியை பெரும் பாலோர் அறிய வாய்ப்பில்லை.
'தமிழ் மொழி'யின் மீது ஓர் இருட்டுப் பாய்ச்சப் பட்டுள்ளது. கவிஞர் பாரதி வசந்தன்'தமிழ் ஒளி'மீது ஒரு'தமிழ் ஒளி'யைப் பாய்ச்சியுள்ளார். தமிழ் இலக்கிய உலகம் அறியச் செய்துள்ளார்.
சேரியிலே பூத்ததொரு
சிவப்புப்பூ வசந்தம்
சிந்தித்த அத்தனையும்
செங்கொடியை உயர்த்தும்
யாரிடமும் தலை வணங்கா
இனமான முழக்கம்
யாசித்தும் வாழ்ந்ததில்லை
இது அவன்கதைச் சுருக்கம்
கவிஞர் தமிழ் மொழியின் வாழ்வுச் சுருக்கத்தை எட்டே வரியில் சுருக்கிக் கூறியுள்ளார்.சிறப்பாகச் சொல்லியுள்ளார்.
திருவள்ளுவர் எந்த சாதி என்று தெரியாது. ஆனால் அவரின் திருக்குறள் சாதி பேதமற்று எல்லோராலும் போற்றப் படுகிறது. பாராட்டப் படுகிறது. பின் பற்றப் படுகிறது. ஆராய்ச்சி என்னும் பெயரில் அறிஞர்கள் சிலர் திருவள்ளுவரை வள்ளுவர் என்று சுருக்கி பறையர் இனத்தில் உள்ள வள்ளுவப் பிரிவுடன் சேர்த்து'வள்ளுவப் பறையன்'என திருவள்ளுவரை ஓர் இனத்திற்கு உரியவர் ஆக்கி விட்டனர். கவி்ஞருக்கு இதில் உடன் பாடில்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளாக
வள்ளுவர் தமிழர்
இப்போது பறையர்
என்பதை ஏற்க வில்லை. திருவள்ளுவரை வள்ளுவப் பறையன் ஆக்க முயன்ற 'அறிஞர்'களைச் சாடியுள்ளார். விமரிசித்துள்ளார்.
தமிழுக்குச் சோறு போடுவேன் என்றான் ஒருவன். தன் பிறந்ந நாளைத் தமிழின் பிறந்த நாள் என்றான் மறுவன். தமிழை வாழ வைக்கவே தான் வாழ்கிறேன் என்றான் பிறிதொருவன். இப்படி ஏராள கூற்றுகள். ஆனாலும் இவர்களை எல்லாம் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது தமிழ் என்று வருத்தப் படுகிறார்.
தன்னைத் தாழ்த்துகிறவர்களையும்
உயர்த்துகிறது தமிழ்                           என தமிழின் சிறப்பைக் கூறி தமிழை வாழ வைப்பதாகக் கூறுவர் மீது வெறுப்பைக் காட்டியுள்ளார். தமிழ் மொழியை 'இனிது' என்கிறார்.
தமிழகத்திற்கு வந்தோரை வாழ வைக்கும் தன்மை உண்டு என்பர். வந்தோர்கள் தமிழர்களையே ஆளத் தொடங்கினர். அடிமைப் படுத்த முயன்றனர். தமிழகம் வந்த ஆரியர்கள் வந்தேறிகள் ஆயினர். தமிழர்கள் மீதேறி பயணிக்கத் தொடங்கினர்.
தமிழும்
தமிழ் சார்ந்த இடமும்
வந்தேறிகளின்
வேட்டைக் காடு                          ஆகி விட்டது என்கிறார். விலங்குகளோடு மேய்க்கத் வந்தவர்கள் தமிழர்களை வேட்டையாடி வருவதை வேதனையுடன் வெளிப் படுத்தியுள்ளார்.
கட்சித் தலைவர்கள் தொண்டர்களை அழைக்கும் விதத்தில் ஓர் அன்பு இருக்கும். ஓர் உறவு இருக்கும். இதில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வோர் அடையாளம் உண்டு. தம்பி, உடன் பிறப்பு, இரத்தத்தின் இரத்தம் என்பர். தொண்டர்களோ அம்மா என்றும் அய்யா என்றும் பெரிய அய்யா என்றும் சின்ன அய்யா என்றும் அழைப்பர். இது தமிழ் நாட்டில் எழுதப் படாத விதி. தமிழர்களின் தலை விதி.
தமிழர்கள்
ஒரே குடும்பமாக
இல்லையென்று
எவன் சொன்னான்
'குடும்பம்'தலைப்பில் எழுதப் பட்ட கவிதையில் கிண்டல் செய்துள்ளார். கேலி செய்துள்ளார். அரசியல் கட்சிகளை விமரிசித்துள்ளார். தலைவர்கள் பெயருக்குப் முன்'புரட்சி'யைச் சேர்த்துக் கொள்வதையும் விடவில்லை. எல்லாப் புரட்சிகளையும் பட்டியலிட்டவர்'புரட்சித் தலைவரை'விட்டு விட்டார். புரட்சிகளினால் புரட்சி எதுவும் உண்டாக வில்லை என்னும் உண்மையையும் உணர்த்தியுள்ளார்.  
தமிழன் என்பவன் இன்று தமிழனாக இல்லை. தமிழனுக்காக அடையாளங்களைத் தொலைத்து நிற்கிறான். மிக முக்கியமாக மொழியை மறந்து விட்டான். மொழியில் ஆங்கிலத்தைக் கலந்து விட்டான். ஆங்கிலமே தமிழன் நாவில் ஆட்சிச் செய்கிறது. தமிழும் ஆங்கிலமும் கலந்து தமிங்கிலீஷ் ஆகி விட்டது. தமிழனும் தமிங்கிலன் ஆகி விட்டான்.
நீ
தமிழனும் இல்லை
ஆங்கிலேயனும் இல்லை.
இரண்டுக்கும் தப்பிப் பிறந்த
தமிழ் நாட்டுத் தமிங்கிலன்.
எப்போதும்
இனத்துக்கும் மொழிக்கும்
எதிராக நடக்கும் இழிமகன்                        என
'தமிங்கிலன்'கவிதையில் தாக்கியுள்ளார். தமிழன் தமிழனாக இருக்க வேண்டும் என்கிறார்.
தமிழர்களின் வரலாறு மிக நீண்டது. மூத்த குடி என்று பெயர் பெற்றவன். தொன்மையானவன் என்று அறியப் பட்டவன். இரணடாயிரம் ஆண்டுக் காலத்திற்கு மேல் வாழ்ந்து வந்தாலும் தமிழன் தலை நிமிர்ந்து வாழ வில்லை. வாழ முடிய வில்லை. இதற்கு முக்கியக் காரணமாகக் கவிஞர் கூறுவது "சாதித் திமிரும் மத வெறியுமே" என்கிறார். சாதித் திமிரும் மதவெறியும் மனிதர்க்குக் கூடாது என்கிறார். சாதியையும் மதத்தையும் துறந்து தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்'தலை நிமிர்ந்து' கூறுகிறார்.
மரபென்ன புதிதென்ன
மறுபெயரும் இருந்தென்ன
மனதுக்குள் வாழ்வது கவிதை                      என'கவிதைப் பூ'வை மரபால் மணக்கச் செய்துள்ளார். பாரதி வசந்தன் மரபிலும் எழுதியுள்ளார். புதிதிலும் எழுதியுள்ளார். இரண்டிலும் புலமையைப் புலப்படுத்தியுள்ளார். தமிழன் நிலையையும் தலித்தியரின் நிலையையும் தன் நிலையையும் புரியச் செய்துள்ளார். வடிவங்களிலும் கவனம் செலுத்தியுள்ளார். 'தமிழா உனக்கொரு சேதி'கவிதை'குறும்பா'வடிவில் எழுதப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில் லிமரிக் என்பதாகும்.
இமயம் வென்ற வீரம்
இருந்தது முன்பொரு காலம்
சமயம் பார்த்தே
சாதிகள் வளர்ப்பாய்
சரிதான் உன் செயல் சோரம்
தமிழனின் முந்தைய நிலையையும் தற்போதைய நிலையையும் இக் குறும்பா மூலம் அறியச் செய்துள்ளார்.
பாரதி வசந்தனிடம் கவிதையும் இருக்கிறது. கோபமும் இருக்கிறது என்பதற்குச் சான்றாக " தலை நிமிர்வு " விளங்குகிறது. ஒரு கவிஞன் என்பவன் அநியாயத்தைக் கண்டு பொங்கி எழ வேண்டும். பாரதி வசந்தன் பொங்கி எழுந்துள்ளார். ஒவ்வொரு கவிதையிலும் கோபத்தைக் காண முடிகிறது. வேகத்தையும் உணர முடிகிறது. உடனுக்குடன் எதிர் வினையாற்றியுள்ளார். உணர்வுகளை வெளிப் படுத்தியுள்ளார். தவறு செய்பவர் எவராயினும துரோகம் செய்பவர் எவராயினும் தட்டிக் கேட்கத் தயங்கியதில்லை. எதிரிகளை விட துரோகிகளையே தாக்கியுள்ளார். எழுதிய நாள், நேரம் மூலம் உறுதிப் படுத்தியுள்ளார். களத்தில் நிற்கும் போராளி போல் பாரதி வசந்தன் எழுத்தில் ஒரு போராளியாக உள்ளார்.
கவி்ஞர்கள் தொகுப்பை வெளியிடும் போது கவிதைகள் வெளியிட்ட இதழ்களுக்கு நன்றிச் சொல்வர். இதழ்களில் வெளியான கவிதைகளைத் தொகுத்து வெளியிடுவர். தலை நிமிர்வில் உள்ள கவிதைகளில் பெரும் பாலானவை பெரு வாரியான இதழ்கள் வெளியட மறுத்தவை. காரணம் கவிதைகளின் நிஜத் தன்மை மற்றும் கலகக் குணம். பாரதி வசந்தனின் துணிவு பாராட்டிற்குரியது. ஒரு கவிஞராக பேசத் தொடங்கிய பாரதி வசந்தன் இத் தொகுப்பின் மூலம் ஒரு தமிழனாகவும் பேசியுள்ளார். ஒரு தலித்தாகவும் பேசியுள்ளார். ஒரு மனிதனாகவும் பேசியுள்ளார். தமிழ் உணர்வாளர்களால் பேசப் படுவார், போற்றப் படுவார். எவரிடமும் வணங்காமல் தலை நிமிர்ந்து நிற்கிறார். எல்லோரையும் தலை நிமிர்ந்து நிற்கவும் செய்கிறார். தலித்தியம் தமிழியம் என்னும் இரண்டு தளங்களிலும் இயங்கியுள்ளார். இரண்டும் வேண்டும் என்கிறார். முன்னெடுத்துச் செல்பவர்கள் போலியாக இருக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.
தலித்தியத்திற்கு
அம்பேத்கரியம்.
தமிழியத்திற்கு
பெரியாரியம்.
பொதுவுடமைக்கு
மார்க்சியம்.
தமிழ் நாட்டின்
விடுதலைக்கு
இந்த மூன்றும்
"அவசியம்". தலித், தமிழ், தமிழ் நாடு என மூன்றின் விடுதலைக்கும் வழி வகுத்துள்ளார். அவ்வழியே நடக்கிறார். வெற்றிப் பெற ஒத்துழைப்பது அவசியம்.
வெளியீடு
அக நாழிகை 33 மண்டபம் தெரு மதுராந்தகம்      603 306
விலை ரூ 130.00

No comments:

Post a Comment