(எஸ்.ராஜகுமாரன் தயாரித்து
இயக்கியுள்ள 'தி.க.சி - ஒரு மானுட ஆவணம்' ஆவணப்படத்தை முன்வைத்து - ஒரு பார்வை)
- பொன் குமார் -
எழுத்தாளர்கள் பல வகை. ஒரு நல்ல எழுத்தாளராகவும் வலம் வந்து ஒரு நேர்மையான விமரிசகராகவும் இயங்குபவர் தி.க.சி . இவர் ஒரு ரகம். ' விமர்சனங்கள்-மதிப்புரைகள்-பேட்டிகள்' என்னும் விமரிசனத் தொகுதிக்காகவே சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவர். விமரிசகர் என்றாலும் இலக்கிய உலகில் பிரவேசிக்கும் புதியவர்களை வளர்த்து எடுப்பதில் முக்கியப் பங்காற்றியவர். இது தி.க.சி.யின் தனிச்சிறப்பு. படைப்புக்களை ஆக்குவதோடு படைப்பாளர்களையும் உருவாக்குவதே ஒரு நல்ல படைப்பாளிக்கு அடையாளம். இதற்கு தி.க.சி.யே அடையாளம். மேலும் இதழாளர், மொழிபெயர்ப்பாளர், ஒரு தொழிற்சங்கவாதி என்னும் பரிமானங்களையும் கொண்டவர். இலக்கிய உலகில் தன் ஆளுமையால் தனி முத்திரை பதித்தவர். அவரை ஆவணப்படுத்தி ஒரு படத்தைத் தந்துள்ளார் எஸ்.ராஜகுமாரன்.
ஒவ்வொரு படைப்பாளியும்
அவன் வாழும் சமூகத்தின் முகவரியாக இருப்பான். அதனால் அவன் வசிக்கும் முகவரியை சமூகம்
அறிய வாய்ப்பாக இருக்கும். எழுத்தாளனை உலகம் அறியும் போது அவன் வாழும் முகவரி பேசப்படும்.
புகழ் பெறும். பரவல் ஆகும். தி.க.சி என்றாலே 'சுடலைமாடன் தெரு' வும் நினைவிற்கு வரும்.
தி.க.சி பற்றியதான இந்த ஆவணப்படத்திற்கு ' 21-இ, சுடலைமாடன் தெரு, திருநெல்வேலி டவுண்'
என்னும் தலைப்பு வைத்திருப்பது சாலப் பொருத்தமானது ஆகும். எந்தளவிற்கு தி.க.சி புகழ்
பெற்றுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது. கி.ரா.வை ஆவணப்படுத்திய படமும் அவர் ஊரான
'இடைச்செவல்' என்னும் பெயரிலேயே வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஞ்சலட்டை வாயிலாகவே இலக்கிய உறவையும் புதிய இலக்கிய வரவுகளையும் வளர்த்தவர் வல்லிக்கண்ணன். இவர் வழியிலே அஞ்சலட்டை வழி இலக்கியப் பணியாற்றி வருபவர் தி.க.சி. இருவரும் அஞ்சலட்டைக்கு ஒர் அர்த்தத்தையும் அந்தஸ்தையும் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் ஆவர். இப்படத்தின் தொடக்கத்தில் தி.க.சி ஒர் அஞ்சலட்டையை தபாலில் அனுப்ப போவதாகவும் இறுதியில் ஒர் அஞ்சலட்டை எழுதுவதாகவும் காட்டி அஞ்சலட்டைக்கும் தி.க.சி.க்குமான தொடர்பை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ' பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், ஆய்வாளர்கள், அஞ்சலட்டைகள் கண்டெடுத்து ஊக்கப்படுத்தின. இன்றைக்கு நிற்கிற இரண்டு தலைமுறை எழுத்தாளர்கள் பலர் அஞ்சலட்டைகளால் உலகுக்கு கொண்டு வரப்பட்டவர்கள் என ' பேசும் கால்க்காசு கடுதாசி-தி.க.சி.யின் திறனாய்வுகள்' என்னும் தொகுப்பில் பா.செயப்பிரகாசம் எழுதியுள்ளது கவனிப்பிற்குரியது.
தி.க.சி என்னும் ஒரு படைப்பாளியை இயக்குநர், பல எழுத்தாளர்கள் மூலம் அறியச் செய்துள்ளார். க்ருஷி, பொன்னீலன், திருப்பூர் கிருஷ்ணன், தோப்பில் முகம்மது மீரான், பா.செயப்பிரகாசம், சி.மகேந்திரன், ச.செந்தில்நாதன் ஆகியோர் தி.க.சி மீதான மதிப்பீடுகளை, அளவீடுகளை வெளிப்படுத்தியுள்ளனர். தோழர் நல்லகண்ணுவும், அய்யா பழ.நெடுமாறனும் தி.க.சி.யைப் போற்றியுள்ளனர். தி.க.சி.யின் மகனும் எழுத்தாளர் வண்ணதாசன் ( கவிஞர் கல்யாண்ஜி) அவர்களும் அவரின் இலக்கிய பணிகளையும் அர்ப்பணிப்பையும் விவரித்துள்ளார். மற்ற மகன்களும் மகளும் கூட கூறியுள்ளனர். அவரின் நண்பர்களும் தி.க.சி.யைக் காட்டியுள்ளனர். இலக்கியத்தில் தொடர்ந்து இயங்குதல் சிறப்பு என்றும் குருநாதர் வல்லிக்கண்ணன் வழியில் இளைஞர்களை ஊக்குவிப்பவர் என்றும் எதிர் விமர்சனங்களை ஏற்றுக் கொண்டவர் என்றும் முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் சான்றாக விளங்குபவர் என்றும் அவரின் காலமே தாமரையின் பொற்காலம் , எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நல்ல மனிதர் என்றும் அறியச் செய்துள்ளனர். புதியவர்களை ஊக்குவிப்பதற்காக தி.க.சி நீண்ட நாள் வாழ வேண்டும் என்று தீபம் நா.பார்த்தசாரதி விரும்பியதாக திருப்பூர் கிருஷ்ணன் கூறுகிறார். அனைவரும் இயக்குநருடன் இணைந்து அவரின் மதிப்பை, புகழை, பெருமையைக் கூட்டியுள்ளனர். மனித நேயமிக்கவர் என்னும் நற்குணத்தையும் புலப்படுத்தியுள்ளனர். கலையையும், இலக்கியத்தையும், மார்க்சியத்தையும் கொள்கையாகக் கொண்டவர் என்பதையும் தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன. மொழிபெயர்ப்பாளர், சமூக போராளி என்னும் பிற முகங்களையும் காட்டியுள்ளனர்.
ஆவணப்படத்தின் ஒரு பகுதி தி.க.சி.யே பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதாக ஆக்கப்பட்டுள்ளது. தி.க.சி.யே தான் கற்ற பள்ளியில் அமர்ந்து பள்ளி நாள்களை நினைவுக் கூர்ந்துள்ளார். தன் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு மந்திரமூர்த்தி பள்ளி ஒரு காரணம் என நேர்மையாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆசிரியர்களையும் குறிப்பிடத் தவறவில்லை. உடன் படித்த தோழர்களையும் கூறியுள்ளார். மிக முக்கியமாக தன் குருநாதர் வல்லிக்கண்ணனும் இப்பள்ளியில் படித்தவரே என்பது சுட்டத்தக்கது. கல்லூரி வாழ்க்கையையும் நினைவு கூர்ந்துள்ளார். சுதந்திரம் , ஜனநாயகம், சமதர்மம் ஆகியவற்றையும் வலியுறுத்துகிறார். பாரதியார், பாரதிதாசன், வ.ரா, நா.பா, ஆகியோர்கள் போன்றோர் சக படைப்பாளிகள் என்றும் உணர்த்துகிறார். இலக்கிய உலகில் ஏராளமான வாரிசுகளை ஏற்படுத்தியவர் எனினும் தன் வாரிசான வண்ணதாசன் ( கவிஞர் கல்யாண்ஜி) குறித்து தி.க.சி கூறிய விமரிசனம் பாசங்கற்றது. பாசத்திற்கு அப்பாற்பட்டது.
- பொன் குமார் -
ஆவணப்படம் தொடக்கம் முதல் இறுதி வரை திருநெல்வேலி பகுதிகளை அழகியலுடன் காட்சிப்படுத்தி பின்னணியில் தி.க.சி.யின் பிறப்பு முதலான பல சிறப்புகளை ஒரு குரல் ஒலித்துள்ளது. தி.க.சி.யின் திறனாய்வுகள் புலம்பல்களுக்கும் வெற்றுக் கூச்ச்சல்களுக்கும் எதிரானவை என்றும் தன் திறனாய்வின் திடமான நம்பிக்கைக் கொண்டவர் என்பதால் , சமரசம் எதுவும் கொள்ளாதவர் என்றும் தெரிவிக்கிறது. அவர் இலக்கியப் பணி மண், மக்கள் பயனுறும் வகையிலே அமைந்துள்ளது என்றும் வலியுறுத்துகிறது.
விமர்சனத் தமிழ் (1993), தி.க.சி.யின் திறனாய்வுகள் ( 1993 ), விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் ( 1994 ) மனக்குகை ஒவியங்கள் ( 1999) போன்றவை தி.க.சி.யின் தொகுப்புகள் எனினும் அவர் படைப்புலகம், எழுத்து குறித்து விரிவாக பேசவில்லை.
கழனியூரனின் ஒருங்கிணைப்பில் அனேகரின் ஒத்துழைப்பில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் என்னும் இரு அமைப்புகளும் உதவியிருப்பது தி.க.சி.யின் அணுகுமுறையைக் காட்டுகிறது. வே.கிஷோரின் ஒலிப்பதிவு தொடர்ந்து ஒலிக்கிறது. இரா.சண்முகசந்திரத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாகி சிந்தையைக் கவர்கிறது. பத்மகல்யாணியின் இசையும் மெருகியூட்டியுள்ளன.
84 ஆண்டுக்காலம் பூர்த்தியாகி 65 ஆண்டு காலமாய் இலக்கியப் பரப்பில் தன்னை நிறுவிக் கொண்ட ஒரு மாபெரும் இலக்கியவாதி தி.க.சிவசங்கரன் என்னும் தி.க.சி.யை அறுபது நிமிடம் ஒடும் ஆவணப்படத்திற்குள் அடக்கியிருக்கும் எஸ்.ராஜகுமாரன் முயற்சி போற்றத்தக்க தாகும். ஒரு படைப்பாளியை சமூகம் மதிப்பதில்லை. ஏற்பதில்லை. நினைத்தலும் அரிது. படைப்பாளனுக்கோ சமூக பிரக்ஞையே முன்னிற்கும் . தி.க.சி என்னும் ஒரு வாழும் படைப்பாளியை ' 21-இ, சுடலைமாடன் தெரு, திருநெல்வேலி டவுண்' என்னும் பெயரில் ஆவணப்படமாக்கி சமூகத்திற்குக் காட்டியுள்ளார். 'தி.க.சி ஒரு மானுட ஆவணம்' என்று ஒர் அடைமொழியையும் ஏற்படுத்தியுள்ளார்.
மூத்த படைப்பாளிகள் இளைய படைப்பாளிகளை வளர்த்தெடுப்பது இலக்கிய கடமை எனில் மூத்த படைப்பாளிகளை இளைய படைப்பாளிகள் கெளரவிப்பதும் இலக்கிய கடமையே. அவ்வகையிலேயே அமைந்துள்ளது இந்த ஆவணப்படம். எழுதி தொகுத்து இயக்கியுள்ள எஸ்.ராஜகுமாரன் தி.க.சி.யை ஆவணப்படுத்தி இலக்கிய உலகில் தன்னை பதிவு செய்து கொண்டுள்ளார்.
'மிக அருந்தலாய் காணக்கிடைக்கும் ஒரு மனிதர். முழுமையாக இலக்கிய வாழ்வு வாழ்ந்ததைக் கால்காசு கடுதாசி சொல்லியபடி நிற்கும்' என்கிறார் பா.செயப்பிரகாசம். '21-இ, சுடலைமாடன் தெரு, திருநெல்வேலி டவுண்' என்னும் இந்த ஆவணப்படமும் சொல்லியபடி நிற்கும். எஸ்.ராஜ்குமாரனுக்கு நன்றி.
வெளியீடு :
தமிழ்க்கூடம் ,
14, சிவாஜி தெரு,
No comments:
Post a Comment