கீரனூர் ஜாகிர் ராஜாவின் பெருநகரக் குறிப்புகள்

சமீபகால சிறுகதையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் கீரனூர் ஜாகீர் ராஜா . செம்பருத்தி பூத்த வீடு, மீன் காரத் தெர என்னும் சிறுகதைத் தொகுதிகளைத் தொடர்ந்து அவர் தந்திருப்பது 'பெருநகரக் குறிப்புகள்'.
சினிமாவில் வாய்ப்புக் கேட்டு காத்திருக்கும் ஒருவனிடம் கதை கேட்கும் கசப்பான அனுபவத்தை விவரிக்கிறது முதல் கதை 'பெருநகரக் குறிப்புகள்'. கதை கேட்கவும் ஒரு எல்லை இருக்கிறது இல்லையா? பகலும் இரவுமாய் பரிட்சார்த்தம் செய்து ஒருவனைத் தற்கொலைக்குத் தூண்டுவது எவ்விதத்தில் நியாயம் என வினாவெழுப்பி கதைக் கூறுபவர்களைக் குட்டியுள்ளார். சினிமா தொடர்பானதே 'பரகத் நிஷா' என்னும் இரண்டாம் கதையும். சினிமா ஆசையில் சோரம் போன இளம் பெண்ணின் நிலையைச் சொல்லியுள்ளார். சினிமா மோகத்தில் சென்னை ஓடிப்போன ஒரு மகனுக்கு கடிதம் மூலம் தந்தைத் திட்டுவதாக, அறிவுரைப்பதாக அமைந்த கதை 'மழை '. கடித வடிவிலேயே கதை அமைக்கப்பட்டுள்ளது.
'ஒரு காலத்தில் சினிமாவில் கொடிகட்டிப்பிறந்தவர்கள் இன்று அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை' என்று எடுத்துக்காட்டையும் கூறியுள்ளார். சினிமாக்காரனின் மறுபுறத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது 'நிழலின் சாயலும் சாயலின் நிழலும்' என்னும் கதை. சினிமா காரர்கள் பெண்களைத் தவறாக பயன்படுத்திக் கொள்வதையும் சுரண்டுவதையும் இக்கதைக்கூறுகிறது. சினிமா தொடர்பானதாலும் 'அறைச் சுவர்கள் சிரிக்கின்றன' வித்தியாசமானது. இருவருக்குமான உரையாடலாக, விவாதமாக கதையை அழகாக நகர்த்திச் சென்றுள்ளார். அறிவாளித்தமான சினிமா, வியபார ரீதியான சினிமா என இரு தரப்பும் வாதத்தைச் சரியாக வைத்துள்ளது. தீவிரமாக பேசியவனும் வியாபார ரீதியாக வாதிட்டவன் வாங்கித் தரும் மதுவிற்கு அடிமையாவது குறிப்பிடத்தக்கது. சிரிப்பது அறைச்சுவர்கள் மட்டுமல்ல,வாசகர்களும்தான். 'உள்வெளி' கதையும் இதன் தொடர்ச்சியாகவே, அதே சாயலிலேயே உள்ளது. ஓர் இருபது ரூபாய்க்காக அறிவையே அடமானம் வைப்பதாக கதை முடிகிறது. 'சீனுவும் நானும் மற்றும் ஜியும்' கதையும் சினிமாக் கனவில் சிக்கியிருக்கும் இளைஞர்களைப் பற்றியதே. சினிமா எவ்வளவு மோசமானது, சினிமா எவ்வளவு கீழ்த்தரமானது என கதைகளின் வாயிலாக உணர்த்தியுள்ளார். சினிமா மோகத்தில் சீரழிந்தவர்களே அதிகம் என விளக்குகின்றன. சினிமா என்னும் மாயப்பிம்பத்தை உடைத்து இன்றைய இளைஞர்கக்கு எதார்த்த வழியில் செல்ல வலியுறுத்துகிறார்.
புவ்வா என்னும் பெண் கல்யாணத் தரகராக இருக்கிறாள். கல்யாணமாகாதவள். ஆனாலும் 'தலாக்' கொடுத்துவிட்டு வேறு பெண் பார்க்க் கோருபவர்களை வெறுக்கிறாள். மறாக அவன் மனைவிக்கு இரண்டாம் 'நிக்காஹ்' செய்து முடிக்கிறார். பெண்களை திருமணம் செய்து கொண்டு வெளிநாடு சொல்வது 'புவ்வா'வுக்கு பிடிக்கவில்லை. அதனாலே தன் காரியதரிசியான ஹைருன்னுக்கும் திருமணம் முடிப்பில் தாமதமாகிறது. ஒரு தரகராயிருந்தாலும் பணத்தைக் குறியாக் கொண்டு செயல்படாத பாத்திரமாக 'புவ்வா*' சித்தரிக்கப்பட்டுள்ளது சிறப்பு. இக்கதை 'குடமுருட்டி ஆற்றின் கரையில்'.
''இந்த கதையின் மையம் நானா அல்லது லவ்கீஹாவா என்பதில் உங்களுக்கு குழப்பம் இருக்கக்கூடாது'' எனத் தொடங்கும் கதை 'லவ்கீஹா'. ஒரு கதையை எப்படித் தொடங்க வேண்டும் என்னும் மரபை உடைத்த கதை. லவ்கீஹாவைப் பற்றியே பேசினாலும் இறுதியில் லவ்கீஹாவைத் தேடாதீர்கள் என்கிறார். அவருக்குள்ளும் ஒரு லவ்கீஹா இருக்கிறாள் என்று ஒரு தேடுதலையும் உண்டாக்கியுள்ளார்.
தொழுகைக்கு போகும் வழியில் பன்றிகள் மேய்வதால் பன்றி வளர்க்கும் 'சக்கிலி மந்தை'யை காலி செய்ய பள்ளி வாசலில் மகா சபைக் கூட்டி முடிவெடுக்கிறார் நாணா. ஆனால் பேரன் சக்கிலி மந்தைக்கு சார்பாக செயல்படுகிறான். ''மந்தைய எங்களுக்குன்னு ஒதுக்கிக் குடுக்கற வரைக்கும் நாங்க யாரும் எடுப்பு க்ககூஸ் அளற்துக்கு வரமாட்டோம்'' என்னும் எதிர் குரலை ஒலிக்கச் செய்து சக்கிலிக்களுக்காக ஆதரவளித்துள்ளார். முடிவை வெளிப்படையாக்காமல் வாசகர் யூகத்துக்கே விட்டுள்ளார். முஸ்லிம் மத்ததுக்கு எதிரான மதப்பெரியவருக்கு எதிரான மற்றொரு கதை 'பாரம்'. பறையனான ஞானசேகரனையும் சக்கிலியான சுந்தரனையும் நண்பர் எங்கிறார். பேஷ் இமாம் அஜ்ரத்தின் அநியாயங்களை வெளிப்படையாக்குகிறார். அவர் போலி முகத்தை அடையாளப் படுத்துகிறார். வீட்டை விட்டு வெளியேறி பதினான்கு வருடத்திற்கு பின் வந்து ஒரு கைம்பெண்ணை மணக்க சம்மதிக்கிறார். அப்பெண் மவுத்தாகி விட்ட பேஷ் இமாமின் நான்காம் மனைவி. புரட்சிக் கரமான, புதுமையான எண்ணங்களை வெளிப்படுத்தி புதியதொரு சமூகத்துக்கு வித்திட்டுள்ளார்.
''அம்மையும் அச்சனும் ரெண்டு பெண்குட்டிகளும்'' என்னும் கதை ஓர் இயல்பான கதை. பயணத்தை முன் வைத் பயணிக்கிறது. 'இதற்கும் மேல் நீங்கள் இந்தக் கதையில் சுவாரஸ்யத்தை எதிர்பார்த்தால் பாலன் கே.வின் தூங்கிக் கொண்டிருந்த தொடையில் குதரோட்டத்தின் கை ஊர்ந்து ஊர்ந்து புற்றடைய முயற்சித்ததைத்தான் சொல்ல வேண்டும்'' என அவரே கதையின் சுவாரஸ்யத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதுவே இக்கதையின் சுவாரஸ்யம்.
இன்னொரு சாதாரன கதை 'வர்ணதேவதை'. திரவியம் கடையில் வேலை செய்து வந்த பெண் ஆரோக்கியம் கடைக்குச் சென்று விட்டதால் வியாபாரம் நசிந்து விட்டது என்கிறது.
கதையை ஒரு நேர்க் கோட்டு தண்மையில்லாமல் யுத்திகளைக் கையாண்டுக் கதைக் கூறுவதில் கீரனூர் ஜாகீர் ராஜா வல்லராயுள்ளார். 'வெம்மை' யைத் தேதி வாரியாகக் கதையைக் கூறியுள்ளார். துபாய்ச் சென்று துயரப்படும் ஓர் இளைஞ்னின் நிலையைக் கூறுகிறது. துபாய்க்குச் செல்ல நேர்வதையும் துபாயிலிருந்து திரும்பும் கட்டாயத்தையும் விவரிக்கிறது.
பெண்ணியம் தொடர்பான கதை 'சிதைவுகளிலிருந்து'. மும்தாஜை அப்துல்லா மணக்கிறான். முதல் இரவில் வரவு செலவு கணக்குப் போடுகிறான். விடிந்ததும் தங்கைக்கு நிச்சயம் செய்து ஒரு சில நாள்களில் திருமணத்தையும் முடித்து பின் மீதத் தொகைக் கொண்டு வெளிநாடு செலகிறான். கொளுந்தனுக்கு அண்ணி மீது ஓர் இச்சை. மாமியாரும் தவறில்லை என்கிறாள். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திரும்பி வந்ததும் மனைவியைக் கண்டு கொள்ளவில்லை. அவர்களை அவள் மலம் தின்னும் பன்றிகளாக கேவலமாக பார்க்கிறாள். ஒரு பெண்ணின் உணர்வை நுட்பமாக வெளிப் படுத்தியுள்ளார்.
முஸ்லிம் மதத்துக்குள் நடக்கும் ஒரு சடங்கை பரிகாசம் செய்வதான ஒரு கதை 'வெள்ளைச் சேவல்'. 'வெள்ளைச் சேவல் பழி தந்து தான் நல்ல நல்லகாரியங்கள் எல்லாம் கொத்தயத்தார் வகையறாவில் நடக்கும்' என்கிறார். பழியா? பலியா? வெள்ளைச் சேவலுக்காக எல;லா இடங்களிலும் தேடி அலைகிறான். நண்பரின் உதவியால் நான்கு வெள்ளைச் சேவல்கள் கிடைக்கின்றன. கேட்பதை விட அதிகம் கொடுத்து வாங்கி விருந்தும் நடைப் பெருகிற்து. வெள்ளைச் சேவல் அல்ல கருப்பே என்று நிறம் வெளுத்த இறக்கைக் காட்டிக் கொடுத்து விடுகிற்து. 'இதுக்குப் பரிகாரமாக வெள்ளாடு ஒண்ணு வாங்கி அறுத்து பாத்திஹா குடுத்திடுவோம்' என அஜரத் கூறுவதாக கதைமுடிகிறது. தின்பதற்கே காரணம் தேடுகிறார்கள் என பகடிச் செய்துள்ளார். 'இயல்பு'ம் ஒரு விமரிசனமாகவே உள்ளது. அப்பாவுக்கு நாளை அனுவஷ்டிக்க ஒரு பித்த மானிடனுக்கு உணவளிக்க ஊரெங்கும் தேடுகிறான். இறுதியில் அவனே தின்று விட்டு வீடு திரும்புகிறான். 'நீங்க சாப்பாடு குடுக்கப் போனவுடன் பெரியவர் ஒருத்தர் பசிக்கிதுன்னுட்டு வந்தாருங்க.பாக்க மாமா மாதிரியே இருந்தார்.ஒங்களுக்கு எடுத்து வச்ச சாப்பட்ட அவருக்குப் போட்டுடேன்,,,, கொஞ்சம் பொறுங்க,,, வடிக்கிறேன்' என்கிறாள் மனைவி. வீட்டுக்கு வருபவர்களை உபசரித்தாலே போதும் என்கிறது.
மாரியும் பாத்திமாவும் நல்ல தோழிகள். மாரி நோன்பிருக்க விரும்புகிறாள். பாத்திமா மாரியுடன் கோவிலுக்குச் சென்று விபூதி வைத்துக் கொள்கிறாள். அறிந்த பாத்திமாவின் தாயார் சூடு வைக்கிறாள். பாத்திமாவும் சந்திக்க வேண்டாம் என்று மாரியுடம் கூறுகிறாள். தன் பாட்டன் தன்னைக் கண்டிக்காததைக் கண்டு வியக்கிறாள். முஸ்லிம்கள் மதத்தில் தீவிரமாக உள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார். இக்கதையின் தலைப்பு 'அடையாளம்'.
பள்ளிவாசலில் யாசகம் செய்து வாழும் ஒரு குடும்பத்தின் வறுமையை விவரிக்கிறது 'சுவடுகள்'. யாசகத்தக்கு துணைக்கழைத்துச் செல்கிறார். மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக மகளை அழைத்துச் செல்கிறார். யாசகிக்கும் இடத்திலேயே மகள் ருதுவாகிறாள். ஒரு முறை கற்பழிக்கவும் முயற்சி நடைபெறுகிறது. ஆயினும் 'தொழில்'ஜ விடாமல் மகனை அழைத்துச் செல்கிறார். நெகிழச்சியை ஏற்படுத்துகிறார்.
''ஆண்டுக்கு ஒரு முறை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வீடு மாறுதல் ஒரு சடங்காகிப் போனது'' எனத் தொடங்கும் 'காட்டு வண்டுகளின் வீடு'. வாடகை வீடுகளில் வசிப்போர் குறித்து பேசுகிறது.வீட்டு உரிமையாளர்களுடான அனுபவத்தையும் சொல்கிறது. இறுதியில் 'என்றாவது ஒரு நாள் அவன் சொந்த வீடு கட்டி விடுவான் ன போலிருக்கிறது. அப்போதும் கூட வாழக்கை மிச்சமிருந்தால் அவனுடைய சொந்த வீட்டின் அவுட் ஹவுஸை குறைந்த வாடகைக்குப் பிடித்துக் கொண்டு குடியேற வேண்டும் போலிருக்கிறது.என் மகன் அங்கே மரங்களையும் அணில்களையும் தவிட்டுக் குருவிகளையும் காட்டு வண்டினங்களையும் அனுமதிக்க வேண்டும்' என நம்பிக்கையும் ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார். வாடகை வீட்டில் வசிப்பவரின் மன உணவை பிரதிபலித்துள்ளது. மகன் சொந்த வீடு கட்டினாலும் மனம் வாடகை வீட்டுக்கே விழைகிறது என்பது சுட்டத்தக்கது.
'பெருநகரக் குறிப்புகள்' என்னும் இத்தொகுப்பில் மூன்று வகையான தளங்கள் உள்ளன. ஒன்று திரைப்படம் தொடர்பானது. இரண்டு முஸ்லிம் மக்கள் குறித்தானது. மூன்று பொதுவானது. திரைப் படம் தொடர்பானவைகளில் அதன் மாயத்திரையை விலக்கிக் காட்டுகிறார். நிஜம் எதுவென புரியச் செய்கிறார். முஸ்லிம் மதம் குறித்தானவைகளில் மதத்துக்குள் உள்ள மத தீவிரவாதத்தை வெளிச்சப்படுத்துகிறார். மதவாதிகளுக்குளே மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். மதத்துக்குள் ஆதிக்கம் செலுத்துபவர்களை எதிர்த்துள்ளார்.மதத்தின் பெயரால் ஒடுக்கப் படுபவர்களுக்கு ஆதரவளித்துள்ளார். மதத்துக்குள் சிக்கியிருக்கும் நல்ல உள்ளங்களையும் காட்டத்தவறவில்லை.முஸ்லிம் மதத்தவராயிருந்தாலும் மத்ததை விமரிசித்திருக்கும் துணிவு பாராட்டுக்குரியது. மதங்களைத் தாண்டி ஒரு மனித நேயமே தொரகுப்பெங்கும் விரவி கிடக்கிறது.
கதைகளை ஆசிரியர் கூற்றாகவோ அல்லது பாத்திரம் பேசுவதாகவோ கதையை நெருடலின்றிச் சொல்லும் கலை ஆசிரியருக்கு நன்கு கை வரப் பெற்றுள்ளது. உரையாடல்களுக்கு என்று தனிக் கவனம் ஏதும் செலுத்தாமல் கதையைச் சொல்வதன் மூலமே உரையாடலையும் நிகழ்த்தியுள்ளார். கதையைக் கட்டமைப்பதிலும் விதவிதமான யுத்திகளைக் கையாண்டுள்ளார். புதிய கருப்பொருள்களைச் சிறுகதை உலகத்திற்குள் கொண்டு வந்து ஓர் ஆரோக்கியத்திற்கு வழியமைத்து தனதான முத்திரையும் பதித்து வருகிறார். சிறுகதைத் தொகுப்புகளில் எப்போதுதாவது ஒரு நல்ல தொகுப்பை வாசிக்க நேர்ந்து விடுவது உண்டு எடுத்துக்காட்டு 'பெருநகரக்குறிப்புகள்.'
வெளியீடு
அனன்யா 8 /37 பி.ஏ.ஒய்.நகர் புதுக்கோட்டை சாலை,தஞ்சை-613005.
விலை - ரூ 75.00

No comments:

Post a Comment