அன்பு சிவா கவிதை, கட்டுரை என்னும் இரண்டு
தளங்களிலும் இயங்கி வருபவர். ஆய்வுப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு
வருபவர். முனைவர் பட்டம் பெற்று முனைப்புடன் செயல்பட்டு வருபவர். சிறுகதை
முயற்சியிலும் இறங்கி 'அபியும் நானும்' என்னும் முதல் தொகுப்பைத்
தந்துள்ளார்.
'சொல்ல மறந்த கவிதை' என்னும் முதல் கதை,
சாதி இன்னும் மனிதர்களிடம் எந்த அளவிற்கு வெறியாக உள்ளது என்று
வெளிப்படுத்தியுள்ளது. சாதி என்பது மனிதர்களிடையே ஓர் அங்கமாக உள்ளது.
சாதியைத் துறந்து எவரும் வாழ்வதில்லை; வாழ விரும்புவதுமில்லை. சாதிக்கு
எப்போதுமே முதல் பலி ஆவது காதலர்களே. இக் கதையிலும் காதலர்களே
பாதிக்கப்படுகின்றனர். பலியாக்கப்படுகின்றனர். வேறு சாதிக்காரன் தன் சாதி
பெண்ணைக் காதலிக்கிறான் என்பதற்காக அவளைக் கொல்ல முயல அவள் தடுத்து தான்
பலியாகிறாள். அவனும் தன்னை மாய்த்துக் கொள்கிறான். காதலர்களைப்
போற்றுகிறது. சாதி வெறியர்களைச் சாடுகிறது. சொல்ல மறந்த கவிதை சோகம்
நிறைந்த கதை.
திருநங்கைகள் சமூகத்தால்
புறக்கணிக்கப்பட்டும் உதாசீனப்படுத்தப்பட்டும் கேலி செய்யப்பட்டும்
வந்தனர். தற்போது சூழல் சற்று மாறி வருகிறது. பொது மக்களிடையே ஒரு
விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இலக்கியத்திலும் இடம் பெற்று
வருகின்றனர். படைப்புகள் மூலமும் பேசப்பட்டு வருகின்றனர். அன்பு சிவாவும்
'பூமாலை அம்மா' என பெருமைப்படுத்தியுள்ளார். ஓர் அரவாணியால் ஒரு நல்ல
அம்மாவாக இருக்க முடியும் என்று தெளிவுப்படுத்தியுள்ளார். அவர்களிடமும்
பாசம் உண்டு என்கிறார்.
குழந்தைப் பிறப்பு என்பது ஆண் பெண்
சேர்க்கையில் உள்ளது. இருவரும் அவசியம். தம்பதியருக்குக் குழந்தை
பிறக்கவில்லை எனில் பெண்ணை மட்டும் குறை கூறுவது மக்களின் இயல்பு. அவ்வாறான
மக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கிறது 'ஒரே ஒரு கேள்வி'.
மருமகளுக்குக் குறையென்று மகனுக்கு மறுமணம் செய்து வைக்க முயல்கிறாள்
மாமியார். ஆனால் மகனுக்கே குறை. அறிந்த மாமியார் வருந்துகிறாள்.
ஆசிரியரிடம் ஒரே ஒரு கேள்வி. மருமகளுக்கு மறுமணம் செய்து வைக்க முயலாதது
ஏன்?
இது பெண்ணியம் தொடர்பான கதை எனில்
பெண்ணியத்திற்கு மாறான ஒரு கதையாக 'ரூபா என்கிற ரூபாவதி' கதை இடம்
பெற்றுள்ளது. வரதட்சணையால் நின்று போன கதைகள் எராளம் வாசிக்கப்பட்டுள்ளது.
ஆண்களை பண வெறியர்களாக காட்டப்பட்ட கதைகளே பிரபலமாகியுள்ளன. இக் கதையில்
மாப்பிள்ளையாக வந்தவர் முற்போக்குவாதியாக உள்ளார். லஞ்சம் வாங்காதவராக
உள்ளார். நேர்மையாக வாழ விரும்புகிறார். விவரம் அறிந்த பெண் 'பிழைக்கத்
தெரியாதவன்' என்று முடிவு செய்து மாப்பிள்ளையை மறுத்து விடுகிறாள். எதிர்
மறையான இக் கதையை எழுத துணிச்சல் வேண்டும். துணிச்சல் மிக்கவராக ஆசிரியர்
உள்ளார்.
'எட்டாம் வகுப்பு 'அ' பிரிவு' பள்ளியைப்
பெருமைப்படுத்தியுள்ளது. ஆசிரியர்களை கௌரவப்படுத்தியுள்ளது. மாணவர்கள் தவறு
செய்தால் திருத்த முயல்வதே பள்ளியின் பணி, ஆசிரியரின் கடமை என்கிறார்.
ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார். தண்டனையை விட மன்னிப்பே சிறந்தது
என்கிறார். மன்னிப்பே அதிக பட்ச தண்டனை என்பது சுட்டத்தக்கது. ஓர் ஆசிரியர்
எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறது 'கால மாற்றம்'.
இதுவும் ஆசிரியர் குறித்தானதே. கல்வியின் அவசியத்தை விளக்குகிறது, படிக்க
விரும்பாத மாணவர்களையும் படிக்க வைக்க விரும்பாத பெற்றோர்களையும் மன
மாற்றம் செய்கிறது, ஒரு வருடத்திற்குள் மாற்றிக் கொண்டு செல்ல நினைக்கும்
ஆசிரியரே மனமாறி அங்கேயே தொடர நினைக்கிறார். ஆசிரியராக அல்லாமல்
மாணவர்களின் குடும்பத்தில் ஒருவராக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்கிறது.
மனிதர்கள் இறந்தால் புதைப்பது மண் சார்ந்த
ஒரு வழக்கமாக இருந்தது. இந்தியாவிற்கு வந்து நிலமற்று வாழ்ந்தவர்கள்
இறந்தால் எரிப்பது மற்றொரு வழக்கமாக இருந்தது. இட நெருக்கடியாலும் அவசர
வாழ்க்கையாலும் புதைக்கும் வழக்கம் புதைக்கப்பட்டது. எரிக்கும் வழக்கத்தைத்
தொடர நவீனமாக 'மின்சாரத் தகனம்' முறை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இம்
முறையை வைத்து எழுதப் பட்ட கதையாக உள்ளது. மின்சாரத் தகனம் முறை வந்தால்
வேலை போய்விடும் என்று தயங்கிய 'கருப்பு' முடிவில் வரவேற்கிறான். காரணம்
வெட்டியான் என்று கேவலமாக அழைக்கப்படுவது தவிர்க்கப்படும் என்கிறார்.
சாதியம் ஒழியும் என்கிறார். தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஆதரவாக உள்ளது.
மரம் என்பது மனிதர்களுடன் தொடர்புடையது.
மனிதர்களுக்கு உறவானது. உறவாகக் கொண்டாடுவதும் உண்டு. சங்கப் பாடலிலும்
மரத்தை சகோதரியாக பாவித்து எழுதப்பட்டுள்ளது. கவி்ஞர் வைரமுத்துவும்
'மூன்றாம் உலகப் போர்' தொகுப்பில் மரங்களை நட்டு வைத்து உறவாகக்
கொண்டாடுவதாக அமைத்துள்ளார். அன்பு சிவாவின் 'தேவரின் மாமரம்' கதையில்
தேவரின் காதலியாக மாமரம் சித்திரக்கப்பட்டுள்ளது. மரம் வெட்ட திட்டமிட்டதை
அறிந்து தன் உயிரை மாய்த்து மரம் வெட்டுவதைத் தடுக்கிறார்.
தொகுப்பில் மிகச் சாதாரணமான கதையாக உள்ளது
'கோழை'. பேராசிரியர் பதவியில் இருப்பவர் மாணவியைக் காதலிக்கிறார். அவளிடம்
சொல்ல முடியாமல் பதவி தடுக்கிறது. சொல்ல முயலும் போது அவள் தன் திருமண
அழைப்பிதழைத் தந்து அதிர்ச்சியில் ஆழ்த்துகிறாள். கோழைத்தனத்திற்குக்
கிடைத்தத் தண்டனை என்று கதையை முடிக்கிறார். உலகப் பேரறிஞர்கள் பலருக்கு
ஒரு வகையில் பார்த்தால் மாணவிகளே மனைவிகளான வரலாறு உண்டு என்பது
குறிப்பிடத் தக்கது. என்.டி.ஆர். வாழ்வை ஆய்வு செய்து எழுத வந்த மாணவி
சிவபார்வதியே இரண்டாம் மனைவியானார் என்றும் ஒரு பதிவு உள்ளது.
'மஜனுக்கள்' கதையும் சாதாரணமாகவே உள்ளது.
ஓர் எதிர்பார்ப்பை உண்டாக்கி ஏமாற்றம் அடையச் செய்யும் பாணியிலான
கதையாகும். இலக்கிய தகுதி அடைவது சிரமமாகும்.
'அபிக்குப் பிறந்த நாள்' கதை குறிப்பிடத்
தக்கதாகும். ஆறாம் வகுப்பு படிக்கும் அபிக்கு பிறந்த நாள் கொண்டாட ஆசை.
தான் சேமித்து வைத்த பணத்தில் சாக்லேட் வாங்கி விநியோகிக்க
வைத்திருக்கிறாள். கணக்கு நோட்டு இல்லாமல் பள்ளி செல்ல மறுக்கும்
கோபுவிற்காக சாக்லேட்டை கொடுத்து கணக்கு நோட்டு வாங்கித் தருகிறாள். நல்ல
செய்தி. மாணவர்களுக்கு அறிவுரை. பிறந்த நாளை பிறருக்கு உதவி செய்தும்
கொண்டாடலாம் என்று உணர்த்தியுள்ளார்.
விதிப்படியே வாழ்க்கை நடக்கும். விதியை
வெல்ல முடியாது. நடக்க வேண்டியது நடந்தே தீரும். சில நேரம் விதி சதி செய்து
விடுகிறது. இரக்கமற்று நடந்து கொள்கிறது. 'இரக்கமற்ற விதி'யைக் குற்றம்
சாட்டியுள்ளார். கண்டித்துள்ளார். குடிகார மகன் திருந்தி பணம் சம்பாதித்து
அம்மாவை வாழ வைக்க பிரியப்படும் போது அம்மா இறந்து விடுகிறாள். வெளியூரில்
இருக்கும் மகன் அம்மாவின் இறுதிச் சடங்கிற்கும் வர முடியாத நிலை. இதனால்
ஆசிரியர் 'இரக்கமற்ற விதி' என்கிறார். எல்லாம் விதி என்பது மக்கள் வழக்கம்.
விதியை நொந்து பயனில்லை என்பர். விதியை விமரிசித்துள்ளது
கவனிப்பிற்குரியது.
தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உறவு
அன்பாலானது. பாசத்தாலானது. தாயைப் பிரிந்த குழந்தையின் சோகம் சொல்லால்
சொல்ல முடியாதது. எழுத்தால் எழுத முடியாதது. உணரவே முடியும். 'அலாவதீனும்
குட்டி நாயும்' கதை அற்புதமானது. அடர்த்தியானது. தாயைப் பிரிந்து அத்தை
வீட்டில் வாழும் அலாவுதீன் ஒரு குட்டி நாயை எடுத்து வளர்க்கிறான். அம்மா
நாய் வெளியில் குரைக்க குட்டி நாய் உள்ளிருந்து குரைக்கிறது. அலாவுதீன் தன்
நிலையை உணர்ந்து குட்டி நாயை விட்டு விடுகிறான். அம்மா நாயுடன் குட்டி
நாய் சேர்ந்து விடுகிறது. அலாவுதீன் அம்மாவை நினைத்து ஏங்குவதாக கதையை
முடித்து வாசகர்களைக் கலங்கச் செய்த விடுகிறார் அன்பு சிவா.
'அபியும் நானும்' என்று தொகுப்பின்
தலைப்பிலான கதை இயல்பான ஒரு கதை. தாய் வீடு என்றால் பெண்களுக்கு எப்போதுமே
ஒரு பிரியம்தான். விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். மாமியார் வீடு என்றால்
மனம் விரும்பாது. இந் நிலையை விளக்கும் கதையாக அமைந்துள்ளது. அபியும்
நானும் தலைப்பில் காணும் இணைப்பு, பிணைப்பு கதையில் இல்லை.
அன்பு சிவாவின் கதை முயற்சி
வரவேற்பிற்குரியதாக உள்ளது. ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு தளத்தில்
அமைத்துள்ளார். வாழ்வில் அன்றாடம் காணும் நிகழ்வுகளையே படம் பிடித்துக்
காட்டியுள்ளார். கதைகளை எச் சிரமமும் இன்றி நேர்க் கோட்டிலேயே
அமைத்துள்ளார். ஓர் எதார்த்தமான சிறுகதை எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே
எழுதப்பட்டுள்ளன கதைகள். மனித உணர்வுகளை முன் வைத்துள்ளது. மனித நேய
அடிப்படையே கதைகளில் முக்கியமாக காணப்படுகின்றது. இத் தொகுப்பில் இடம்
பெற்றுள்ள கதைகள் அனுப்பப்பட்டும் ஒன்று கூட பிரசுரமாகவில்லை என்று
ஆசிரியர் ஓர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதழில் பிரசுமானாலே
நல்ல கவிதை என்பது தவறான எண்ணம். கவிஞர் பாரதி வசந்தன் இதழுக்கு
அனுப்பப்பட்டு மறுக்கப்பட்ட கவிதைகளைத் தொகுத்து 'தலை நிமிர்வு' என்னும்
தொகுப்பை வெளியிட்டுள்ளது இங்கு நினனவிற்கு வருகிறது.
ஒரு தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளுமே
நல்லதாக அமைந்து விடாது. இத் தொகுப்பிற்கு வாழ்த்துரை வழங்கிய எழுத்தாளர்
நாஞ்சில் நாடன் "இந்த கதைகளை எழுதியவன் என்ற நிலையில் இருந்து அல்லாமல்
விலகி நின்று வாசித்தால் தனது கதைகள் தொடக்கக் கட்டத்தில் இருப்பதை அவர்
உணர்ந்து கொள்ளலாம்" என்று சுட்டிக் காட்டியுள்ளார். 'அபியும் நானும்' ஒரு
நல்ல தொடக்கமாகவே அன்பு சிவாவிற்கு அமைந்துள்ளது.
No comments:
Post a Comment