பொன்.குமார்
கவிதைத் தடத்தில் ஒரு புதிய தளத்தில், ஒரு புதிய மொழியில் இயங்குபவரே இலக்கியத்தின் ஆளுமையாக கருதப்படுகின்றன். கவிதைக்கு சாயல் இருக்கலாம். கவிஞருக்கு சாயல் கூடாது.
“முற்றிய முதுமையில்
முதிர்ந்த மரத்தில் எங்கெங்கும்
உறவு கொண்டோடும்
எனக்கான கவிதை மொழி''
என சாயல் அற்று சிலரே கவிதைப் பிரவேசம் செய்து வருகின்ற சிலரில் ஆர். ரத்தினசாமி ஒருவர். இரண்டாம் படைப்பாக அவரின் தொகுப்பு "மலை'.
முன்னுரை மலை குறித்தானாலும் தொகுப்பில் மலை பற்றியவை இல்லை.
“ஒரு பறவை
தனியே பறப்பது போல
நீண்டு போய்க் கொண்டுள்ளது
அந்த மலைப்பாதை'' என ஒரேயொரு சிறுகவிதை.
அப்பாவின் ஆளுமை கவிஞரிடம் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதை அப்பா பற்றியதானவை உறுதிப்படுத்துகின்றன் முதிர்வுமுலம் மரியாதையை வெளிப்படுத்துகிறார். அப்பா அளவிற்கு அம்மா புகழும் கவிஞர் பாடியுள்ளார். வீடெல்லாம் புகழ் மணக்கும் மூலம் அம்மாவின் நேர்மையை அழகாக எடுத்துரைத்துள்ளார்.
“யாவும் நினைவில் நெருக்கமாய்
உள்ளது போலவே
அம்மாவின் அந்த கடைசிப் பெருமூச்சும்
சாகாது உள்ளது''
என ‘இருப்பு' பெருமூச்சு விடச் செய்கிறது. வீடும் ஒரு பாடு பொருளாக பாடப்பட்டுள்ளது. பெற்றோரைத் தொடர்ந்து மகள் குறித்தும் கவிதைப் பாடி உள்ளார்.
“உன் வார்த்தைகள் யாவும்
எழுதப்படுமுன் பேசப்படுமுன்
கழுவப்பட வேண்டும்
நெஞ்சம் நேர்மையைச் சுரக்க வேண்டும்''
என அறிவுரைத்துள்ளார். மகளின் மீதுள்ள அக்கறையின் வெளிப்பாடாக உள்ளது இக்கவிதை.
கந்தா...யீ என்னும் கவிதை ஒர் ஆசிரியர் என்னும் நிலையில் மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்ட கவிதையாகும். ஒரு மாணவன் சீரழியக்கூடாது என்னும் ஆசிரியரின் நற்குணம் பாராட்டுக்குரியது. ஒரு கவிஞரை விட ஒர் ஆசிரியரையே இக்கவிதை மூலம் அறிய முடிகிறது ‘வானம் என் கண்கள்' மூலம் ஒரு கவிஞராக தன்னை அடையாளம் காட்டியுள்ளார்.
நகரத்தின் குரல் எத்தனையோ இருந்தாலும் கிராமத்துக் குரல்கள் காண்பதரிது. ‘காணக் கிடைக்காத குரல்கள்' மூலம் பல குரல்களை வாசகருக்கு அடையாளப்படுத்துகிறார். “எப்படித்தான் வார்த்தைகள்
இவர்களுக்குகெல்லாம் இயல்பாய்க் கிடைக்கிறதோ வாய் திறந்தால் வார்த்தை ஜாலந்தான்'' என கிராமத்தவர் மொழி கொண்டு பிரமிக்கிறார்.
மனிதர்க்கு பயம் ஏற்படுவது இயல்பு கவிஞரும் சில பயங்களை கவிதை மூலம் பட்டியலிட்டுள்ளார் :
“குரூப் ரீடிங்களுக்குப் போய் வருகிறேன்
மகள் தினமும் சொல்லிப் போகையில்
லவ் இருக்கலாமோ? என பயங்கொள்வது அர்த்தமற்றது சராசரியானது ஆயினும் ‘தீமைகளைத் தொலைந்திடும்' நாள் மூலம் பெண்ணியம் பேசியுள்ளார் பெண்களுக்காக நேரடியாகவே குரல் கொடுத்துள்ளார்.
ஊரில் பலர் இருந்தாலும் ஒரு சிலரே மனதளவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்துவர் அவ்வாறு கவிஞரை பாதித்தவர் சிக்கணப்ப கவுடர். கவுடர் என்பவர் மலையில் வாழ்வபர். வெறும் உருவமாய் என்னுள் பதிந்தவரில்லை என கவுடர் குறித்த பதிவுடன் தொடர்கிறது கவிதை.
தொகுப்பு நெடுக கவிஞர் சந்தித்த மனிதர்களைக் காண முடிகிறது. உறவுகளை குறித்து பேசும் போது உணர்வுகள் கூடுதலாகவே வெளிப்படுத்தபட்டுள்ளது. ஓர் எதார்த்தமான கவிஞராக தொகுப்பின் வழி அறியப்பட்டாலும் சமூக அக்கறையுள்ளவராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிச் செய்துள்ளார் என்பதற்கு எடுத்துக் காட்டாக உள்ளன
இயல்பாகவே ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தியுள்ளார். இது கவிஞரின் குற்றமாகக் கூற முடியாது இன்று மக்களின் போக்கே அவ்வாறுதான் உள்ளது. மலை மக்களின் பண்புகள், குணங்களை எடுத்துக் காட்டியதற்கு பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் மலை குறித்தும் மலை மக்கள் பற்றியும் எழுத கவிஞருக்கு ஏராளமான வாய்ப்புண்டு அடுத்தத் தொகுப்பில் அவைகளை எதிர்பார்க்க வைக்கிறது மலை.
No comments:
Post a Comment