இது கதை அல்ல

என் பேரு கங்காங்க. ஒவ்வொருத்தர்க்கிட்டயும் ஒரு கத இருக்கும். என்கிட்டயும் ஒரு கத இருக்கு. கதய சொல்லலாம்னா காது கொடுத்துக் கேட்க ஆளில்ல. கேட்டவங்களும் பெரிசா எடுத்துக்கிட்ட மாதிரி தெரியல. என்னால சொல்லாமலும் இருக்க முடியல. அதனால ஒரு முடிவு பண்ணிட்டேன். கதய எழுதி வைச்சிடறேன். என்னைக்காவது யாராவது படிச்சாங்கன்னா புரிஞ்சிக்கட்டும். அப்பவாவது ஒரு வழி பிறக்கான்னு பார்ப்போம்.

கத என்னான்னா... சொல்ல ஆரம்பிக்கறவே சோகம் மனச கவ்வுதுங்க... ஒரு ஊர்ல. . இப்படி ஆரம்பிச்சா இது வழக்கமான கத தான்னு நீங்க சொல்லிடுவிங்க. அதனால நேரடியாகவே கதக்கு வந்துடறங்க.

அவன் பேரு கண்ணங்க... அவனுக்குக் கூட பிறந்தது ஒரு அக்கா. . அப்புறம் ஒரு தம்பி. அப்பா நெல புரோக்கருங்க. அம்மா வீட்டோட சரிங்க. அதனால அப்பாவ விட அம்மாதான்ங்க அவனுக்கு எல்லாம். அம்மாவுக்கும் அவன்னா ரொம்ப பிரியங்க. ஏன்னா அவன்தானே அந்த வீட்டுல முத ஆம்பளயா பொறந்தான். அப்பாகிட்ட அவ்வளவா ஒட்டுதல் கெடயாதுங்க. அடுத்தது அவனுக்குப் பிடிச்சது அக்காகங்க. அக்கான்னு சொல்றத விட அவனுக்கு நல்ல தோழின்னு சொல்லலாம். இயற்கையாகவே அக்கான்னா அவனுக்கு ரொம்ப இஷ்டம்னே சொல்லலாம். தம்பி சின்னபயன். அவன் அப்பா செல்லம்.

கண்ணன் படிச்சது அவங்க ஊர்ல இருக்கற முனிசிபல் ஸ்கூல்லதான். பத்தாவது வரைக்கும்தான் படிச்சான். அதுக்கப்புறம் அவனுக்கு படிக்கற சூழ்நில இல்ல. ஸ்கூலுக்குப் போறப்ப தெருப்பசங்களோடதான் போவான். ஆனாலும் அவங்கக் கூட நெருங்காம கொஞ்சம் தனியாவே இருப்பான். அவன் சுபாவம் அப்படின்னு யாரும் கண்டுக்கல. வாத்தியாரும் ‘ரிசர்வ் டைப்பா இருக்கானே’ ம்பார். அம்மா மட்டும் மத்த பசங்க மாதிரி சிரிச்சி பேசி சந்தோசமா இருக்கலாம்ல என்பாள். அக்காவும் ஜாலியா இருடா என்பாள்.

சின்ன வயசா இருக்கற வரைக்கும் அவனும் எல்லா பசங்க மாதிரித்தான் சாதரணமா இருந்தான். வயசு ஆக ஆகத்தான் அவனுக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு. என்னான்னு சொல்லத் தெரியல. உடம்புல ஒரு மாற்றம் ஏற்படறத உணர்ந்தான். அவன் வயசு பசங்களுக்கு எல்லாம் மீச மொளக்க ஆரம்பிச்சுச்சு. இவனுக்கும் மொளச்சுச்சு. பசங்களுக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் கேலியாக பேசிக்குவாங்க. இவனும் அதுவாத்தான் இருக்கும்னு நெனச்சான்.

ஒரு முற அம்மாகிட்டயும் சொன்னான். பருவ வயசுல எல்லாத்துக்கும் அப்படித்தான் இருக்கும் போ என்றாள். அவன் முகம் வாடிப் போச்சு. அக்காகிட்ட சொன்னாலும் சரியா போய்டும்னு சொன்னாள். ஆனாலும் அவனுக்குள்ள எழுந்த சந்தேகத்துக்கு வெட கிடக்கல.

ஒன்பதாம் க்ளாஸ் முடிஞ்சு லீவுல வீட்லயே இருந்தான். பசங்கக் கூட வெளிய வெளயாட போக மாட்டான். வீட்ல இருந்தாலும் அவன் மனசெல்லாம் அக்காவ நெனச்சுக்கிட்டிருந்தான். அக்கா மாதிரி இருக்கனும்னு ஆசபட்டான். ஒரு முறை அக்காவிற்கு தெரியாம அவளோட டிரஸ்களை போட்டு பார்த்தான். அப்பத்தான் அவன் மனசு நெறஞ்சது போல இருந்தது.

லீவு முடிஞ்சு பள்ளிக்கூடம் போனான். பத்தாம் க்ளாஸ் ரூம்ல போய் உட்கார்ந்தான். பசங்க கூட உட்காரவே விருப்பமில்ல அவனுக்கு. பிள்ளங்க இருக்கற பக்கமே ஏக்கமா பார்ப்பான். பிள்ளங்களும் புரியாம முழிச்சன. பசங்களுக்கு புரிஞ்சு போச்சு. அவங்களுக்குள்ள அவன பத்தி குசுகுசுன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க.

வீட்லயும் அம்மாவுக்கு சந்தேகம் வந்துடுச்சு. திட்டியும் பார்த்தாங்க. அன்பா சொல்லியும் பார்த்தாங்க. அவன் மனசு கேட்கல. அக்கா கூட பசங்கள பாருடா அவங்க மாதிரி இருடான்னு சொன்னாள். ஆனா அவனுக்கு அக்கா மாதிரி டிரஸ் பண்ணி பூவும் பொட்டும் வைச்சுக்கனும்தான் ஆச. நான் வீடு கூட்றம்பான். வாசல பெருக்கறம்பான். பாத்திரங்கள் கழுவுறம்பான்.

வீட்ல வெறுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அம்மா மனசு கேட்காம அழுதாள். அக்கா என்ன சொல்வதுனு தெரியாம தவிச்சா. அப்பாவிற்கு தகவல் தெரிஞ்சி பெல்டால அடிச்சாரு. நான் என்ன பண்ணட்டும் என்னால நீங்க சொல்ற மாதிரி இருக்க முடியலியே என்று கெஞ்சினான்;. ஆனாலும் பயனில்ல. இப்படியே இருந்தினா இந்த வீட்ல உனக்கு இடமில்லன்னு அப்பா சொல்லிட்டாரு. அம்மா அமைதியா இருந்தா.

நடையில ஒரு மாற்றம் வந்துடுச்சு. இதனால கண்ணனின் நடமாட்டம் வெளியில குறைஞ்சிடுச்சு. பசங்க கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டதால ஸ்கூலுக்குப் போறது நின்னு போச்சு. பத்தாம் கிளாஸ் பாதியிலே முடிஞ்சிடுச்சு.

கண்ணன்கிற பேர யாரும் சொல்றதில்ல. அலி, ஒன்பது என்றுதான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. ஊர்லயும் அடையாளமா போச்சு. புரோக்கர் பையன் கண்ணன்னு சொன்னவங்க அலியோட அப்பான்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அதனால அவனோட அப்பாவிற்கு அவமானம் அதிகமாகி அது கோபமா மாறிடுச்சி. பார்க்கறப்பல்லாம் திட்டுவாரு. போய் சாவும்பாரு.

யாரு என்ன சொன்னாலும் யாரு எப்படி திட்டினாலும் கண்ணனால தன்னை மாத்திக்க முடியல. ஆம்பளங்க பக்கம் போகவே பிடிக்கல. பெண்கள் இருக்கற பக்கமே அவனுக்கு இருக்கணும்னு தோனுச்சு. தானும் ஒரு பொண்ணுங்கற நினைப்புதான் அவன் மனசுக்குள்ள இருந்துச்சு. அவன் நடவடிக்கைகளும் அப்படித்தான் இருந்துச்சு.

ஆம்பளங்க மாதிரி டிரஸ் பண்ணிக்கவே அவனுக்குக் கொஞ்சமும் இஷ்டமில்ல. அப்படியே போட்டாலும் உடம்பெல்லாம் அரிக்கற மாதிரியும் கம்பளிப் பூச்சி ஊர்ற மாதிரியும் இருந்துச்சு. அவனோட உணர்வுகள் புரிஞ்சிக்கற மனநிலை யாருக்குமில்ல. ஒரு குற்றவாளி மாதிரித்தான் அவன பார்த்தாங்க. அவனுக்குள்ள பெண்ணோட உணர்வு உண்டானதற்கு அவனா காரணம்? இல்லையே. அது படைப்பின் குற்றமுன்னுதான்னே சொல்லனும்.

சமூகத்துல கண்ணன் மட்டும்தான் அப்படியா? இல்லையே. ஏன் சமூகம் ஏத்துக்க மாட்டிங்குதுன்னே தெரியல. சமூகத்த விடுங்க. வீடு அத விட மோசமால்ல இருக்கு. பெத்தவங்களே புரிஞ்சுக்காத போது மத்தவங்கள என்ன சொல்ல முடியும்?

முடிவா ஒரு நாளு அவங்கம்மாகிட்டய கேட்டான். ஏம்மா பெத்தவதானே நீ. நான் என்ன தப்பு செஞ்சன்?- என் நிலமய புரிஞ்சுக்க கூடாதான்னு கேட்டான். அவனோட அம்மா அப்படி சொல்வாங்கன்னு அவன் கொஞ்சமும் எதிர்பாக்கல. நீ இருந்தின்னா நாங்க உயிரோட இருக்க மாட்டம்னு சொல்லிட்டாங்க. அதுக்கு மேல அவனால பேச முடியல. அப்பா நிச்சயம் ஒதுக்க மாட்டார்னு தெரியும். அக்கா என்ன பண்ணுவாங்க? தம்பிய பத்தி சொல்ல வேண்டியதில்ல.

அழுதான். அப்புறம் மனச தேத்திக்கிட்டு அடுத்த கட்ட நடவடிக்கையில இறங்கினான். தன்னோட பொருள் எல்லாம் எடுத்து பேக் பண்ணிக்கிட்டான். வீட்ட நல்லா பார்த்தான். அம்மா நான் வர்றம்மான்னு கிளம்பினான். மத்தவங்கிட்டயும் சொன்னான். யாரும் எதுவும் பேசல. வெறுமனே நின்னுக்கிட்டிருந்தாங்க. அவன் வீட்ட விட்டு கிளம்பி போய்ட்டான். இதுதாங்க கண்ணனோட கத.

இவ்வளவு நேரங் கத கேட்டதுக்கு நன்றிங்க. நீங்க என்ன நினைக்கறிங்கன்னு எனக்கு தெரியல. இருந்தாலும் ஒரு உண்மைய சொல்லிடறன். சொல்லாம இருக்கக் கூடாதுங்க. அந்த கண்ணன் வேற யாருமில்ல. நான் தாங்க.

1 comment:

  1. கங்காவுடைய மனநிலையில் இருந்து பார்க்கும்பொழுது மனம் வலிக்கிறது (இத பார்த்து காஞ்சனா படத்துல காப்பியடிச்சிருப்பான்களோ)

    ReplyDelete