|
| ![]() | |||||
|
| ![]() | |||||
|
| பிப்ரவரி 2008 | |||||
|
| ![]() | |||||
ஆவணப்பட விமர்சனம்: பொன் குமார்
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வோர் ஆளுமையை ஆவணப்படுத்த ஒரு காரணமிருக்கும். கவிஞர் தாரகை தான் பிறந்த மண்ணான வத்தலக்குண்டில் சுப்பிரமணிய சிவா பிறந்ததே பெருமையாகக் கருதி ஆவணப்படுத்தியுள்ளார். சிவா பிறந்தது வத்தலக்குண்டு எனினும் இறந்தது பாப்பிரெட்டிப்பட்டி. தாரகை பிறப்பு முதல் இறப்பு வரை ஆவணப்படுத்தியுள்ளார். பிறந்த வீட்டைக் காட்டுகிறார். பெற்றோர் உடன்பிறப்பு பெயர் சொல்லப்படுகிறது. அடக்கம் செய்யப்பட்ட கல்லறையைக் காட்டுகிறார். இடையில் சிவாவின் சில படங்களை வைத்தே பின்னணியில் சம்பவங்களைக் கூறி ஆவணப்படத்தை அருமையாக நகர்த்திச் செல்கிறார். 4.10.1884ல் பிறந்து 23.7.1925ல் இறந்த சிவாவின் நாற்பத்தொரு ஆண்டு வாழ்க்கையை நாற்பத்தொரு நிமிடங்களில் ஆவணமாகச் சுருக்கித் தந்ததுள்ளார்.
முழு வாழ்க்கையைக் கூறினாலும் சுதந்திரப் போராட்ட வீரர் என்னும் மையத்தையும் சரியாகக் காட்டியுள்ளார். பாரதி, வ.உ.சி.யோடு இணைந்து வெள்ளையருக்கு எதிராகப் போராடியதையும், ஆர்ப்பாட்டம் செய்ததையும் பின்னணியில் கூறியே புரியச் செய்கிறார். சிவா சிறையிலடைக்கப்பட்டதை சிவா படத்தை சிறைக்குள் இருப்பதாக வரைந்து காட்டிய உத்தி நன்று. சிறையிருந்தபோதும் சுதந்திரத்தையே மனம் எண்ணியதைச் சுட்டி இதயத்தை நெகிழ்த்துகிறார். சிவா வெள்ளையருக்கு எதிராக ஒரு நெருப்பாக இருந்தார் என்பதை இடையிடையே சுவாலையைக் காட்டி உணரச் செய்கிறார்.
சிவா ‘ஞானபானு’ என்னும் சிற்றிதழைத் தொடங்கி நடத்தியதையும் ஆவணப்படம் சுட்டுகிறது. தற்போது சிவாவிற்கு புகழ் சேர்க்கும் வகையில் நினைவுகூறும் விதம் வத்தலக்குண்டில் ‘சுப்பிரமணிய சிவா’ என்னும் சிற்றிதழ் வதிலை சௌந்தர் என்பரால் நடத்தப்பட்டு வருவதையும் காட்டுகிறது. வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திற்கு சிவா பெயர் வைத்ததையும் காட்டத்தவறவில்லை.
தமிழக மூத்த, நீண்டகால சட்டமன்ற உறுப்பினரான ஏ.எஸ். பொன்னம்மாள் அவர்களை நேர்கண்டு அவர் வாயிலாகப் பாராட்டச்செய்து சிலை அமைக்க வேண்டும் என்னும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டியில் சிவாவுடன் தொடர்புடையவர்களையும் சந்தித்து நினைவுகூறச் செய்து அறியச் செய்கிறார். பாப்பிரெட்டிப்பட்டியில் சிவா ‘பாரதிய மதம்’ தொடங்கியதையும் ‘பாரதமாதா கோவில்’ கட்டியதையும் குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் தாரகை ஆவணப்படுத்தவதற்கு குறைந்த ஆவணங்களையே பயன்படுத்தியுள்ளார். கிடைக்கவில்லையா அல்லது கிடைத்ததே குறைவானதுதானா என்னும் ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ராம்குமாரும் குறிப்பிடும்படி படத்தைத் தொகுத்துள்ளார். சமீபங்களில் ஆவணப்படுத்தம் முயற்சி நடைபெறும்போது சாதியர் என்னும் அடிப்படையிலேயே தொகுக்கப்படுகிறது. கவிஞர் தாரகை தான் பிறந்த மண்ணை சார்ந்தவர் என்னும் அடிப்படையில் ஆவணப்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.


No comments:
Post a Comment