![]() | |||||
![]() | |||||
![]() | |||||
பொன்.குமார்
இதுவரையில் வெளிவந்த பெரும்பாலான படைப்புகள் ஆணின் அதிகார வெளியான சிறையையே பாதுகாப்பான அறையெனப் பெண்களை நம்ப வைத்திருக்கின்றன. அதற்கு எதிரான கருத்தைப் பெண்மொழியின் துணையோடு கலகமொழியின் வெளிப்பாட்டில் நிலைநிறுத்த வேண்டும் என்கிற முன்னுரை வாசகமும் இதன் தொடர்ச்சியான தொகுப்பு முயற்சியும் மிகுந்த பாராட்டுக்குரியதே. ஆனால் தன்னுடல் தனக்கான உடலாக இல்லாமல் போனதன் காரணத்தை- ஆதங்கத்தை, பள்ளியறையின் கொடூரங்களை எவ்வித ஒப்பனையுமின்றி பெண் மொழி அம்பலப்படுத்துவதுதான் உண்மையான கலகமொழி என்று முடிவு செய்திருப்பது கேள்விக்குரியது.
தொகுப்பிற்கு படைப்புகளைத் தந்த கட்டுரையாளர்கள் பெண்ணியம் என்பதற்குப் பல்வேறாய்ப் பொருள் தந்துள்ளனர் என்றபோதிலும் சிந்தனைக் கோணம் ஒன்றாகவே இருக்கிறது. ‘பெண்ணியம் என்பது பெண்ணின் எல்லாச் சிக்கல்களையும் புரிந்து கொண்டு பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவது மட்டுமல்ல- சமூகத்தையே மாற்றி அமைக்கக் கூடிய வலு நிறைந்தது’ என்னும் ச.குமாரின் கருத்து சிறப்பு. சமூகத்தின் சரிபாதி அங்கமான பெண்ணினம் விழிப்புணர்வு பெறாமல் சமூக விடுதலை தான் இங்கேது? பெண்ணியம் என்கிற சொல் ஃபெமினா என்கிற லத்தீன் மொழிச் சொல்லே ஆங்கிலத்தில் ஃபெமினிசம் என்று மருவி பின் தமிழில் பெண்ணியம் என்றாயிற்று என்கிறார் ச.குமார்.
இர.மணிமேகலை, பன்னீர் செல்வம் ஆகியோரின் கட்டுரைகள் தலித் பெண்கள் குடும்ப ஒடுக்குமுறைக்குள்ளும் வெளியே ஆதிக்க சாதி ஆண்களாலும் சொல்லொணாத் துயருக்கு உள்ளாவதை எடுத்துரைக்கின்றன. தலித் பெண்களின் வாழ்க்கை நெருக்கடி அவர்களைப் போர்க்குணமிக்க பெண்களாக மாற்றி இருப்பதையும் சுட்டுகின்றன.
பெண்ணியம் ஏன் அவசியம், பெண்ணியத்தின் இலக்கு எதுவெனக் கட்டுரைகள் கூறுகின்றன. பெண்மொழி, பெண் உடல்மொழி என இரு கூறுகள் இயங்குகின்றன. உடல்வலி, உள்ள வலி என இருப்பின் வலியை கட்டுரையாளர்கள் சரியாக உள்வாங்கி எளிமையாக வெளிப்படுத்தி உள்ளனர். கட்டுரைகள் கனமாக இருந்தும் கட்டுமானம் சரியாக இல்லை. பெண்ணின் இருப்பின் வலியை எடுத்துச் சொல்ல இத்தொகுப்பு அவசியமாகிறது. இருப்பின் எதிர்ப்பைக் காட்ட வருகின்ற தொகுப்பு எது மாதிரியாக இருக்கும்? பொறுத்திருந்து பார்க்கலாம்.


No comments:
Post a Comment