தங்கம் மூர்த்தியின் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து

கவிதை உலகில் புதுக்கோட்டைக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. கவிஞர் பாலா மற்றும் கவிஞர் கந்தர்வனை தந்த பூமி. கவிஞர். நா. முத்து நிலவன், கவிஞர் மு. முருகேஷ் போன்ற நாடறிந்த நல்ல கவிஞர்களையும் புகழயடையச் செய்த ஊர். புதுக்கோட்டையைப் 'புதுக் கவிஞர்களின் கோட்டை' என்று அழைப்பதும் பொருத்தமாகும். புதுக் கோட்டையின் மற்றுமொரு புகழ் பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி. சமீபத்தில் வெளியாகியிருக்கும் அவரின் நான்காம் தொகுப்பு 'என் பண்டிகையின் நாட் குறிப்பிலிருந்து'. தொகுப்பின் முதல் கவிதையும் இத்தலைப்பிலேயே அமைந்துள்ளது. பண்டிகை நாளில் ஒரு தந்தையின் மனநிலையை எவ்வாறெல்லாம் இருக்கும் என காட்டியுள்ளார். நினைவுக் கூர்ந்துள்ளார். ஒரு தந்தையாகவே எழுதியுள்ளார்.
அப்பாவை நினைத்தபடி
வாசல் படியில்
அமர்ந்திருந்தேன்
என்
பிள்ளைகள் வருகைக்காக   என்கிறார்.
பிள்ளைகளோடும் குடும்பத்தோடும் பண்டிகைக் கொண்டாடுவதே பேரின்பம் என்கிறார்.
'பூக்களைப் பற்றி பேசாதீர்கள் ' எனத் தொடங்கும் கவிதைப் பூக்களைப் பற்றிப் பேசியுள்ளது. பூக்களின் மீதான பிரியத்தை வெளிப் படுத்தியுள்ளார். பூக்களுக்காக வருந்தியுள்ளார்.
அணு அணுவாய்
அதனை ரசிப்பேன் நான்
அவைகளோ
மூக்கே இல்லாதவர்களிடம்
முடங்கிக் கிடக்கின்றன   
ரகிக்கத் தொpந்தவரிடமே பூக்கள் இருக்க வேண்டும் என்கிறார். வாசிக்கும் பழக்கம் உள்ளவனிடமே புத்தகங்கள் இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறார். பூக்களிடமும் தன்னைப் பற்றி பேசா வேண்டாம் என்பதன் மூலம் பூக்களுக்கும் கவிஞருக்குமான உறவு வெளிப்படுகிறது. 'பூக்கள்' என்பது குறியீடாகவும் உள்ளது.
எவ்வளவு
பவ்வியமாய் போனாலும்
வள்ளென்று குரைக்கின்றன
நாய்கள்   எனத் தொடங்கும் கவிதையும் குறியீடாகவே உள்ளது. 'நாய்களை'. அதிகார வர்க்கத்திற்கும். ஆதிக்க சக்திக்கும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும்
பிஸ்கட்டுகளுக்கும்
அடிபணியாத நாய்களை
எங்கனும் நான் கண்டதில்லை   என்பது கவனிப்பிற்குரியது. 'நாய்கள்' கேவலமானவைகள், இழிவினங்கள் என சாடியுள்ளார்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர். கவிஞர் 'அகத்தின் அசிங்கம் முகத்தில் தெரியுமா?' என வினா எழுப்பியுள்ளார். ஒருவரின் அடையாளம் எது?புற அடையாளமா?அக அடையாளமா?உருவமா?உள்ளமா?எப்படி அடையாளப் படுத்துவது என்கிறார்.
வசீகரச் சிரிப்பையா?
வக்கிரப் புத்தியையா?   ஒருவனின் அடையாளமாக அவன் குணத்தையும் சொல்ல முடியும் என்கிறார். சொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்ற வருத்தமும் கவிதை வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு நல்ல கவிதை என்பது எதுவென அறுதியிட்டுக் கூற முடியவில்லை எனினும் வாசிப்பாளனை பாதிப்பது, வாசிப்பாளனிடம் தாக்கத்தை ஏற்படுத்துவது, அதிக பட்சமாக உறங்காமல் செய்வது என்று கூறலாம். ஒரு நல்ல கவிதை வாசித்த அனுபவத்தை ஒரு கவிதையாக்கியுள்ளார்.
தொலைபேசியில் அழைத்து
நீ எழுதிய கவிதையை
சொன்னாய்
கவிதையை அசை போட்டு
புரண்டு புரண்டு
படுக்கிறேன் நான்
ஆழ்ந்து
உறங்கிக் கொண்டிருப்பாய்
நீ     ஒரு நல்ல கவிதை வாசித்ததின், கேட்டதின் விளைவாக வெளிபட்டுள்ளது. இது ஒரு நல்ல கவிதை ஆகாது என்பதும் உண்மை. காதலியிடம் பேசுவதாக எழுதப்பட்டுள்ளது. இவ்வாறான காதல் கவிதைகள் தொகுப்பில் ஆங்காங்கே இளைப்பாறச் செய்கின்றன. தொகுப்பிலுள்ள ஒரு நல்ல கவிதைக் கவிஞரின் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பும் பெண் பற்றியது. வறுமையில் படிக்க முடியாமல் பணிபுரியும் பெண்ணைக் குறித்து எழுதியுள்ளார்.
பெட்ரோல் எரிச்சலால்
சிவந்திருந்தன
அவளது கண்கள்
அழுதிருந்ததால்
சிவந்திருந்தது
என் கவிதை    சிவந்ததால் சிறப்புப் பெறுகிறது இக்கவிதை.
நீண்ட ஆயுளுடன் பெயரன் பெயர்த்திகளை எடுத்த ஒருவர் இறந்து விட்டால் குடும்பத்தாரிடையே வருத்தம் இராது. எப்போது இறப்பார் என்று எதிர்பார்த்து இறந்து விட்டால் மக்கள் மகிழ்வர். அப்போது பறை ஒலிக்கும். வேட்டு வெடிக்கும். வாழ்ந்ததை நினைவு கூர்வர்.
அதிரும் பறை ஒலியும்
அதிர் வேட்டுச் சத்தங்களும்
அருகிருப்போர் புகளுரையும் கேட்டு
சிரித்துக் கொண்டார்
செத்துக் கிடந்த
தாத்தா   
ஒரு சம்பவத்தை உள்ளப்படியே காட்சிப் படுத்தியுள்ளார். கடைசி மூன்று வரியே கவிதையாக்குகிறது. ஒரு கவிஞராக வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் ஒரு மனிதன் வாழும் போது சிறப்புச் செய்யாத உலகம் இறந்த பின் பெருமைச் செய்வதை பரிகாசம் செய்துள்ளார். பிணமே சிரிப்பதாக எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையே பேச வேண்டும், உண்மையாவே நடக்க வேண்டும் என்று பாடம் கற்பிக்கப்பட்டாலும் இன்று உண்மையின் நிலை மோசமாகவே உள்ளது. பொய்யே ஆட்சிச் செய்கிறது. பொய்யே எங்கும் வியாபித்திருக்கிறது.
என் உண்மைகள்
செத்துக் கிடந்தன
உன் பொய்களால்
பூக்கள் தூவினாய்
பூக்களின் அழகில்
பூரிக்கிறது உலகம்   
பொய்யாவே உலகம் போர்த்தப் பட்டுள்ளதைக் கூறியுள்ளார். உலகம் பூரிப்பதைக் கண்டு உள்ளம் வருந்தியுள்ளார்.
மக்கள் 'சாமி'யைத் தரிசிப்பதற்காக, வணங்குவதற்காக, வேண்டுவதற்காக, மன ஆறுதலுக்காக கோவிலுக்குச் செல்வது வழக்கம். நம்பிக்கையே முதற் காரணம். ஆனால் கோவில் வாசலில் இரப்பவர்கள் ஒரு நாளும் சாமியை வணங்கியதில்லை. அவர்கள் வணங்கும் சாமி 'ஆசாமி'யேயாவார்.
ஆலய வாசலில்
இரு மருங்கிலும்
வரிசையில்
அமர்ந்திருந்த
யாரொருவரும்
சாமி என்று
அழைக்கவேயில்லை. . . . . . . .
சாமியைப் பார்த்து   கொடுப்பவர் எவரோ அவரே 'சாமி' என்கிறார். அதனாலே சாமி என்று அழைக்கின்றனர். அவ்வாறு எனில் உள்ளே இருப்பது சாமியல்ல. 'அசாமி'யை விட 'ஆசாமி'யே மேல் என்கிறார்.
மரணம் நிகழ்வதற்கு பல காரணங்கள். வருந்தத்திற்குரியது எனினும் சில வேளைகளில் சில சூழலில் சங்கடமாகி விடுகிறது. உணர்வுடன் பங்கெடுப்பவர்கள் குறைவு. கடமையாகவே செய்கின்றனர். மழை நாளில் மரணம் ஏற்பட்டால் மக்களின் நிலை எவ்வாறிருக்கும் என ஒரு கவிதையில் விவாpத்துள்ளார்.
அனைவரையும்
பெரும் கவலைக்குள்ளாக்கியது
மழை
மறந்தே போனது மரணம்  
மரணத்தை விட மழையே மக்களுக்குப் பெருங்கவலையென எழுதியுள்ளார். மக்கள் மீதான கோபமும் வெளிப்பட்டுள்ளது. ஆனால் 'மழை'யை ரசிப்பிற்குரியது என்று ஒரு கவிதையில் ரசனையை வெளிப்படுத்தியுள்ளார். முரண்பட்டுள்ளார். பெய்ய வேண்டிய நேரத்தில், பெய்ய வேண்டிய இடத்தில் பெய்தாலே சிறப்பு என்கிறார்.
நவீனக் கவிஞர்களின் முன்னோடிகளில் ஒருவர் நகுலன். அவர் எழுதிய ஒரு முக்கிய கவிதை.
ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை  
இன்று வரை பேசப்படும் ஒரு கவிதை, எடுத்துக் காட்டப்படும் ஒரு கவிதையாக இது உள்ளது. இக்கவிதையின் சாயலிலேயே கவிஞர் எழுதியுள்ள ஒரு கவிதை
அது
எனக்கான வணக்கம் அல்ல
என்று தெரியும்.
ஆனாலும்
புன்னகைத்தேன்
வணங்கினேன்
கைக் குலுக்கினேன்
புன்னகையும்
வணக்கமும்
கைக் குலுக்கலும்
அவனுக்கானதல்ல என்று
அவனுக்கும் தெரியும்  
ஒருவருக்கு ஒருவர் தெரிந்தே ஏமாற்றுகிறார் என்கிறார். அல்லது தவிர்க்கப்படுகிறது என்கிறார்.
கவிஞர் தங்கம் மூர்த்தி ஒரு நல்ல ஹைக்கூவாளர். முதலில் பூத்த ரோஜாவை மீண்டும் பூக்கச் செய்தவர். இத்தொகுப்பிலும் சில ஹைக்கூக்கள் உள்ளன. அவைகளில் சில.
விவசாய நிலங்களில்
கல்லூரியை விதைக்கிறார்கள்
நல்ல அறுவடை
இரவின் வலிகளை
பொறுத்தால்தான்
பகலின் பிரசவம்
இரவுக் கூட்டுக்குள்ளே
நட்சத்திரக் குஞ்சுகள்
இரைதேடி அலையும் நிலா  
ஹைக்கூவானாலும் கவிதையானலும் கவிஞரின் கொள்கை மாறவில்லை. பாட வேண்டியதைப் பாடியுள்ளார். சாட வேண்டியதைச் சாடியுள்ளார்.
தீயோர்க்கு வாழ்வு நீடிக்கிறது
நல்லோர்க்கு மரணம் சமீபிக்கிறது
மற்றபடி அனைவருமே
மத்தியில் இருப்போரே   
ஒரு கருத்தாக உருப் பெற்றுள்ளது. வாழ்வின் தத்துவத்தை உணர்த்தியுள்ளது. நல்லவரோ கெட்டவரோ மரணம் பொது என்கிறார். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டதே வாழ்க்கை என்னும் உண்மையையும் குறிப்பட்டுள்ளார்.
துப்பரவு பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்ணைப் பற்றி ஒரு கவிதையில் எழுதியுள்ளார். துப்புரவு செய்யும் பெண்ணை 'குப்பைக் காரி'என மக்கள் குறிப்பிடுவது வழக்கம். துப்புரவாளியை 'குப்பைக் காரி' என்பதைக் கவி்ஞர் விரும்பவில்லை. குப்பைகளைச் சேர்ப்பவர் குப்பைக் காரியா அகற்றுபவர் குப்பைக் காரியா என்று வினாவை எழுப்பியுள்ளார். எல்லோருமே குப்பைக் காரர்கள்தான் என்கிறார்.
கவிதை உலகில் இடைவிடாது இயங்கிக் கொண்டிருப்பவர் தங்கம் மூர்த்தி. வாழ்வின் பல அணுபவங்களை, அம்சங்களைக் கவிதையாக்கியுள்ளார். ஒவ்வொன்றிலும் உணர்வும் உண்மையும் கவிதையும் இணைந்தே வெளிப்பட்டுள்ளது. சமுகத்தில் புரையோடிருக்கும் மூடநம்பிக்கைகளின் மீதான விமரிசனத்தையும் கவிதைகளில் காண முடிகிறது. அங்கதமும் ஆங்காங்கே முன்னிற்கிறது. புறத்துடன் அகத்தையும் சரிவிகிதத்தில் பாடி உள்ளார். தங்கம் மூர்த்திக்கு என்று தனிப் பாணி இருக்கிறது. இத் தொகுப்பிலுள்ள கவிதைகளும் அவரை அடையாளப் படுத்துகின்றன. எளிமையான மொழியில் கவிதைகள் இயற்றப்பட்டிருந்தாலும் எளிதில் வாசசனைக் கவரும் தன்மையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடப் பட வேண்டியதாக உள்ளது. அவர் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து மேலும் ஏராளக் கவிதைகள் உருவாக வேண்டும்.
நல்லவனென்று
நாலு பேர் சொல்ல
படாத பாடு
பட வேண்டியிருக்கிறது  
என்றொரு கவிதை எதார்த்தத்தைப் பிரதிபலித்துள்ளது. .
கவிஞனென்று
கவிதை உலகம் சொல்ல
எப்படி எல்லாம்
எழுத வேண்டியிருக்கிறது   என்று
எண்ண வைக்கிறது.
நல்லவனென்றும் கவிஞனென்றும் பெயர் எடுப்பது சிரமமே. ஆனால் இவர்கள் மறைந்தாலும் உலகம் போற்றும். போற்றும்படி வாழ்வதே கடமை.

No comments:

Post a Comment