காலத்தின் குரல் - தி.க.சி

தி.க.சிவசங்கரன் என்னும் தி.க.சி. முக்கால் நூற்றாண்டு காலமாக இலக்கியத் துறையில் இயங்கி வருகிறார். எழுத்தாளர் வல்லிக் கண்ணனைக் குருவாக ஏற்றுக் கொண்டு ஒரு கவிஞராக ஒரு கதைஞராக பயணத்தை தொடங்கி ஒரு திறனாய்வளராக கம்பீரமாக வலம் வந்தவர். திறனாய்வாளர் படைப்பாளி அல்ல என்னும் வாதத்தை முறியடித்து வெற்றிப் பெற்றவர், திறனாய்வும் விமரிசனமும் படைப்பு ஆகும் என்று நிரூபித்தவர். அவருடைய 'விமரிசனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்' என்னும் தொகுப்பே சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்தது.
'திறனாய்வுகள். விமரிசனங்கள், மதிப்புரைகளுக்கு'ஒரு மதிப்பை, மரியாதையைப் பெற்றுத் தந்தார். அஞ்சல் அட்டையிலும் எழுதி அனைவரையும் ஊக்குவித்து இலக்கியம் வளர வழிச் செய்தவர். 1999ஆம் ஆண்டு கணையாழி இதழில் தி.க.சி. எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து காலத்தின் குரலாக தொகுத்துத் தந்துள்ளார் வே.முத்துக் குமார்.
புதுமைப் பித்தன், சி. சு. செல்லப்பா, தகழி, வெ. சாமி நாத சர்மா, கே. சி, எஸ். அருணாசலம், கல்கி ரா. கிருஷ்ண முர்த்தி, டி. எஸ். சொக்கலிங்கம், கா. ஸ்ரீஸ்ரீசீனவாச ஆச்சார்யா, சரஸ்வதி
ராம்நாத், பேராசிரியர் கா. சிவத் தம்பி ஆகியோர் பற்றியும் அவர்தம் படைப்பு குறித்தும் பேசப் பட்டுள்ளன.
சிறுகதைகள் மூலம் இலக்கியத் துறையில் முக்கிய இடத்தில் இருப்பவர் புதுமைப் பித்தன். புதுமைப் பித்தனைப் பின் பற்றுவோரும் உண்டு. மாற்றுப் பாதையில் செல்வோரும் உண்டு என்கிறார். புதுமைப் பித்தனுக்குக் குரு கிடையாது. 'தினமணி'யிலிருந்து விலகி 'தினசரி'யில் பணியாற்றி திரைத் துறைக்கும் சென்று வெற்றிப் பெற முடிய வில்லை என்கிறார். 'மணிக் கொடி'யைத் தோற்கடிக்க 'சோதனை'யைத் தொடங்கிய சோதனை முயற்சியிலும் தோல்வியையே சந்திததுள்ளார். புதுமைப் பித்தனின் இத் தோல்வி இலக்கியத்திற்கும் தோல்வியே என்று வருந்துகிறார். எழுதியதற்கு வரவேற்பும் கிட்டியது எதிர்ப்பும் ஏற்பட்டது என்கிறார்.
புதுமைப் பித்தனே மணிக் கொடி எழுத்தாளர்களில் சிகரத்தில் நிற்பவர் என்று நினைவுக் கூரும் போது கல்கியும் நினைவிற்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார், இருவரும் பாரதியின் வழித் தோன்றல்கள் என்று கூறும் தி.க.சி. யும் பாரதியால் ஈர்க்கப் பட்டவர் ஆவார். தமிழ் மறுமலர்ச்சி இலக்கியம் படைத்து தம்மை அரப்பணித்துக் கொண்டவர்கள் என்று இருவரையும் புகழந்துள்ளார். இருவரின் பல்வேறு இலக்கியப் பணிகளையும் ஒப்பிட்டுள்ளார்.
கல்கியை ஒரு படைப்பாளராக காட்டியவர் ஓர் இதழாசியராகவும் காட்டியுள்ளார். ஓர் எழுத்தாளர் பத்திரிக்கை நடத்துவதற்கும் ஒரு முதலாளி பத்திரிக்கை நடத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது என்கிறார். கல்கி ஓர் எழுத்தாளர். முதலாளித்துவம் நன்மைப் பயக்காது என்கிறார். கல்கியைப் போலவே மற்றோர் ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம். இருவரும் நாடு, மொழி, இனம் காப்பதில் ஒத்த கருத்துடையவர்கள் என்று போற்றியுள்ளார்.
எழுத்து உலகில் 'எழுத்து' மூலம் புதுமையசை செய்தவர் சி. சு. செல்லப்பா. ஒரு சுதந்திர போராட்ட வீரராக விளங்கியதுடன் ஓர் எழுத்து வீரராகவும் விளங்கியவர் சி. சு. செ. என்கிறார் தி.க.சி. அவருடைய அச்சேறாத படைப்புக்களைத் தொகுப்பாக்குவது நல்லது என்று வேண்டு கோள் விடுத்துள்ளார். "செல்லப்பா மறைவு. இலக்கியத்திற்கு பெரும் இழப்பு" என்பதன் மூலம் செல்லப்பாவின் மீதான அன்பையும் இலக்கியத்தின் மீதான அக்கறையையும் ஒரு சேர வெளிப் படுத்தியுள்ளார். 37 ஆண்டுகளில் 108 சிறுகதைகள் எழுதியவர் என்றாலும் விமரிசனமும் சிறுகதையும் அவரை ஆக்கிரமித்துக் கொண்டன என்கிறhர், அவரின் 1700 பக்கங்கள் கொண்ட 'சுதந்திர தாகம் ' என்னும் நாவல் மாபெரும் சாதனை என்று போற்றுகிறார். சி. சு. செ. வை நண்பர் என பெருமையுடன் கூறிக் கொள்கிறார். படைப்பாளி, பத்திரிக்கையாளர், வெளியீட்டாளர் என மூன்று நிலைகளில் சி. சு. செல்லப்பாவை அறியச் செய்துள்ளார். சி. சு. செல்லப்பாவும் ஒரு பாரதி பற்றhளரே என்கிறார். சி. சு. செ. குறித்து வல்லிக் கண்ணன். ராஜமார்த்தாண்டன், கி. அ. சச்சிதானந்தம் ஆகியோர் கணையாழி அக்டோபர் 1999 இதழில் எழுதிய கட்டுரைகள் 'இலக்கிய வரலாற்றின் ஆவணம்' என்கிறார். செல்லப்பாவின் திறனாய்வு முறையை பகுப்பாய்வு முறை என்று வகைப் படுத்தியுள்ளார்.
தி.க.சி. என்னும் இலக்கியவாதி உருவாக வல்லிக் கண்ணனே காரணம் என்று அவரே குறிப்பிட்டுள்ளார். புதுமைப் பித்தன், ந. சிதம்பர சுப்ரமணியன், சி. சு. செல்லப்பா, பி. எஸ். ராமையா, ந. பிச்சமூர்த்தி, குப. ரா. மௌனி, சிட்டி, எம். வி. வெங்கடராம், ஆர். சண்முக சுந்தரம், லா.ச.ரா. ஆகியோரை அடையாளம் காட்டடியவரும் வல்லிக் கண்ணனே என்கிறார். 1942ஆம் ஆண்டு பிரசண்ட விகடனில் முதல் சிறுகதை வெளியானதும் வல்லிக்கண்ணனாலே என்று நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.
தகழி சிவசங்கரன் பிள்ளை ஒரு மாபெரும் மலையாள எழுத்தாளர். மலையாள இலக்கியத்தில் மகுடம் சூட்டியவர். அவரின் மரணத்தை முன் வைத்து அவரின் படைப்புலகை விவரித்துள்ளார். 'இந்திய இலக்கிய வானின் விண்மீன் வீழ்ந்தது' என்று அஞ்சலி செலுத்தியுள்ளார். தகழியின் 77 படைப்புகளில் தோட்டியின் மகன் மற்றும் செம்மீன் ஆகிய நாவல்களை சுந்தர ராம சாமியும் வெள்ளப் பெருக்கு சிறுகதையை நீலபத்மநாபனும் மொழிபெயர்த்துள்ளனர் என்கிறார். இன்னும் சில மொழி பெயர்ப்புகளும் இருக்கலாம் என்கிறார். முற்போக்குக் கருத்துக்களே தகழியின் படைப்புகளில் உள்ளன என்கிறார். அவர் சர்வதேச அங்கீகாரம் பெற்றதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். ஒரு தமிழ் இலக்கிய வாதியாக இருந்தும் பிற மொழி எழுத்தாளர்களைக் குறித்தும் அறிந்து வைத்திருப்பது பாராட்டுக்குரியது.
எழுத்தாளர் வெ. சாமி நாத சர்மாவின் நூல்கள் எதிர் காலத்தில் நாட்டுடைமையாக்கப் படும் என அறிவிக்கப் பட்டதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் அவரைப் பற்றி எழுதி விரைவில் நாட்டுடைமையாக்கப் பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மணிக் கொடியின் மூலவரான வ. ரா. வின் சமகாலத்தவர் என்றும் அவரைப் போலவே தமிழ் உரைநடையை ஆற்றலுடன் வளப்படுத்தியவர் என்று அடையாளப் படுத்தியுள்ளார்.
சின்ன சின்ன மூக்குத்தியாம் சிவப்பு கல்லு மூக்குத்தியாம் என்னும் திரைப் பட பாடலிலும் சிவப்பு சிந்தனையை வெளிப் படுத்தியவர் கே. சி. எஸ். அருணாசலம். கவிதையைப் போர் வாள்
என்னும் அந்தஸ்த்துக்கு உயர்த்தியவர். கவிஞரின் மரணம் குறித்து ஊடகங்கள் கவனம் செலுத்தாதது குறித்து வருந்தியுள்ளார். திரைப் படத்தார் இறந்தால் தலைப்புச் செய்தியாக வெளியிடும் செய்தித் தாள்களைக் கண்டித்துள்ளார். ஒரு திரைத் துறையினருக்குத் தரும் முன்னுரிமையை ஊடகங்கள் தருவதில்லை என்பது கவி்ஞரின் குற்றச் சாட்டு. இலக்கிய வாதிகளுக்காக பரிந்துரைத்துள்ளார்.
படைப்புகள் வாயிலாகவும் மொழி பெயர்ப்பு மூலமாகவும் தமிழுக்கு வளம் சேர்த்த கா. ஸ்ரீ. ஸ்ரீனிவாச ஆச்சார்யா மற்றும் சரஸ்வதி ராம்நாத் ஆகிய இருவரின் மரணித்ததை வைத்து அவர்களை பதிவு செய்துள்ளார். அவர்களுடனான தொடர்பை வெளிப் படுத்தியுள்ளார், தமிழில் இருந்து பிற மொழிக்கும் பிறவற்றிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்த்தாலும் இந்தியை விடத் தமிழே சிறந்தது என்று கா. ஸ்ரீ. ஸ்ரீ. கூறியதைக் குறிப்பிட்டுள்ளார். சரஸ்வதி ராம்நாத் ஒரு பெயர்ப்பாளர் மட்டுமல்ல மனித நேயத்துடன் ஏடுகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் உதவியவர் என்கிறார்.
தமிழநாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க வெள்ளி விழா மாநாட்டில் பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆற்றிய உரை கணையாழியில் வெளியாகியுள்ளது. இக் கட்டுரைக்கு எதிர் வினையாற்றியுள்ளனர் பேராசியர் தமிழவன் மற்றும் பொ. வேலுச் சாமி. விவாதத்தில் ஆணவமும் மேட்டிமையும் குறுங்குழு வாதமும் கூடாது என்று வாதிடுகிறார். பின் நவீனத்துவ சிந்தனை மரபை மறுத்துள்ளார். அது நவீன முதலாளித்துவத்தை ஆதரிக்கிறது என்று வெளிச்சப் படுத்துகிறார். கா. சிவத்தம்பியின் கருத்துக்கு ஆதரவளித்துள்ளார்.
இதழ்களில் சிற்றேடு, வணிக ஏடு என இரண்டு வகையுள்ளன. இலக்கியம் மற்றும் இலக்கியம் சார்ந்து இயங்குபவை சிற்றேடு ஆகும், பல் சுவை என ஜனரஞசகமான செய்திகளை வெளியிடுவது வணிக ஏடு ஆகும். இவை இரண்டுக்கும் இடைப் பட்ட ஏடாக வந்த ஏடு 'சுபமங்களா' என்கிறார். அதன் ஆசிரியர் கோமலின் மறைவுடன் நின்று விட்டதற்காக கவலைப் பட்டுள்ளார். இதன் மரபிலேயே தமிழ் இலக்கியம் வளர வேண்டும் என்று ஆசைப் பட்டுள்ளார்.
காலத்தின் குரலாக ஒலித்துள்ள தி.க.சி.யின் கட்டுரைகள் மூத்த எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்தம் படைப்பு குறித்தும் இலக்குப் பற்றியம் போக்குப் பற்றியும் கட்டுரைகள் மூலம் அறியச் செய்துள்ளார். எழுத்தாளர்களைப் பற்றிய தி.க.சி. யின் மதிப்பீடுகள் சரியாகவே உள்ளது என்பதுடன் அவர்கள் மீது தி.க.சி. கொண்டுள்ள அன்பையம் மதிப்பையும் உணர முடிகிறது.
தி.க.சி. பேசிய எழுத்தாளர்கள் பற்றி அறியும் போது தி.க.சி. யின் சிந்தனையுடன் ஒத்துப் போகிறது என்பதையும் காண முடிகிறது. எழுத்து என்பது மக்களுக்காக என்பதிலும் எழுத்தாளன் என்பவன் மக்களுக்காக எழுதுவது என்பதிலும் தி.க.சி. உறுதியானவர் என்பதைத் தொகுப்பு உறுதிப் படுத்துகிறது, எழுத்தாளர்களுடன், இலக்கியவாதிகளுடன், இதழாசிரியர்களுடன் தி.க.சி. கொண்டிருந்த நட்புக்கும் உறவுக்கும் தொடர்புக்கும் இத் தொகுப்பு ஒரு சான்று. பனிரெண்டு மாதங்களோடு கட்டுரை நின்று போனது வருத்தமளிக்கிறது. தொடர்ந்திருந்தால் இலக்கியவாதிகள் குறித்த எராளமான தரவுகள், தகவல்கள் கிடைத்திருக்கும். தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளை எழுத வேண்டும். ஒரு நல்ல திறனாய்வளரக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் தி.க.சி. ஒரு நல்ல கட்டுரையாளர் என்னும் நிலையை எட்டியுள்ளார். கட்டுரைகள் வெளியிட்ட கணையாழி இதழுக்கும் காரணமாக இருந்த கவிஞர் யுக பாரதிக்கும் தொகுத்து தொகுப்பாக்கித் தந்ந வே. முத்துக் குமாருக்கும் நன்றிக் கூறுவது இலக்கியத்திற்குச் செய்யும் கடமையாகும்.

No comments:

Post a Comment