|
பொன். குமார்
இலக்கிய உலகில் ஐபதாண்டுகளுக்கு மேலாக இயங்கி வருபவர் ஈரோடு. தமிழன்பன். சிறந்த கவிஞர் நல்ல கவியரங்கர். வள்ளுவனை வணங்குபவர். பாரதிதாசனை போற்றுபவர். பாப்லோ நெருடாவை பின்பற்றுபவர். வானம்பாடிகளில் வித்தியாசமானவர். மரபில் தொடங்கி புதிது. ஹைக்கூ, சென்ரியு, லிமெரைக்கூ என புதிய வடிவங்களில் ஈடுபாடு கொண்டு புதுமைச் செய்பவர். சோதனைக்காரர் `ஒருவண்டி சென்ரியூ' என்று `தமிழின் முதல் சென்ரியூ தொகுப்பு' தந்தவர். `சென்னிமலைக் க்ளியோபாத்ராக்கள்' என்னும் `தமிழில் முதல் லிமரைக்கூ நூல்' கொடுத்தவர்.
இப்பரிசோதனை முயற்சியின் தொடர்ச்சியாய் தற்போது கவிஞர் அளித்து இருக்கும் தொகுப்பு `கனாக்கானும் வினாக்கள்' இதில் ஒவ்வொரு கவிதையும் வினாவாகவே முடிகிறது. இது பாப்லோ நெருடாவின் வடிவம். அவரின் `வினாக்களின் நூல் (Book of Question) என்னு தொகுப்பைப் பின்னொட்டி அவர் நூற்றாண்டு விழா நினைவாக தந்திட்ட நூல் `கேள்விகளால் ஒரு முதல் தமிழ்க் கவிதை நூல்' என்னு முத்திரையுடன் வெளிவந்துள்ளது. வித்தியாசமானது, விவாதத்துக்கானது. விமரிசனத்திற்குரியது, வரவேற்புக்குரியது, வரலாறு படைக்கும் வல்லமை மிக்கது. இத் தொகுப்புக்கு கோவை ஞானியின் முன்னுரை நெடியது நேர்த்தியானது. பல சேர்ப்பது. தொகுப்பு குறித்து ஒரு புரிதலை ஏற்படுத்தியது. ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்தது.
"தப்பான விடையை எதிர்பார்த்தா வாழ்க்கை எப்போதும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது'' என்னு முதல் கவிதையே சிந்தனையை உண்டு பண்ணுகிறது. எளிமையாகவே புனைந்து இதயத்தை கிளறச் செய்துள்ளார். கவிதை வினாவில் முடிகிறது எனினும் கவிதையிலே `கேள்வி' யும் உள்ள இத்தொகுப்பில் கவிதை குறித்த கவிதைகள் ஏராளமாயுள்ளன.
வால்ட் விட்மன் எழுதியது `புல்லின் இதழ்கள்' இதை கருத்தில் கொண்டு கவிஞர் கொடுத்த வினா
"விட்மனைத் தெரிந்தால், புல்லுக்கும் புதுக்கவிதைகள் புரியுமோ? _என்பது முடிவில் இருந்து தொடங்கியுள்ளார். வால்ட் விட்மன் போலவே தாகூர் குறித்து வள்ளுவர் பற்றியும் கம்மபன் குறித்தும் பாரதி தொடர்பாகவும் எழுதியுள்ளார். இதில் படைப்பாளிகளை பெருமைப்படுத்தியுள்ளார்.
"காற்றுக்குச் சந்தேகம் வந்தால்
மரத்தை ஏன் இப்படிப் பிடித்து ஆட்ட வேண்டும்?'' என வினவியுள்ளார். எவ்வாறு கவிஞரால் இப்படியெல்லாம் கற்பனைக்க முடிகிறது என்னு சந்தேகம் எழுகிறது. இக்கவிதையில் காற்று சந்தேகப்படும் கணவனுக்கு மரம் மனைவிக்கும் குறியீடாகவும் உள்ளன. கவிஞர் ஈரோடு தமிழன்பன் குறியீடு படிமங்களை கையாள்வதில் சமர்த்தர் என அவரின் முந்தைய தொகுப்புகள் பறை சாற்றுகின்றன.
"கடவுளின் கவிதையில் எழுத்துப் பிழைகளாகவா இம்மனிதர்கள்?'' என்று கவிஞரே எழுதியது நினைவுக்கூறத்தக்கது. இங்கும் கடவுளையே குற்றஞ் சாட்டியுள்ளார். எழுத்துப் பிழைகளானதற்கு எழுதியவன்தானே பொறுப்பு? இவ்வினாவிற்கு
"கடவுளுக்கு முடி நரைத்த பிறகாவது தெரியுமா மனிதனைப் படைத்ததில் உள்ள தவறு?''
என கவிஞர் தொடுத்த இன்னொரு வினாவே விடை இவ்வாறு தொகுப்பை முழுமையாக ஆய்ந்தால் ஒவ்வொரு வினாவிற்கும் விடையாக ஏதாவதொரு வினா இருக்கும். ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு வினா என்னும் அடிப்படையிலேயே எழுதப்பட்டிருந்தாலும் சில கவிதைகளில் இரண்டு மூன்று வினாக்களும் உள்ளன.
"ஒரு சொட்டு மழை தயாரிக்க ஆகாயம் எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு?'' என்பது பன்முகத் தன்மையாயுள்ளது. இயற்கைச் சார்ந்த இனிய கவிதை.
"பாப்லோ நெரூடா நூற்றாண்டு விழா தொடங்கியுள்ள இவ்வேளையில் தமிழில் இவ்வகைமைக் கவிதையை இயற்றி அறிமுகம் செய்ய நான் அலாவியதன் விளைவே இந்நூல். நெருடாவின் இரண்டொரு பாடு பொருள்களை நான் தொட்டுக்கிறேன்'' என என்னுரையில் எழுதிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் பாப்லோ நெருடாவையே பாடுபொருளாக்கித் தந்துள்ளார்.
"சிலி மக்களின் உணவில் உப்புக்கு பதிலாக நெரூடா கவிதைகளா?'' என்பது கவிஞர் நெரூடாவின் மீது வைத்துள்ள மதிப்பீடுகளின் வெளிப்பாடுகள்.
வினா என்பது வாழ்வின் தேடலுக்கான வழி. வினா எழுப்பாமல் எவரும் வாழ்வதில்லை. வினாக்களே வாழ்க்கையை வழி நடத்திச் செல்கின்றன. வினாக்களைத் தொடுத்துக் கொண்டே போகலாம். விடை இருக்கிறதோ இல்லையோ வினாக்கள் தொடரும், சில வேளை வினாக்களே விடையாகி விடும். கவிஞர் ஈரோடு தமிழன்பனின் `கனாக் காணும் வினாக்கள்' தொகுதியிலுள்ள ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு வினா. சில சிந்திக்க வைக்கின்றன. சில தத்துவம் பேசுகின்றன. சில திகைக்க வைக்கின்றன. சில நகைக்க வைக்கின்றன. சில பகுத்தறிவு உரைக்கின்றன. நெடிய அனுபவமிக்க கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிதைகளின் அனைத்து நுட்பங்களையும் அறிந்தவர். கவிதைகளில் பயன்படுத்தியவர்
‘கனாக் காணும் வினாக்கள்’ என்னும் இத்தொகுதியிலும் ஒரு புதிய யுத்தியைக் கையாண்டு தொடங்கி வைத்துள்ளார். முடிவில் வினவுவதெல்லாம் கவிதையாகுமா என்றொரு வினா விமர்சிகர்களிடையே உண்டு. கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஒவ்வொரு வினாவையும் கவிதையாக்கி அவ்வினாவை உடைத்துள்ளார். வரலாறு படைத்துள்ளார். ஆனாலும் ஓரிடத்தில் வினா என்கிறார், பிறிதோறிடத்தில் கேள்வி என்கிறோர் பாவலர் கருமலைக் தமிழாழன். (ஆதாரம் - மரபின்வேர்கள்) ஓர் அசாதரணனின் சாதாரணங்களாகவேப் படுகின்றன கவிஞர் ஈரோடு தமிழன்பனின் ‘கனாக் காணும் வினாக்கள்’. இவ்வடிவம் மூலம் கவிஞர் வெற்றிப் பெற்றுள்ளார். ஆனால் இவ்வடிவத்தின் வெற்றி, கவிஞர்கள் பின்பற்றப்படுவதிலேயே உள்ளது.
No comments:
Post a Comment